என்னா வசனம்.. என்னா நடிப்பு.. குடும்பத்தையே தியேட்டருக்கு வரவைக்கிற வித்தையை அறிந்தவர்.. நடிகர் விசு நினைவுநாள் இன்று!
Visu memorial day : விசுவின் படங்கள் பெரும்பாலும் மினிமம் பட்ஜெட் படங்களாக இருந்தாலும் வசூலை வாரிக் குவித்தது. அந்த தந்திரத்தை விசு கற்று வைத்திருந்தார்.குடும்பம் மொத்தத்தையும் தியேட்டருக்கு வரவைக்கிற வித்தையை அறிந்து வைத்திருந்தார்.
நடிகர் விசு 1945 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார். இவர் நடிகர் மட்டும் அல்ல கதாசிரியர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவராக விளங்கினார். விசு முதலில் மேடை நாடகங்களில் தான் நடித்தார். அதுமட்டும் இல்லை மேடை நாடகங்களை இயக்கியும் உள்ளார். அந்த மேடை நாடங்களில் தான் தனது நடிப்பு திறனை வெளிபடுத்தினார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
பழம்பெரும் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்பயணத்தை தொடங்கினார். விசு சுந்தரி என்பவரை 1975ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். விசுவின் சகோதரர் தான் நடிகர் கிஷ்மு. விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த அளவிற்கு அப்படம் வெற்றியை கண்டது. அதுமட்டும் அல்லாமல் இப்படம் 1986ஆம் ஆண்டு சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றது. இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.
கூட்டுக் குடும்பத்தின் கதையைச் சொல்லும் படம் தான் சம்சாரம் அது மின்சாரம் . குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த மாதிரியான பிணைப்பு இருக்க வேண்டும், பெரியவர்களின் பொறுப்புகளையும் படம் சுட்டிக்காட்டும். விசு, லக்ஷ்மி, சந்திரசேகர், கிஷ்மு, ரகுவரன், டெல்லி கணேஷ், இளவரசி, மனோரமா, மாதுரி, கமலா கமேஷ், திலீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் 25 வாரங்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது.
விசு 'கண்மணி பூங்கா' திரைப்படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார்.1982 ஆம் ஆண்டு வெளிவந்த மணல் கயிறு, 1983 ஆம் ஆண்டு வெளிவந்த டௌரி கல்யாணம், 1985 ஆம் ஆண்டு வெளிவந்த சிதம்பர ரகசியம், 1885 ஆம் ஆண்டு வெளிவந்த புதிய சகாப்தம், 1986 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சாரம் அது சம்சாரம் உள்ளிட்ட இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக உருவெடுத்தார். விசு படம் என்றால் கண்டிப்பாக குடும்பத்துடன் செல்லலாம் என்ற நம்பிக்கையை அவர் மக்கள் மனதில் பதியவைத்து விட்டார் என்றே சொல்லலாம்.
விசுவின் இயக்கத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் நீங்க நல்லா இருக்கணும். குடித்துவிட்டு பிரச்சனை செய்யும் கணவரை எப்படி மனைவி மாற்றுகிறார் என்பதே கதை. இப்படத்தில் நிழல்கள் ரவி, பானுப்ரியா, விசு, சந்திரசேகர்,மனோரமா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. இது விசுவின் இரண்டாவது தேசிய விருது ஆகும்.
சுமார் 40 ஆண்டுகளாக மக்களின் மனங்களை புரிந்து உணர்ந்து படமெடுப்பதில் வல்லவர் என்ற பேரெடுத்தார். குடும்பங்களை மையப்படுத்தி இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. விசு என்றால் படம் இப்படி தான் இருக்கும் என்ற முத்திரையை மக்கள் மனதில் பதித்தார். தனக்கான ஒரு அடையாளத்தை படங்களை இயக்கியதன் மூலம் பெற்றார்.
விசு படம் என்றால் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றும் அளவுக்கு தனது படங்களில் மக்களை உணர்ந்து காட்சிகளை அமைத்து இருப்பார் விசு. இவர் படம் சமூக பிரச்சனையை வெளி கொண்டுவரும் அதே போல அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் விதமாகவும் படம் இருக்கும்.
இவர் இயக்கி வெற்றி கண்ட சில குடும்ப படங்கள்
சம்சாரம் அது மின்சாரம்
திருமதி ஒரு வெகுதிமதி
டெளரி கல்யாணம்
சிதம்பர ரகசியம்
வேடிக்கை என் வாடிக்கை
வரவு நல்ல உறவு
பெண்மணி அவள் கண்மணி
விசுவின் படங்கள் பெரும்பாலும் மினிமம் பட்ஜெட் படங்களாக இருந்தாலும் வசூலை வாரிக் குவித்தது. அந்த தந்திரத்தை விசு கற்று வைத்திருந்தார்.குடும்பம் மொத்தத்தையும் தியேட்டருக்கு வரவைக்கிற வித்தையை அறிந்துவைத்திருந்தார்.
இளையராஜா இல்லேனா எந்த படமும் ஓடாது என்ற காலகட்டத்தில், கதை ஒன்றே போதும் என்று வெற்றி வாகை சூடியவர் தான் விசு.
நடிகர் விசு கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அதே ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி உயிரிழந்தார். இவர் டிவி நிகழ்ச்சியான அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொகுத்தும் வழங்கியுள்ளார்.
மண்ணைவிட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த குடும்பச் சித்திரங்களைத் தந்த அற்புதக் கலைஞன் விசுவை நினைவு கூருவோம்.