திருவண்ணாமலையில் மண் சரிவு.. 7 பேர் பலி.. பதறவைக்குது.. உரிய வசதிகளை ஏற்படுத்திதாங்க.. அரசிடம் கோரிக்கை வைத்த விஜய்
திருவண்ணாமலையில் மண் சரிவு.. 7 பேர் பலி.. பதறவைக்குது.. உரிய வசதிகளை ஏற்படுத்திதாங்க.. அரசிடம் கோரிக்கை வைத்த விஜய்யின் பதிவு வைரல் ஆகிவருகிறது.
திருவண்ணாமலையில் உள்ள தீப மலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இத்துயர சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘’திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப்பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
உரிய பாதுகாப்பினை தமிழக அரசு ஏற்படுத்தித்தர வேண்டும்: விஜய்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
உச்ச நடிகர் கட்சி ஆரம்பித்த கதை:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவளிக்கவும் இல்லை. அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து களப்பணியாற்றிய விஜய்:
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடந்தது.
அதில் பேசிய விஜய் திராவிடமும் தமிழ்த்தேசியமும் தனது இரு கண்கள் என்றும், பிறப்பால் அனைவரும் சமம் எனவும், நம்முடன் பங்கு சேரும் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் எனவும், இறை நம்பிக்கைக்கு எதிரானவர்கள் தாங்கள் அல்ல என்றும் தெரிவித்தார். த.வெ.க தலைவர் விஜய்யின் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியது.
டாபிக்ஸ்