எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படத்தின் மவுசு குறையாது.. நகைச்சுவையில் அசத்திய ரஜினி.. 43ம் ஆண்டில் தில்லு முல்லு!-rajinikanth comedy flick thillu mullu completed 43 years today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படத்தின் மவுசு குறையாது.. நகைச்சுவையில் அசத்திய ரஜினி.. 43ம் ஆண்டில் தில்லு முல்லு!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படத்தின் மவுசு குறையாது.. நகைச்சுவையில் அசத்திய ரஜினி.. 43ம் ஆண்டில் தில்லு முல்லு!

Divya Sekar HT Tamil
May 01, 2024 06:00 AM IST

43 Years Of Thillu Mullu : ரஜினி-தேங்காய் சீனிவாசன் காம்போ அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். பின்னாலில் ரசிகர்கள் இவர்களது காம்போ வராதா என எதிர்பார்க்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அமைந்திருந்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகள் ஆகிறது.

43ம் ஆண்டில் தில்லு முல்லு
43ம் ஆண்டில் தில்லு முல்லு

இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து அதனை வெற்றி அடைய செய்துதிருப்பார் இயக்குனர் பாலச்சந்தர். இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்ததில் பாலச்சந்தர் உதவியாளர் ஆனந்து, வசனகர்த்தாவான மறைந்த இயக்குனர் விசுவின் பணி அளப்பரியது என்றே சொல்லலாம். லீவுக்காக பொய் சொல்லி அந்த பொய்யை உண்மையாக்க மேலும் பல பொய்களை அடுக்கிக்கொண்டு அதனை நகைச்சுவை கலந்து கலகலப்பாக கொடுத்திருப்பார் பாலச்சந்தர். இப்படத்தில் குறிப்பாக வசனம் அவ்வளவு அருமையாக அமைந்திருக்கும்.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசனை நம்ப வைத்து தில்லுமுல்லு செய்யும் ரஜினியின் காட்சி வயிறு குலுங்கு குலுங்க சிரிக்க வைக்கும். குறிப்பாக மீசை வைத்தால் சந்திரன், மீசை இல்லை என்றால் இந்திரன் என தேங்காய் சீனிவாசனை முட்டாளாக்கும் விதமாக ரஜினி செய்யும் இந்த தில்லுமுல்லு காரியம் பார்ப்போரை சிரிப்பலையில் ஆழ்த்தும். குறிப்பாக ரஜினியை தேங்காய் சீனிவாசன் இன்டர்வியூ செய்யும் போது வரும் காட்சி, அதில் உங்கள் பெயர் என்ன என தேங்காய் சீனிவாசன் கேட்கும்போது அதற்கு ரஜினி அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் என கூறும் தோனியும், அதேபோல தேங்காய் சீனிவாசன் உங்கள் பெயரை யார் கேட்டாலும் இப்படி தான் சொல்வீர்களா என கேட்கும் தோனியும் அவ்வளவு அருமையாக அமைந்திருக்கும்.

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அலுவலகத்தில் இருந்து விடுப்பு கேட்க ரஜினி கூறிய பொய் அதனை நம்பி லீவு கொடுத்த தேங்காய் சீனிவாசன் பின்னர் புட்பால் மேட்சில் ரஜினியை தேங்காய் சீனிவாசன் பார்த்து அலுவலகத்திற்கு வந்து ரஜினியை அழைத்து கேட்க அப்பொழுதுதான் என்னுடைய தம்பி இந்திரன் என ஒரு புது கதையை கூறி அதிலிருந்து தப்பிக்க பொய் கூறுவார். இந்த பொய்யை மறைக்க அவர் மேலும் மேலும் பொய் சொல்லி அதனை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அதேபோல காமெடிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இப்படத்தில் காமெடிக்கு என தனியாக எந்த ஒரு கதாபாத்திரமும் இல்லை. படத்தில் தோன்றி அனைத்து கதாபாத்திரங்களிலும் ஏதோ ஒரு காட்சியில் நகைச்சுவை வெளிப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதுவே இப்படத்தின் தனித்துவமான விஷயம்.

அதேபோல ரஜினியின் அம்மாவாக நடிக்கும் சௌகார் ஜானகி ரஜினியின் தில்லு முல்லுக்கு துணை போகும் விதமாக இரு வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தில் நாகேஷ் நாகேஷ்சாக நடித்திருப்பார் அதேபோல கடைசியில் கிளைமாக்ஸ் இல் கமல் கெஸ்ட் ரோலில் வந்து எண்டரி கொடுப்பார். அந்த காட்சிகளை கலகலப்பாக அமைத்திருப்பார் படத்தின் இயக்குனர் கே பாலச்சந்தர்.

இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுத எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருப்பார். இப்படத்தில் அனைத்து பாடல்களும் செம ஹிட். குறிப்பாக மெலடி பிரியர்களுக்கு ராகங்கள் பதினாறு என்ற பாடலும், அதே போல தில்லுமுல்லு தில்லுமுல்லு என கலகலப்பாக வரும் அந்த இசையும் நம்மளை மெய்மறக்கச் செய்யும்.

இப்படத்தில் ரஜினி-தேங்காய் சீனிவாசன் காம்போ அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். பின்னாலில் ரசிகர்கள் இவர்களது காம்போ வராதா என எதிர்பார்க்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அமைந்திருந்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகள் ஆகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படத்தின் மவுசு குறையாது என்றே சொல்லலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.