HBD Raadhika : அசுரத்தனமான நடிப்பு.. 80களில் தொடங்கி தற்போது வரை கலக்கும் நாயகி ராதிகாவுக்கு பிறந்தநாள் இன்று!
Actress Raadhika Sarathkumar birthday : 80 களில் தொடங்கி தற்ப்போது வரை தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். முக்கிய கதாநாயகி, துணை கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் நடித்துவிட்டார். இன்றோடு 61வயதாகும் அவர் தொடர்ந்து சினிமா துறையில் இயங்கி வருகிறார்.
நடிகை ராதிகா சரத்குமார், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என்ற பல முகங்கள் கொண்டவர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் வேலை செய்துள்ளார். டிவி தொடர்கள் மற்றும் வெப் தொடர்கள், இந்தி, மலையாளம், கன்னட படங்கள் என தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
ராதிகா கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் 1978ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது கிடைத்தது.
ராதிகா, பழம்பெரும் நடிகர் மற்றும் காமெடியன் எம்.ஆர்.ராதாவின் மகள். ராதிகா தமிழகம், ஸ்ரீலங்கா, யுனைடெட் கிங்டம் என தனது படிப்பை முடித்தார். இவரது இளைய தங்கை நிரோஷாவும் நடிகை. ராஜீ மற்றும் மோகன் என்ற இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். இவரின் மூத்த சகோதரர் ராதா ரவி ஆவார்.
தன்னை நிரூபித்து இருப்பார்
ஊர்காவலன் படத்தில் ராதிகாவின் காமெடி ரசிக்க வைக்கும். கிழக்குச் சீமையிலே, சிப்பிக்குள் முத்து, ரெட்டை வால் குருவி, போக்கிரி ராஜா,பசும்பொன், வீரத்தாலாட்டு, சூர்யவம்சம், தர்மதுரை, நல்லவனுக்கு நல்லவன், தாவணிக் கனவுகள்,தாஜ்மகால்,பூந்தோட்ட காவல்காரன் படங்களில் தனது கேரக்டருக்கு அழுத்தம் கொடுத்து நடித்து தன்னை நிரூபித்து இருப்பார்.
கிழக்குச் சீமையிலே
தமிழ் திரை உலகில் அண்ணன் தங்கை பாசம் என்றால் பாசமலர் திரைப்படம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் 90களில் வெளியான கிழக்கு சீமையிலே படம் அன்றைய சூழலில் பெரு வெற்றி பெற்றது. படத்தில் முக்கிய கதாபாத்திரமான மாயாண்டி தேவராக விஜயகுமார் நடித்திருந்தார். தங்கை விருமாயியாக ராதிகாவும் நடித்து இருப்பார். ராதிகா தனது நடிப்பில் அசத்தி இருப்பார். கிராமத்து மண்மனம் மாறாமல் அப்படியே கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்.
தெறி, சகுனி, யானை, வெந்து தணிந்தது காடு, லவ் டுடே, கொலை உள்ளிட்ட படங்களில் விஜய், அருண் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோருக்கு அம்மாவாகவும், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து உள்ளார்.
திருமணம்
2001ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ராதிகா, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன் இவர்கள் இருவரும் நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
முன்னதாக இவர் நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பின்னர் ரிச்சர்ட் ஹார்டி என்பவரை மணந்து அவரையும் பிரிந்தார். வெள்ளித்திரையை கடந்து சின்னத்திரையிலும் கலக்கினார். சித்தி சீரியல் மூலம் பிரபலமானால், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக இருந்தார். சினிமா துறையில் தனது 45 ஆண்டுகளை பூர்த்தி செய்தார். அதற்காக அவரை அனைவரும் பாராட்டினர்.
விருதுகள்
ராடான் மீடியா வொர்க்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் சேர்மனாக இருக்கிறார். இவர் தேசிய விருது, 6 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 நந்தி விருதுகள், 3 தமிழ் மாநில விருதுகள் பெற்றுள்ளார்.
80 களில் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். முக்கிய கதாநாயகி, துணை கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் நடித்துவிட்டார். இன்றோடு 61வயதாகும் அவர் தொடர்ந்து சினிமா துறையில் இயங்கி வருகிறார். அவர் தன் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்று ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்