Tamil Movies: இரட்டை கதை சொல்லல் பாணி 12பி, பான் இந்தியா அந்தஸ்து பரியேறும் பெருமாள்!இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
பெரிய ஹீரோக்கள் படங்கள் இல்லை என்றாலும் இரட்டை கதை சொல்லல் பாணியில் உருவான 12பி, பான் இந்தியா அந்தஸ்து பரியேறும் பெருமாள் உள்பட இன்று வெளியான தமிழ் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
செப்டம்பர் 28ஆம் தேதியான இன்று தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் பான் இந்தியா அளவில் பேசப்பட்ட பரியேறும் பெருமாள், வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான 12பி உள்பட இன்றைய நாளில் வெளியான படங்களின் லிஸ்டை பார்க்கலாம்
கட்டிலா தொட்டிலா
கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நா மெச்சிடா ஹுடுகா என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் கட்டிலா தொட்டிலா திரைப்படம். 1973இல் வெளியான ஜெமினி கணேசன், பானுமதி, சிவக்குமார், கல்பனா, ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் விவாகரத்து பற்றிய கதையம்சத்தில் உருவாகியிருந்தது. கன்னடத்தை போல் தமிழிலும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 51 ஆண்டுகள் ஆகிறது.
12பி
நடிகர் ஷாம் அறிமுக படமாக வெளியான 12பி படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக அறிமுகமான இந்த படம் 2001இல் வெளியானது. அதேபோல் கதையின் நாயகனாக ஷாம் பேருந்தை பிடிப்பதுபோல் படத்தின் முதல் காட்சி தொடங்கும். இதில் அவர் பேருந்தை பிடித்தால் ஒரு கதையும், பிடிக்காவிட்டால் இன்னொரு கதையும் என வித்தியாசமான திரைக்கதை அம்சத்தில் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
படத்தில் சிம்ரன், ஜோதிகா என இரு ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள். விவேக் காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார். படத்துக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியிருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பின.
1978இல் வெளியான அமெரிக்க படமான ஸ்லைடிங் டோர்ஸ் படத்தை அடிப்படையாக கொண்டு இரட்டை கதை சொல்லல் பாணியில் படம் உருவாகியிருக்கும். இந்த வித்தியாசமான முயற்சி ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழில் சிறந்த ரெமான்ஸ் படங்களில் ஒன்றாக இருக்கும் 12பி வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது.
மலைக்கோட்டை
விஷால், பிரியாமணி நடிப்பில் ஆக்ஷன் காமெடி கலந்த பக்கா கமர்ஷியல் படமாக மலைக்கோட்டை 2007இல் வெளியானது. பூபதி பாண்டியன் இயக்கியிருந்த இந்த படத்தில் தேவராஜ், அஜய், ஆஷிஷ் வித்யார்த்தி, ஊர்வசி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். மாஸ் மசாலா படமாக ரசிகர்களை கவர்ந்து சராசரி வெற்றியை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது.
தாண்டவம்
தெய்வத்திருமகள் வெற்றிக்கு பின்னர் விக்ரம் - ஏ.எல். விஜய் மீண்டும் கூட்டணி அமைத்த படம் தாண்டவம். இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி, எமி ஜாக்சன், லட்சுமி ராய், நாசர், ஜெகபதி பாபு உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
பழிக்கு பழி கதையாக இருந்தாலும் பார்வையற்றவராக வரும் விக்ரம் எக்கோலொக்கேஷன் என்கிற உணர்திறனை வைத்து வில்லன்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை பாணியில் உருவாக்கியிருப்பார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.
பரியேறும் பெருமாள்
மாரி செல்வராஜ் அறிமுக படமான பரியேறும் பெருமாள் 2018இல் வெளியானது. கிராமத்து பின்னணியில் சாதிய பாகுபாடு, அதனால் பாதிக்கப்படும் இளைஞனின் கதையை எமோஷனலாக சொன்ன படமாக உருவாகியிருந்த இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, மறைந்த நடிகர் மாரிமுத்து, லிஜேஷ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் பான் இந்தியா அளவில் பேசப்பட்ட இந்த படம் சூப்பர் ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட பாராட்டுகளை குவித்தது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்று, தமிழில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்ற அந்தஸ்தை பெற்றதோடு பிலிம்பேர் உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற பரியேறும் பெருமாள் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்