HBD Swathi: அழகிய தெத்துப்பல்.. கண்கள் இரண்டால் பலரை கட்டியிழுத்த சுவாதியின் பிறந்தநாள்
நடிகை சுவாதியின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை இதோ..

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரை அவரது அழகிய கண்கள், தெத்துப்பல் மற்றும் நடிப்பால் கட்டியிழுத்த நடிகை சுவாதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் அறிந்துகொள்வோம்.
யார் இந்த சுவாதி? சுவாதி, 1987ஆம் ஆண்டு, ஏப்ரல் 19ஆம் தேதி அன்றைய சோவியத் யூனியனில் இருக்கும் விளாடிவோஸ்டாக் நகரில் பிறந்தவர். சுவாதியின் தந்தை இந்திய கப்பல்படையில் இருந்தபோது, ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுவாதி அங்கு பிறந்தார். இவருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர், சுவாதிக்கு வைத்த பெயர், ‘சுவெட்லனா’. ஆனால், அவரது தாய், அவரது பெயரை சுவாதி என மாற்றினார். அதன்பின், சுவாதியின் குடும்பம் மும்பைக்கும், அதன்பின், விசாகப் பட்டினத்துக்கும் குடிபெயர்ந்தது. அதனால், சுவாதியின் குழந்தைப் பருவம் இந்த இரண்டு நகரங்களில் தான் இருந்தது. குறிப்பாக, சுவாதி, விசாகப்பட்டினத்தில் உள்ள புனித பிரான்ஸிஸ் டிசேல்ஸ் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பயின்றார். 11, 12ஆம் வகுப்பினை ஹைதராபாத்தில் முடித்த சுவாதி, அதன்பின், ஹைதராபாத்தில் இருக்கும் புனித மேரி கல்லூரியில் பயோடெக்னாலாஜி படிப்பினைமுடித்தார்.
கல்லூரியில் படிப்பதற்கிடையே தனது 17 வயதில், தனியார் தொலைக்காட்சியில் ‘கலர்ஸ்’ என்னும் நிகழ்ச்சியை தெலுங்கு மொழியில் தொகுத்து வழங்கினார். 150க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கியிருப்பதால், ‘கலர்ஸ்’ சுவாதி என செல்லமாக தெலுங்கு மொழி பேசும் மக்களால் அழைக்கப்படுகிறார்.