10 Years Of Vaayai Moodi Pesavum: கொரோனாவுக்கு முன்னோடி.. பேசினால் பரவும் நோய்.. வாயை மூடி பேசும் மக்களின் கதை!-special article on 10 years of vaayai moodi pesavum release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Vaayai Moodi Pesavum: கொரோனாவுக்கு முன்னோடி.. பேசினால் பரவும் நோய்.. வாயை மூடி பேசும் மக்களின் கதை!

10 Years Of Vaayai Moodi Pesavum: கொரோனாவுக்கு முன்னோடி.. பேசினால் பரவும் நோய்.. வாயை மூடி பேசும் மக்களின் கதை!

Marimuthu M HT Tamil
Apr 25, 2024 08:54 AM IST

10 years of Vaayai Moodi Pesavum: வாயை மூடி பேசவும் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

வாயை மூடி பேசவும்
வாயை மூடி பேசவும்

இப்படத்துக்குண்டான ஒளிப்பதிவினை செளந்தரராஜன், இசையை ஷான் ரோல்டனும், எடிட்டிங்கினை அபினவ் சுந்தர் நாயக்கும் செய்துள்ளனர். இப்படம் தமிழில் எடுக்கும்போதே மலையாளத்திலும் ‘சம்சாரம் ஆரோக்கியத்தினு ஹனிகாரம்’ என்னும் படமாக உருவாகி ரிலீஸானது. இப்படத்தை தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கதை எழுதி இயக்கியவர், இயக்குநர் பாலாஜி மோகன் ஆவார். 

கொரோனா காலத்துக்கு முன்பே, கொரோனா போன்ற ஒரு நோயால் பாதிக்கப்படும் ஒரு கிராம மக்களுக்கு, அரசு இயந்திரம் எந்தமாதிரியான விதிகளை விதிக்கிறது. அதை மக்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை காமெடியாக சொன்ன படம் இது. இதனால், கொரோனா தாக்கத்தின்போது, இப்படம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. 

பனிமலை என்னும் மலைப்பகுதியில், பேசுவதால் ‘மியூட்-ஃபுளூ’ என்னும் விஷக்காய்ச்சல் பரவுகிறது. அதனைக் கட்டுப்படுத்த, அரசு பேசுவதற்கு தடை விதிக்கிறது. அதன்பின் நடக்கிற களேபரங்களே படம்.  

வாயை மூடி பேசவும் படத்தின் முழுக்கதை என்ன?: கதையானது பனி மலை என்னும் மலைப் பகுதியில் நடக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, ஒரு வானொலி நிகழ்ச்சியின் விருந்தினராக வரும்போது கடும் இருமலால் பாதிக்கப்பட்டு, குரலை இழக்கிறார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ’மியூட் ஃபுளூ’ எனப்படும் ஊமைக் காய்ச்சல் என்னும் புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டது புலனாகிறது.

‘மியூட் ஃபுளு’ என்னும் புதிய நோய், பனிமலை நகரம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் ஒருவர் குரல் இழப்பு மற்றும் மரணத்தைத் தழுவக் கூட வாய்ப்பிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் சுந்தரலிங்கத்தை மாநில அரசு அங்கு அனுப்புகிறது. பனிமலையில் இருக்கும் மக்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பனிமலையில் ஒரு பசை கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிகிறார்,அரவிந்த். அவருக்கு பண்பலை வானொலியில் அறிவிப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதற்கிடையே பரவும் ‘மியூட் ஃபுளூ’வை கண்டறியப்போகும்போது அங்கு மருத்துவர் அஞ்சனா அரவிந்தைப் பரிசோதிக்கிறார். அப்போது, மனக்குழப்பத்தில் அஞ்சனா, பஞ்சினை அரவிந்தின் மூக்கில் வைத்துவிடுகிறார். அத்தருணத்தில் அரவிந்துக்கு வாந்தி வந்துவிடுகிறது. அப்போது தனது தாய் சிறுவயதில் இறந்ததைப் பற்றியும் தன்னை தன் அப்பாவும் சித்தி வித்யாவும் வளர்ப்பது நெருடலாக இருப்பது பற்றியும் தெரிவிக்கிறார். தவிர, அவர் காதலிக்கும் வினோத், தன்னை அடக்குமுறையில் வைத்திருப்பதையும் பேசுகிறார். பின் நிலையைப் புரிந்துகொண்டு அங்கு இருந்து சென்று விடுகிறார், அரவிந்த்.

மேலும் பனிமலைப் பகுதி, இன்னபிற சில காரணங்களுக்காக செய்திகளில் இடம்பெறுகிறது. பனிமலைக்கு சூட்டிங்கிற்கு வந்திருக்கும் ‘நியூக்ளியர் ஸ்டார்’நடிகர் பூமேஷூக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, குடிகாரர் சங்கத்தலைவர் மட்டை ரவி வருகிறார். தொடர்ந்து தன் படங்களில், நடிகர் பூமேஷ், குடிகாரர்களை வெறுக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டும் குடிகாரர் சங்கத்தலைவர் மட்டை ரவிக்கும், பூமேஷ் ரசிகர் மன்றத் தலைவர் கணேஷூக்கும் சண்டை வருகிறது. அது இரு குழுக்களுக்கும் இடைப்பட்ட சண்டை ஆகிறது.இதற்கிடையே அரவிந்த், நடிகர் பூமேஷின் ரசிகர்களுக்கும் குடிகாரர் சங்கத்தினருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். 

பின் ஒரு நாள் அஞ்சனாவை சந்திக்கும் அரவிந்த், வினோத்துக்கும் அஞ்சனாவுக்கும் இருக்கும் ரிலேஷன்சிப் பிரச்னைகளைப் பேசி சரிசெய்துகொள்ளச் சொல்கிறார். ஆனால், அஞ்சனா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். இதனிடையே அரவிந்த், அஞ்சனாவை காதலிக்கத் தொடங்குகிறார்.

இந்நிலையில் புதிய வகை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, பனிமலையில் பேசுவதற்கு அரசு தடை விதிக்கிறது. இறுதியில் வாயை மூடிக்கொண்டு பேசாமல் வாழ பனிமலை மக்கள் பழக்கப்படுத்தப்படுகின்றனர். குடிகாரர் சங்கத்துக்கும், பூமேஷ் ரசிகர்களுக்கும் இருக்கும் பிரச்னை சரி ஆகிறது. பின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நகரில் உள்ள அனைவரும் சரிஆகின்றனர். ஆனால், இந்நோய்ப் பரவலின்போது, ஒருபோட்டோவுக்காக நோய்தீர்க்கும் மருந்து வழங்கப்படுவதாகப் பொய் கூறிய அமைச்சர் சுந்தரலிங்கம் தன் குரலை இழக்கிறார். அத்துடன் படம் முடிவடைகிறது. 

இப்படத்தில் அரவிந்த் ஆக துல்கர் சல்மானும், அஞ்சனாவாக நஸ்ரியாவும், வித்யாவாக மதுபாலாவும், சுந்தரலிங்கமாக பாண்டியராஜனும் நடித்துள்ளனர். மேலும், நியூக்ளியர் ஸ்டார் பூமேஷாக ஜான் விஜய் நடித்துள்ளார். மட்டை ரவியாக ரோபோ சங்கரும் தம்பிதுரையாக வினு சக்ரவர்த்தியும் நடித்துள்ளனர். இப்படத்தில் தமிழில் 8 பாடல்கள் எடுக்கப்பட்டன. அதில் காதல் அரை ஒன்னு விழுந்துச்சு என்னும் பாடல் ஹிட்டானது.

இப்படம் கொரோனா என்னும் நோயைப் போன்றே ஒரு நோயைப் பற்றி பேசி, அதன் பின் விளைவுகளை காமெடியாக சொல்லி இருக்கிறது. எனவே, இப்படம், கொரோனாவுக்குப் பின், வெளியாகியிருந்தால், இதன் மைலேஜ் இன்னும் அதிகரித்திருக்கும். படம் வெளியாகி 10ஆண்டுகள் ஆனாலும், படத்தை இப்போது டிவியில் போட்டாலும் ரசிக்கலாம் என்பதே உண்மை.

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.