65 Years of Maragatham: காலத்தால் அழியாத "குங்குமப்பூவே" பாடல் - கொலையாளியை தேடி கண்டறியும் விறுவிறுப்பான த்ரில்லர் கதை
சந்திரபாபு நடனமாடிய காலத்தால் அழியாத "குங்குமப்பூவே" பாடல் இடம்பிடித்த படமாக மரகதம் உள்ளது. கொலையும் கொலையாளியையும் தேடி கண்டறியும் விறுவிறுப்பான த்ரில்லர் கதையாக இந்த படமாக அமைந்திருக்கும்.
பிரபல எழுத்தாளரான டிஎஸ்டி சாமி எழுதிய கருங்குயில் குன்றத்து கொலை என்ற நாவலை அடிப்படையாக கொண்டு சிவாஜி கணேசன் - பத்மினி நடிப்பில் உருவாகிய க்ரைம் த்ரில்லர் படம்தான் மரகதம். எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு இயக்கிய இந்த படத்தில் டி. எஸ். பாலையா, சந்திரபாபு, வீணை பாலச்சந்தர், ஓஏகே தேவர், சந்தியா, முத்துலட்சுமி, லட்சுமி ராஜம், சரஸ்வதி போன்றோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
படத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் முரசொலி மாறன் வசனம் எழுதியிருப்பார்.
கொலையும் பின்னணியும்
ஜமிந்தார் குடும்பத்தை சேர்ந்த மகாராஜா கொல்லப்படுகிறார். இந்த கொலை பழி மகாராஜாவின் சகோதரர் (வீணை பாலச்சந்தர்) மீது விழுகிறது. சிறைவாசம் அனுபவிக்கும் அவர் ஜெயலில் இருந்து தப்பித்து அவரது மனைவியை (மனைவி) சந்திக்க முயற்சிக்கிறார்.
இதற்கிடையே தனது மகள் என்று கூட தெரியாமல் வீணை பாலச்சந்தர் மனைவியாக வரும் சந்தியா, பத்மினியை படகு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். பின்னர் வீணை பாலச்சந்தர் - பத்மினி ஒன்றினைகிறார்கள்.
இளவரசனாக வரும் சிவாஜி கணேசன், பத்மினி மீது காதல் கொல்கிறார். அதேசமயம் தனது தந்தையை கொலை செய்தவரை கண்டறியும் வேலையிலும் ஈடுபடுகிறார். இறுதியில் கொலைகாரனை யார் என்ற சஸ்பென்ஸை உடைப்பதோடு, குடும்பம் ஒன்றிணைந்து, காதலர்கள் இணைவதுடன் படம் முடிவடைகிறது.
கொலையும், அதற்கான பின்னணியும் என்ன என்பதை விவரிக்கும் விதம் படம் வெளியான காலகட்டத்தில் புதுமையாக அமைந்திருந்தது. அத்துடன் பிளாக் அண்ட் ஒயிட் படமான இது விறுவிறுப்பான திரைக்கதையுடன் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தந்தது.
நடிப்பில் மிரட்டிய பிரபலங்கள்
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். பல படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டி வந்த வீணை பாலச்சந்தர், இந்த படத்தில் அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சிவாஜி கணேசன் காதலனாகவும், கொலையாளியை கண்டறியும் துப்பறியும் கேரக்டரிலும் என அமைதியும், அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தும் கேரக்டரிலும் தோன்றியிருப்பார்.
காமெடி நடிகரான டி.எஸ். துரைராஜ், வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்திலும், கொலைக்கு திட்டமிடுபவராகவும் மாறுபட்ட நடிப்பையும், வில்லனாக டி. எஸ். பாலையாவும் மிரட்டியிருப்பார்கள். சந்தியா, பத்மினி ஆகியோரின் கதாபாத்திரம் படத்தின் கதையோட்டத்துடன் முழுவதும் நகரும் விதமாக அமைந்திருக்கும்.
காமெடி கதாபாத்திரத்தில் வரும் சந்திரபாபு, பட்லர் கதாபாத்திரத்தில் தனக்கே உரித்தான நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.
காலங்களை கடந்த ஒலிக்கும் சந்திரபாபு பாடல்
எஸ்.எம். சுப்பையா இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக சந்திரபாபு பாடிய குங்குமப்பூவே கொஞ்சு புறாவே பாடல் காலத்தால் அழியாத கிளாசிக் பாடலாக இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கு சந்திரபாபு - ஜமுனா ராணி ஆகியோரின் நடனமும் ரசிக்க வைக்கும் விதமாக இருக்கும்.
பாக்ஸ் ஆபிஸில் தோல்வி
படத்தில் சிவாஜி கணேசன், வீணை பாலச்சந்தர், டி.எஸ். துரைராஜ், பத்மினி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளை பெற்றது. த்ரில்லர் கதையை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாத திரைக்கதையுடன் உருவாக்கியபோதிலும் படம் பெரிதாக வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இருப்பினும் சிறந்த கிளாசிக் த்ரில்லர் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் மரகதம் படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்