கேரியரின் உச்சத்தையும் விட்டுட்டு.. உழைச்சு உழைச்சு மேலவந்தவன்.. கூத்தாடிதாங்க.. அவமானங்களைப் பகிர்ந்த விஜய்
கேரியரின் உச்சத்தையும் விட்டுட்டு.. உழைச்சு உழைச்சு மேலவந்தவன்.. கூத்தாடிதாங்க.. அவமானங்களைப் பகிர்ந்த விஜய்
கேரியரின் உச்சத்தையும் விட்டுட்டு, உழைச்சு உழைச்சு மேலவந்தவன் நான் என நடிகர் விஜய் தான் பட்ட அவமானங்களை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘’ இப்ப நீங்கப் பார்க்கப்போறது உங்களோட இதயத்தோட பேசுற உங்கள் விஜய். என்ன தான் நீங்க ஆசையாக தளபதின்னு கூப்பிட்டாலும் கூத்தாடின்னு கூத்தாடின்னு சொல்றாங்களே அந்த விஜய் தான் பேசப்போறேன்.
கூத்து மண்ணோடும் மக்களோடும் கலந்த ஒன்று. இந்த கூத்தாடிங்கிற பெயருக்கு வந்ததில்லைங்க. அன்னிக்கு நம்ம தமிழ்நாட்டில் நம்ம ஊர் வாத்தியார் எம்.ஜி.ஆரையும் ஆந்திராவில் அவங்க ஊர் வாத்தியார் என்.டி.ஆரையும் அவங்க கட்சி ஆரம்பிச்சபோதும் கூத்தாடி கூத்தாடின்னு தான் கூப்பாடு போட்டாங்க. அவங்களையே அப்படி கூப்பிடும்போது, நம்மளை அப்படி கூப்பிடாமலா இருப்பாங்க. அந்த இரண்டு கூத்தாடிகள் தாங்க, இரண்டு மாநிலத்தின் ஆகப்பெரும் தலைவர்களாகி நீங்காப் புகழோடு வாழ்ந்தவங்க.
சினிமான்னா வெறும் பாட்டு ஃபைட்டு, காமெடி என்டெர்டெயின்மென்ட் மட்டும் தானா? நம்முடைய கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு எல்லாம் சேர்ந்தது தாங்க சினிமா. பொழுதுபோக்கினைத் தாண்டி சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய கருவி தாங்க சினிமா.
திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு உதவிய சினிமா:
திராவிட இயக்கம் பட்டித்தொட்டியெல்லாம் போய் ரீச் ஆனதே சினிமாவை வைச்சுதாங்க. கூத்தாடின்னா கேவலமான பெயரா, இல்லை கெட்ட வார்த்தையா.. கூத்து சாதாரண வார்த்தையே இல்லை. கூத்து சத்தியத்தைப் பேசும், சாத்தியத்தைப்பேசும், கொள்கையைப்பேசும், அநீதியைப் பேசும், சோகத்தைப்பேசும், கோபத்தைப் பேசும், நல்லதைப் பேசும், உள்ளதைப்பேசும், உணர்வோடு பேசும், இது எல்லாத்தையும் கொஞ்சம்கூட சோர்வில்லாமல் கொண்டாட்டமாகப்பேசும்.
கூத்து ஒரு கொண்டாட்டம் என்றால், அந்த கூத்தாடி ஒரு குறியீடு. கூத்தாடி உள்ள இருக்கிற சோகத்தை யாராலும் புரிஞ்சுக்கவும் முடியாது; தெரிஞ்சுக்கவும் முடியாது. அவனுக்குள்ள இருக்கிற கோபம் கொந்தளிச்சது என்றால் யாராலும் கட்டுப்படுத்தவும் முடியாது.
அவன் நினைச்சதை செஞ்சு முடிக்கிற வரைக்கும் நெருப்புமாதிரி தான் இருப்பான். அதனால் தான் குறியீடாக மாறிய கூத்தாடியைப் பார்த்தால் மக்கள் கூட்டம் கைத்தட்டும். கண்கலங்கும். காரணம் வேறு ஒன்னும் இல்லை, அவன் நம்மள மாதிரியே இருக்கானே, நாம நினைச்சதைப் பேசுறானே, அந்த கனெக்ட் தான் கூத்தாடியை மக்கள் கொண்டாடக் காரணம். அன்னிக்கு கூத்து; இன்னிக்கு சினிமா அவ்வளவு தான்.
ஆரம்பத்தில் என்னை எப்படி அசிங்கப்படுத்துனாங்க: விஜய்
ஆரம்பத்தில் நாமளும் இந்த சினிமாவுக்குள்ள வந்தப்போ மூஞ்சி சரியில்லை, ஆளு சரியில்லை, முடி சரியில்லை, நட சரியில்லை இப்படியெல்லாம் அசிங்கப்படுத்துனாங்க. அவமானப்படுத்துனாங்க. ஆனால், கொஞ்சம் கூட கலங்காமல் ஒவ்வொரு வாய்ப்புக்காகவும் ஒவ்வொரு சூழலுக்காகவும் சுத்தி சுத்தி சுழன்று சுழன்று உழைச்சு மேல வந்தவன் தான் இந்தக் கூத்தாடி.
அப்பகூட உழைப்புமட்டும் தான் என்னோடது. அதன்மூலமாக எனக்குக் கிடைச்ச மத்த எல்லாத்துக்கும் காரணம் நான் இல்லை. (நீங்க தான் என கைகளை அகல விரித்துக் காட்டுகிறார்). ஒவ்வொரு கட்டத்திலேயும் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ட்ரான்ஸ்பெர்மேஷன் வரும்பாருங்க. சாதாரண இளைஞராக இருந்த விஜய் நடிகனாக மாறினான். அந்த நடிகன் வெற்றிபெற்ற நடிகனாக மாறினான். அந்த வெற்றிபெற்ற நடிகன் ஒரு பொறுப்புள்ள மனிதனாக மாறினான். அந்தப் பொறுப்புள்ள மனிதன் தொண்டனாக மாறினான். இன்னிக்குப் பொறுப்புள்ள தொண்டனாக இருப்பவன், நாளைக்கு.. அதை நான் சொல்லத் தேவையில்லை.
ஒவ்வொரு கட்டத்திலேயும் ட்ரான்ஸ்பெர்மேஷனில் மாறினது என்னவோ நான் தாங்க. மாத்துனது நீங்க தான். மக்கள் தான். என் பொறுப்பு என்ன தீர்மானிச்சது நீங்கள் தான். என்கிட்ட இருக்கிறது உண்மை, நேர்மை, உழைப்பு அவ்வளவுதாங்க. இப்ப அரசியல் களத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்க. எப்போதும் உழைப்பேன். ஓய்வில்லாமல் அலட்டிக்காம உழைப்பேன். அதற்கான ஒவ்வொருத்தவங்களுடைய ரிசல்ட்டும் உங்களுடைய கை விரலில் இருக்கும்போது எனக்கு என்னங்க கவலை.
எல்லாமுமே நல்லாவே வொர்க் அவுட் ஆகும் பாருங்க. தேர்தல் அரசியலில் ஜெயிச்சவங்க தோத்தவங்க அத்தனைபேருடையதையும் பாடமாகப் படிச்சிட்டு, ஊக்கமாகவும் உந்துதலாகவும் எடுத்துக்கிட்டு என்னோட கேரியரின் உச்சத்தை உதறிட்டு, அந்த ஊதியத்தை உதறிட்டு, உங்களோட விஜயா, உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன். நம்பிநடப்போம். நம்பிக்கையோடு நடப்போம். தமிழக வெற்றிக்கழகம் தமிழக அரசியலில் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் மாறி, அத்தனை அரசியல் அலுக்குகளையும் அடித்து துவைத்து நீக்கும். அதைத் தீர்மானிக்கட்டும் எங்கள் போக்கும், உங்கள் வாக்கும். நீங்கள் தான் எனக்கு எல்லாமுமே. மாநாடு முடிஞ்சு ஊருக்குப்போகும்போது பார்த்து பத்திரமாகப் போய்ட்டு வந்திருங்க. அடுத்த காலங்களிலும் அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் சந்திப்போம்’’ என விஜய் பேசியிருந்தார்.