வணக்கம் சென்னையின் ஃபீல் குட் காதல், நய்யாண்டி படத்தின் கலாய்ப்பு.. இன்றைய நாளில் வெளியான படங்கள்
Films Released Today: வணக்கம் சென்னையின் ஃபீல் குட் காதல், நய்யாண்டி படத்தின் கலாய்ப்பு.. இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்ப்போம்.
அக்டோபர் 11ஆம் தேதியான இன்று நய்யாண்டி, வணக்கம் சென்னை, கெட்டிமேளம், அந்த நாள், வாசலில் ஒரு வெண்ணிலா ஆகியப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்கள் குறித்துப் பார்ப்போம்.
நய்யாண்டி: களவாணி திரைப்படப் புகழ் இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நஸ்ரியா நஸீம் ஆகியோர் இணைந்து கதையின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, 2013ஆம் ஆண்டு, அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், நய்யாண்டி. இப்படத்தில் தனுஷின் அண்ணன்களாக ஸ்ரீமனும், சத்யாவும் நடித்திருந்தனர். இப்படத்தில் குத்துவிளக்கு கடை உரிமையாளரின் மூன்றாவது மற்றும் கடைசி மகன் சின்ன வாண்டுவுக்கும், பல் மருத்துவம் படிக்கும் வனரோஜாவுக்கும் காதல் வந்துவிடுகிறது. சின்ன வாண்டு, வனரோஜாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து யாருமில்லாத அநாதை என்று சொல்லி அவர்களது வீட்டில் சேர்த்துக்கொள்ள வைக்கிறார். கடைசியில் வனரோஜா எப்படி சின்ன வாண்டுவுடன் அனைவரின் சம்மதத்துடன் ஜோடி சேர்ந்தார் என்பதுதான் மீதிக்கதை. சின்னவாண்டுவாக தனுஷும், வனரோஜாவாக நஸ்ரியாவும் நடித்திருந்தனர். டிவியில் அடிக்கடி ஒளிப்பரப்பாகும் இந்தப் படம், குடும்பத்துடன் பார்க்கும் சலிக்காத வகையிலானது. ஆனால், படம் வெளியானபோது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
வணக்கம் சென்னை:
சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து 2013ஆம் ஆண்டு, அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், வணக்கம் சென்னை. இப்படத்தை இயக்கி முதன்முறையாக அறிமுக இயக்குநராக அறிமுகம் ஆனார், கிருத்திகா உதயநிதி. இப்படத்தின் கதைப்படி, தேனியில் இருந்து சென்னை வரும் அஜயையும், லண்டனில் இருந்து சென்னை வரும் அஞ்சலியையும் வீடு வாடகைக்கு விடுவதாகக் கூறி, ஒரு வீட்டைக்காட்டி, இருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிடுகிறார், புரோக்கர் நாராயணன். இதனால், ஏமாந்த அஞ்சலியும் அஜய்யும் வேறு வழியில்லாமல் ஒரே வீட்டில் தங்குகின்றனர். ஒரு கட்டத்தில் தேனிக்கு அஜய்யுடன் செல்லும் அஞ்சலி, அவரது கிராமத்து வாழ்க்கை முறை மற்றும் பாசத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து போகும் சூழலில், இரண்டுபேரும் தங்களுக்குள் இருக்கும் காதலை உணர்ந்து மீண்டும் சேர்கின்றனர். இப்படத்தில் அஜய் ஆக சிவாவும், அஞ்சலியாக பிரியா ஆனந்தும் நடித்திருக்கின்றனர். இசையை அனிருத் அமைத்து அனைத்துப் பாடல்களையும் ஹிட் செய்திருந்தார். இப்படம் கமர்ஷியலாகவும் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
கெட்டிமேளம்: 1985ஆம் ஆண்டு, விசு இயக்கத்தில் கார்த்திக் மற்றும் சுலக்ஷனா ஆகியோர் நடித்து அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், கெட்டிமேளம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களும் நன்றாக இருந்தாலும், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அந்த நாள்:
1996ஆம் ஆண்டு, விஷ்ணு பிரியன் இயக்கத்தில் பிரேம் மேனன், ராஜா, ஆனந்த் ராஜ், மோகினி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, அலெக்ஷ், ஜெய் கணேஷ் ஆகியோர் நடித்து அக்டோபர் 11ஆம் தேதி ரிலீசான திரைப்படம், அந்த நாள். இப்படம் முழுக்க முழுக்க திகில் பாணியில் உருவாக்கப்பட்ட படமாகும்.
வாசலில் ஒரு வெண்ணிலா: நிழல்கள் ரவி மற்றும் அமலா ஆகியோர் நடித்து கொச்சின் ஹனீஃபா இயக்கிய திரைப்படம், வாசலில் ஒரு வெண்ணிலா. அம்மு என்கிற சிறுமி, தனது சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியில் வந்துவிடுகிறார். அதன்பின், பால் விற்பனை செய்யும் கமலா என்ற பெண், அம்முவை ஆதரிக்கிறார். அம்முவுக்கும் கமலாவுக்கும் இருக்கும் அன்பை படம் வெளிப்படுத்துகிறது.
டாபிக்ஸ்