Actor Nepolean: எவ்வளவு காலம் வாழ போகிறோம்?..'நான் செத்தா கூட..என் கனவு இதுதான்'.. உருக்கமாக பேசிய நடிகர் நெப்போலியன்!
Actor Nepolean: நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆசை குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
Actor Nepolean: தமிழ் சினிமா உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். இயக்குநர் பாரதிராஜாவால் "புது நெல்லு புது நாத்து" என்ற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹாலிவுட் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் கிட்டதட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொடக்கத்தில் வில்லனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். அதோடு அரசியலிலும் ஈடுபட்டு எம்எல்ஏவாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த மாதத்தில் அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் அவரே சமீபத்தில் கூறியிருக்கிறார். தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வீடியோ கால் மூலமாகவே திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு நிச்சயதார்த்தத்தை முடித்து இருந்தார்.
ஜப்பானில் திருமணம்
அதுபோல தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறுவதாகவும் அறிவித்திருக்கிறார். அதிலும் அடுத்த மாதம் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு புறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "அன்பு நண்பர்களே தமிழ் சொந்தங்களே செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் Nashville- லில் இருந்து எனது குடும்பத்தோடு ஜப்பானுக்கு பயணம் தொடங்கிய போது நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்து சிறப்பாக வாழ்த்துக்களை அளித்து எங்களை பாசத்தோடு வழியனுப்பி வைத்த மகிழ்வான தருணம். எங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.. அனைவருக்கும் நன்றி" என்று அந்த பதிவில் நெப்போலியன் கூறியிருக்கிறார்.
கப்பலில் பயணம் ஏன்?
அதாவது நெப்போலியனின் மகன் தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் வழியாகவே அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு பயணம் செய்வதாக ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.
வைரல் வீடியோ
இந்த நிலையில், நடிகர் நெப்போலியன் Touring Talkies என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதில், நெப்போலியன் பேசுகையில், நான் 16 வயதிலிருந்து அரசியலில் நுழைந்துவிட்டேன். என்னுடைய மாமா கே.என் நேரு அமைச்சராக இருந்தபோது அவருக்கு பிஏவாக நான் இருந்தேன். பிறகு நடிக்க வேண்டும் என்று ஆசை வந்ததால் நடிக்கத் தொடங்கினேன். ஆனாலும் அரசியலை விட்டு விலகவில்லை. அதற்குப் பிறகு எம்.எல்.ஏ வாகி மினிஸ்டர் ஆகவும் இருந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய குடும்பத்திற்காக நான் அரசியல் மற்றும் சினிமாவை விட்டுவிட்டு விலகி தற்போது வசித்து வருகிறேன்.
உருக்கமான பேச்சு
என் அப்பா மற்றும் அம்மாவிற்காக மணிமண்டபத்தையும் கட்டி இருக்கிறேன். நாம் எவ்வளவு காலம் வாழப் போகிறோம்.. ஆயிரம் ஆண்டுகளா வாழப் போகிறோம்.."நான் செத்தால் கூட இப்படி ஒரு மனுஷன் நம்மோடு வாழ்ந்துட்டு போயிருக்காரு என்று நம்மோடு இருப்பவர்கள் நம்மை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.