தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டிய விவகாரம்.. தனியார் மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் செய்யத் தடை!
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தன் மனைவி மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை பிரபல யூட்யூபர் இர்ஃபான் கத்திரிக்கோலால் வெட்டி, அதனை வீடியோவாகப் பதிவுசெய்து, தனது யூட்யூபில் வெளியிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் டெலிவரியை தனது யூடியூப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவதுபோல உள்ளது. அதுவும் மருத்துவரே, கத்திரிக்கோலை இர்ஃபானிடம் கொடுக்கிறார். இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், சர்ச்சையாக மாறியுள்ளது.
இணை இயக்குநர் இளங்கோவன் புகார்
இந்தநிலையில், யூடியூபில் வெளியான வீடியோவை நீக்கக் கோரி மருத்துவத் துறை சார்பில் நேற்று முன்தினம் இர்ஃபானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இர்ஃபான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இர்ஃபான் தனது சமூக வலைதளப்பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கினார். இந்தசூழலில், யூடியூபர் இர்ஃபான் மற்றும் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன் புகார் அளித்துள்ளார்.