HBD Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகம்..கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகர்-tamil cinema young versatile actor and latest super hit trending movie lubber pandu fame attakathi dinesh birthday today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகம்..கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகர்

HBD Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகம்..கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 27, 2024 07:00 AM IST

HBD Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகராக திகழ்கிறார் அட்டகத்தி தினேஷ். இளைஞர்களின் பிரதிபலிப்பாக பல படங்களில் தோன்றி தனது அற்புத நடிப்பால் கவர்ந்த சிறந்த கலைஞனாகவே இவர் திகழ்கிறார்.

HBD Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகம்..கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகர்
HBD Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகம்..கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகர்

நடிப்பு பயணம்

வேலூர் நகரத்தை சேர்ந்தவர் தினேஷ் என்று கூறப்படும் நிலையில், வடசென்னை பகுதியான வண்ணார்பபேட்டையில் தான் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தினேஷ் ரவி என்பது தான் இவரது நிஜப்பெயர்.

பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது அற்புத நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் அட்டகத்தி தினேஷ் ஆனார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சன்டிவியில் ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் தான் இவரது நடிப்பு பயணம் தொடங்கியுள்ளது. அந்த சீரியலில் நடிகை சீதாவின் மகனாக நடித்த இவர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலிலும் நடித்துள்ளார்.

இதன் பிறகு மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ஈ, வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றிய இவர், அருள்நிதி நடித்த மெளன குரு படத்தில் திருப்புமுனை தரும் வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார்.

எதார்த்த நடிப்பு

அட்டகத்தி படத்தில் டீன் ஏஜ், கல்லூரி மாணவனாக எதார்த்த நடிப்பை கண்முன்னே கொண்டுவந்திருப்பார். சென்னை புறநகர் பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்த பாராட்டுகளை பெற்றார்.

இதன் பின்னர் நடித்த குக்கூ படத்தில் பார்வையற்றவராக தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் முக்கிய கேரக்டரில் தோன்றி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இதேபோல் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி போன்ற படங்களில் தனது அபார நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

இந்த படத்துக்கு பின்னர் அட்டகத்தி தினேஷ் நடித்த உள்குத்து, அண்ணனுக்கு ஜே, களவாணி மாப்பிள்ளை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் இவரது நடிப்புக்காக பேசப்பட்டாலும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.

கெத்தாக கம்பேக்

இந்த ஆண்டில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஜே பேபி படம் மீண்டும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஊர்வசியின் இரண்டாவது மகனாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் லப்பர் பந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் 40 வயது மதிக்கத்தக்கவராகவும், ஹீரோயின் தந்தையும் நரைமுடி, தாடியுடன் கெத்து என்ற கேரக்டரில், விஜயகாந்த் ரசிகராகவும், ஊர் மக்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் வீரராகவும் திறன்பட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் இவரது காட்சிகள் சிலவற்றை தொகுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். குறிப்பாக விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்தில் இடம்பெறும் பொட்டு வச்ச பாடல் பின்னணியில் ஒலிக்க அட்டகத்தி தினேஷ் தோன்றும் காட்சி வைரலாகி வருகின்றன.

எதார்த்த கலைஞனாகவும், இளைஞர்களின் பிரதிபலிப்பாகவும் தோன்றும் நடிகனாக இருந்து வரும் அட்டகத்தி தினேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதுவும் அவரது புதிய படத்தில் அவர் நடித்திருக்கும் கெத்து என்ற கேரக்டர் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்படும் நேரத்தில் வரும் இந்த பிறந்தநாள் அட்டகத்தி தினேஷுக்கு ஸ்பெஷலாகவே அமையக்கூடும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.