Oru Viral Krishna Rao: காமெடி போலீஸ், வில்லன்..கவுண்டமணியின் பேவரிட் காம்போ - பன்முக தன்மை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்
காமெடி போலீஸ், குணச்சித்திரம், காமெடி வில்லன், கவுண்டமணியின் பேவரிட் காம்போ என பன்முக தன்மையுடன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென தனியொரு இடம்பிடித்தவர் ஒரு விரல் கிருஷ்ணாராவ்.
தமிழ் சினிமாவில் புனைப்பெயருடன் இருக்கும் நடிகர்கள் ஏராளம். இந்த பெயர் அந்த நடிகர்கள் நடித்த முதல் படம் அல்லது அவர்கள் மீது கவனத்தை ஈர்த்து திருப்புமுனை ஏற்படுத்தியதன் மூலம் அந்த புனை பெயர்களும் அவர்களுடன் ஒட்டிக்கொள்கிறகு.
அப்படித்தான் ஒரு விரல் என்ற படத்தில் குறுகிய காட்சிகளில் தோன்றினாலும் தனது அப்பாவி தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த கிருஷ்ணா ராவ், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் ஆக திரையுலகில் மாறியுள்ளார்.
திரைப்பயணம்
ஒரு விரல் என்ற த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கிருஷ்ணா ராவ். இதுதான் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கும் முதல் படம். படத்தில் இவர அண்ணனாகவும், தேங்காய் சீனிவாசன் தம்பியாகவும் நடித்திருப்பார்கள்.
கொலை ஒன்றுக்கு க்ளூவாக கிடைக்கும் ஒரு விரலின் எலும்பு துண்டை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் இந்த படம் அமைந்திருக்கும். முதல் படம் என்ற சுவடே தெரியாமல் தேர்ந்த நடிகர் போல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நுழைந்தார்.
அப்போது முதல் காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் கலந்த காமெடி, மோசடி பேர்வழி பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரது திரைப்பயணமும் மேடை நாடகத்தில் இருந்த தொடங்கியுள்ளது. அத்துடன் சினிமாவில் நடிப்பதை மட்டுமே தனது உயிர் மூச்சாக கொண்ட நடிகராக இருந்துள்ளார்.
கவுண்டமணியுடன் காம்போ
கவுண்டமணி - செந்தில் ஆகியோர் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை காம்போ உலகறிந்த விஷயம். பல படங்களில் செந்தில் இல்லாத குறையையும், அவருக்கான சிறந்த ஆல்டர்நேட்டாகவும் பல படங்களில் தோன்றும் துணை காமெடியன் வேடத்தில் நடிப்பவர்களில் ஒரு விரல் கிருஷ்ணாராவ் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார்.
பல படங்களில் கவுண்டமணியின் மாமனார் வேடத்தில் தோன்றி பல்பு வாங்குவதும், அவரது டைமிங் ட்ரோலில் சிக்குவதுமாக இருந்துள்ளார். அதேபோல் சில படங்களில் கவுண்டமணிக்கு அல்வா கொடுக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
வரவு எட்டனா செலவு பத்தனா படத்தில் அரசியல் வாதியாக வரும் கவுண்டமணி, ஹவுஸ் ஓனராக வரும் கிருஷ்ணா ராவ்க்கு போன் ரிசிவரை எடுக்காமல் ஜாடை மாடையாக மிரட்டல் விடுக்கும் காட்சி வெறும் முகபாவனையாலே வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.
பொறந்த வீடா புகுந்த வீடா படத்தில் கவுண்டமணியை ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வைத்து கலகலப்பூட்டியிருப்பார்.
காமெடி போலீஸ்
ஆரம்ப காலகட்டத்தில் போலீஸ் வேடங்களில் பல படங்களில் நடித்த இவர், அந்த கதாபாத்திரத்துக்கான ஆளாகவே மாறிவிட பின்னர் காமெடி போலீசாகவும் ஏராளமான படங்களில் தோன்றியிருப்பார்.
பிரதான காமெடியான இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் நடிகராகவும், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், திருப்புமுனை தரும் வேடங்களிலும் தோன்றி அப்பலாஸ் வாங்கியிருப்பார். காமெடி நடிகர்களிலும் விவேக், வடிவேலு ஆகியோருடன் இணைந்தும் பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசி படம்
கடைசியாக இவர் விவேக்குடன் இணைந்து உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் வேலையில்லாத முதியவராக தோன்றி காமெடியில் அதகளம் செய்திருப்பார். வீட்டில் இருக்கும்போது வழுக்கி கீழே விழுந்ததால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணா ராவ், சிகிச்சை பலனின்றி 2002ஆம் ஆண்டில் உயிரிழ்ந்தார்.
2022இல் சத்யராஜ், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷங்கள் படத்தில் இவரது போட்டோ பயன்படுத்தப்பட்டிருக்கும்.
தமிழ், தெலுங்கு என 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ணா ராவ்க்கு, தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்துள்ளது. பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் பன்முக தன்மையுடன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென தனியொரு இடம்பிடித்த ஒரு விரல் கிருஷ்ணா ராவ் நினைவு நாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்