HBD Lara Dutta: முன்னாள் பிரபஞ்ச அழகி.. தமிழ்நாட்டு மருமகள் லாரா தத்தாவின் பிறந்தநாள்!
HBD Lara Dutta: முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான லாரா தத்தாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது செயல்பாடுகள் குறித்த சிறப்புக் கட்டுரை..
HBD Lara Dutta: லாரா தத்தா, 2000ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். அதன்பின் இந்தி மொழியில் முக்கிய நடிகையாக மாறினார்.
2000-த்தின் துவக்கத்தில் உலக அழகில் முன்னணி நடிகையாக இருந்த லாரா தத்தா பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். லாரா குறித்து அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த லாரா தத்தா? இந்து பஞ்சாபி தந்தை விங் காமாண்டர் எல்.கே.தத்தாவுக்கும், உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி, ஜெனிஃபர் மயூரீனுக்கும் 1978ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மகளாகப் பிறந்தவர், லாரா தத்தா.
எல்.கே. தத்தா தனது பணியை ஒட்டி, தனது குடும்பத்தினருடன் 1981ஆம் ஆண்டு பெங்களூரு நகரத்துக்கு குடிபெயர்ந்தார். அதனால், லாரா தத்தாவின் பள்ளிப் படிப்பு பெங்களூரு நகரிலேயே அமைந்தது. அவர், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், ஃப்ராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின், லாரா தத்தா, பொருளாதாரப்பிரிவில் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் வென்றார். லாரா தத்தா, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நன்கு பேச எழுதத்தெரிந்தவர். அதே நேரம், தனது தந்தை ஒரு பஞ்சாபி என்பதால், பஞ்சாபி மொழியில் பேசவும், பெங்களூருவில் வளர்ந்தவர் என்பதால் கன்னட மொழியிலும் பேசத் தெரிந்திருந்தார், லாரா தத்தா.
லாரா தத்தா, தனது ஆரம்ப காலங்களில் பூட்டானை பூர்வீகமாகக் கொண்ட கெல்லி டோர்ஜி என்னும் மாடலுடன் 9 ஆண்டுகளாக காதலில் இருந்தார். அதன்பின் ஏற்பட்ட பிரேக்கப்பிற்குப் பின், டினோ மோரியா என்னும் இந்தி நடிகருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார். அந்த வாழ்க்கையும் அந்த உறவும் 2009ஆம் ஆண்டு முறிந்தது. பின்னர் லாரா தத்தா, அமெரிக்காவை சேர்ந்த பேஸ் பால் வீரரான டெரிக் ஜெட்டருடன் டேட்டிங்கில் இருந்தார்.
இறுதியாக, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியுடன், 2010ஆம் ஆண்டு நிச்சயம் செய்துகொண்டு, 2011ஆம் ஆண்டு மும்பையில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
பிரபஞ்ச அழகியாக லாரா தத்தா:
தனது கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த லாரா தத்தா, 1997ஆம் ஆண்டு மிஸ் இன்டர்கான்டினென்டல் போட்டியில் கிரீடம் பெற்றார். 2000ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். இறுதியாக, சைப்ரஸ் நாட்டில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2000க்கான போட்டியில் கலந்துகொண்டு, பிரபஞ்ச அழகியாக முடிசூடப்பட்டார். குறிப்பாக, நீச்சல் உடைப் போட்டியில் அதிகமதிப்பெண்ணும், இறுதிப்போட்டியிலும் அதிகப்பட்சமாக பெரும்பான்மையான நடுவர்களால் 9.99 மதிப்பெண்கள் பெற்றார். மிஸ் யுனிவர்ஸாக பட்டம்பெற்ற ஆண்டில், லாரா தத்தா, 62 நாடுகளுக்குச் சென்றார்.
சினிமா வாழ்வு: 2002ஆம் ஆண்டு, அரசாட்சி என்னும் தமிழ்த்திரைப்படம் மூலம் திரைத்துறையில் கால் பதித்தாலும், இவரது நடிப்பில் முதலில் வெளியான திரைப்படம், அண்டாஸ் என்னும் இந்தி படம் ஆகும். இதன்மூலம் பாலிவுட்டில் பிரபல நடிகையானார், லாரா தத்தா. அதன்பின், நோ எண்ட்ரி, ஜிந்தா, அழக், பில்லு பார்பர், நீலம், சலோ டெல்லி, டான் 2, டேவிட், அசார், பெல் பாட்டம் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படி மாடல், நடிகை எனப் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வரும் லாரா தத்தாவுக்கு இன்று 46ஆவது பிறந்த நாள். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!