Thangalaan Review: பாய்ந்தாரா பா.ரஞ்சித்? சீறினாராக சியான் விக்ரம்? தாங்குமா தங்கலான்? ‘நச்’ விமர்சனம் இதோ!
Thangalaan Review: பா.ரஞ்சித், தன்னுடைய வழக்கமான நிலத்திற்கான போர், மாட்டு இறைச்சி பிரச்சாரம், புத்தர் கோட்பாடு என அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். கிஷோரின் தங்கலான் உலகத்தை கேமரா கண்கள் கன கச்சிதமாக படம் பிடித்து இருக்கிறது.
Thangalaan Review: இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
தங்கலான் சொல்லும் கதை என்ன?
வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, தனக்கான நிலத்தில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இதனை பார்த்து பொறுக்காத ஊர் மிராசு, சூழ்ச்சி செய்து, அவனையும் அவனது மகன்களையும் பண்ணை அடிமையாக பணி அமர்த்துகிறார். இதற்கிடையே வரும் ஆங்கில துரை கிளவ்ன் (டேனியல்) அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியை கேட்கிறார். மிராசின் அடிமையாக இருப்பதை விட, துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான் தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் அந்தனன் ( பசுபதி) உள்ளிட்டோர் செல்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அவனுடன் ஊராரும் சேர்ந்து கொள்கின்றனர். ஆனால், அங்கிருக்கும் தங்கத்தை தன் உயிராக பாதுகாத்து நிற்கின்றனர் ஆரத்தியும் ( மாளவிகா) அவனது குழுவும். பொன்னை நெருங்க வரும் நபர்களின் உயிர்களை காவு வாங்கும் அவர்களை மீறி, இறுதியில் தங்கலான் குழு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் கதை.
தங்கலான் முனி கதாபாத்திரத்திற்கு தன்னுடைய உடல், பொருள், ஆவி என வழக்கம் போல, தன்னை மொத்தமாக கொடுத்து இருக்கிறார் விக்ரம். தங்கலானை அடக்கும் ராணியாகவும், அன்பை அரட்டுத்தனமாக காட்டுபவளாகவும் கங்கம்மா கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் நடிகை பார்வதி. அவளுக்கும், தங்கலானுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் அழகோ அழகு.
கதாபாத்திரங்களின் கச்சித தேர்வு
பொன்னை பாதுகாக்கும் ஆரத்தியாக மாளவிகா. ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கும் அவரின் கடின உழைப்புக்கு தனி பாராட்டுகள். ராமானுஜம் வழியில் வந்த அந்தணன் கதாபாத்திரத்தில் பசுபதி தன்னுடைய நடிப்பின் முதிர்ச்சியை காண்பித்து இருக்கிறார். இதர கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கின்றன.
சார்பட்டா பரம்பரை படத்தில் தன்னுடைய திரை கிராப்டின் மூலம் வட சென்னை பாக்சிக்கின் உலகத்தை கண் முன்னே நிறுத்திய பா. ரஞ்சித், தங்கலானில் கோலார் தங்கவயலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு தங்கத்தை எடுக்க உதவிய மக்களின் உலகத்தை கண் முன்னே நிறுத்தி இருக்கிறார். விக்ரமுடைய நடிப்புத்தீனிக்கு முற்றிலுமாக வேறொரு பரிணாம களத்தை அமைத்து கொடுத்து அவரை நடிப்பில் தங்கலானை மின்ன வைத்திருக்கிறார்
மிரட்டியிருக்கும் ஜீ.வி.பிரகாஷ்
நடிகர்களுக்கான அலங்காரம், ஒப்பனை, ஆக்ஷன் என எல்லாவற்றிலும் முழுக்க முழுக்க உண்மைத் தன்மையை கொண்டு வர முயன்று இருக்கிறார். வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. ஒரு அட்வென்சர் கதைக்கான களத்தையும், மாயா ஜாலத்தையும் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் பா.ரஞ்சித், தன்னுடைய வழக்கமான நிலத்திற்கான போர், மாட்டு இறைச்சி பிரச்சாரம், புத்தர் கோட்பாடு என அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். கிஷோரின் தங்கலான் உலகத்தை கேமரா கண்கள் கன கச்சிதமாக படம் பிடித்து இருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் தன்னுடைய இசையால் படத்தை மொத்தமாக தாங்கி நின்று மிரட்டி இருக்கிறார்.
இவையனைத்தும் படத்தின் பலமாக இருந்தாலும், திரைக்கதையில் அவ்வப்போது குறைபட்டு நிற்கும் திரைக்கதை சுவாரசியமின்மை நமக்கு சோர்வை தருகின்றன. அந்த சோர்வு நம் கண்களை அவ்வப்போது திரையில் இருந்து விலக வைக்கின்றன. அது படத்தின் பலவீனமாக வும் மாறி இருக்கிறது. அவை களைய பட்டிருந்தால் தங்கலான் பொன்னாய் மின்னி இருப்பான்.
சினிமா செய்திகள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். மேலும் எங்களை சமூகவலைதளங்கள் வாயிலாகவும் பின்தொடரலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்