HBD Padmini : தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.. நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Padmini : தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.. நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி பிறந்தநாள் இன்று!

HBD Padmini : தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.. நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Jun 12, 2024 06:00 AM IST

Actress Padmini Birthday : 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகை பத்மினி, தனது நடனத்திற்காகவும், நடிப்பிற்காகவும் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர். நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி பிறந்தநாள் இன்று.

தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.. நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.. நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி பிறந்தநாள் இன்று!

திருவிதாங்கூர் சகோதரிகள்

கதகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற நடனக்கலைகளை முறையாக பயின்று தேர்ந்தவர் நடிகை பத்மினி. 1932 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி கேரளாவில் பிறந்த பத்மினி தென்னிந்திய மொழிகளில் நடித்து தனித்துவத்துடன் புகழ்பெற்றவர். தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளியாக திகழ்ந்தவர் நடிகை பத்மினி. 

அதுவும் பத்மினியுடன் உடன் பிறந்த சகோதரிகளான ராகினி, லலிதா ஆகியோரும் நடனத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்களை திருவிதாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் சினிமாவில் கொடிகட்டி பறந்து வெற்றி வாகை சூடியவர் நடிகை பத்மினி மட்டுமே. தனது 7 வயதிலேயே நாட்டிய அரங்கேற்றம் முடித்த பத்மினி, தனது 17 வயதில் கல்பனா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார்.

நடனம் பார்த்து வாய்பிளக்கதவர்கள் இல்லை

தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ள பத்மினி பெங்காலி, ரஷ்ய மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். அவர் அறிமுகமான முதல் படமே பெங்காலி மொழி படமாம். வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் இன்றளவும் ஒரு வியப்பாகவே பார்க்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடல் மூலம் பத்மினி யார் என்பதை நிரூபித்து இருப்பார். பாடலில் வரும் போட்டி நடனம்  பார்த்து வாய்பிளக்கதவர்கள் இல்லை அந்த அளவுக்கு நடனத்தில வல்லவர்.

பத்மினியின் சினிமா பயணத்தில் சிவாஜியுடன் மட்டும் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜியுடன் மட்டும் ஜோடியாக நடித்திருந்தார் பத்மினி. ஒருபுறம், சிவாஜி- பத்மினி சூப்பர் ஜோடி என கொண்டாடிய ரசிகர்கள், எம்ஜிஆருக்கு ஏற்ற ஜோடியாக மதுரை வீரன், மன்னாதிமன்னன் திரைப்படங்களில் பத்மினியை கண்டு ரசித்தனர்.

எம்.ஜி.ஆர்.,பத்மினி ஜோடி சேர்ந்து நடித்த முதல் படம்

அதுவும் மன்னாதிமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு’ என்ற பாடல் காட்சியில் நாட்டிய பேரொளியாக பத்மினி, அழகுமிகுந்த ராஜகுமாரனாக எம்ஜிஆர் தோன்றும் காட்சியை இன்றும் ரசிக்கும் பட்டாளம் உள்ளது. எம்.ஜி.ஆர்.,பத்மினி ஜோடி சேர்ந்து நடித்த முதல் படம் மதுரை வீரன். எம்.ஜி.ஆர்.,யின் திரைப்பட வாழ்க்கையில் அந்த படத்தை முக்கியமான படம் என்று கூட கூறலாம்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படமும், அதன் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமான சிவாஜி கணேசன், மோகனாம்பாளாக பத்மினியும் இன்றைக்கும் நம் மனதில் நடனமாடிதான் கொண்டிருக்கிறார்கள். மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் காட்சியில், முகத்தில் நவரசங்களை காட்டும் பத்மினியின் அழகு கொள்ளை கொள்ள வைக்கும். தனித்துவமும் வாய்ந்த பத்மினியின் கண்கள் ஒருபக்கம் நடிக்க, கால்கள் வேறொரு விதமாக நாட்டியமாடும்.

சிவாஜியுடன் இவர் நடித்த தங்கப்பதுமை இவரின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது. அழகிலும் நடிப்பிலும் திறமையிலும் பதுமை என்று கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். முகபாவனைகள், தெள்ளத்தெளிவான வசன உச்சரிப்புகளால் பத்மினி தனியிடம் பிடித்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜோடி போட்டு நடித்த சித்தி படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் மறந்துவிடமுடியாது. ஒவ்வொரு காட்சியிலும் பத்மினி, விஸ்வரூபமெடுத்துக் கொண்டே இருப்பார்.

இன்று பத்மினி பிறந்தநாள்

வியட்நாம் வீடு திரைப்படத்தில் பிரஸ்டீஜ் பத்மநாபனின் மனைவி சாவித்திரியாக வாழ்ந்து காட்டியிருப்பார் பத்மினி. மடிசார் புடவையுடன் உடல்மொழியால், அன்பும் பணிவுமாக நிற்பதும் என அற்புதத் தம்பதியாக இருவருமே வாழ்ந்து காட்டியிருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’உன் கண்ணில் நீர்வழிந்தால்’ பாடலைக்கேட்டு கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு அருமையாக நடிப்பை வெளிபடுத்தி அசத்தி இருப்பார். 

நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி

பூவே பூச்சூடவா படத்தில் பாசத்துக்கு ஏங்கும் பூங்காவனத் தம்மாவாக நடித்து அசத்தி இருப்பார். ராமச்சந்திரன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட பின் அமெரிக்காவில் செட்டில் ஆனார் பத்மினி. அங்கு நடன பள்ளி ஒன்றை நிறுவி, முறைப்படி பரதநாட்டியம் பயிற்றுவித்தார் பத்மினி.பத்மினி மற்றும் ராமச்சந்திரன் தம்பதிக்கு ஒரே மகன், அவரது பெயர் பிரேம் ஆனந்த். மகனை வளர்ப்பதிலும், குடும்பத்தை பார்த்துக்கொள்வதிலும் கவனத்தை செலுத்தி வந்தார் நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி.

250 படங்களுக்கு மேல் நடித்த நடிகை பத்மினி, தனது நடனத்திற்காகவும், நடிப்பிற்காகவும் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர். 2006 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இன்று பத்மினி  பிறந்தநாள். இன்றைய தினம் அவரை நினைவுகூறுவோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.