அமரன் படத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்புடன் படம் பார்க்கும் மக்கள்! என்னதான் நடக்கிறது?
அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததற்கு எதிரப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுவதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
படத்திற்கு தொடர்ந்து வரும் மிரட்டல்
அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ராயப்பேட்டை, விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
இதையடுத்து, அமரன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கள் முன் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தியேட்டர் முன் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், படம் பார்க்க வரும் ரசிகர்கள் சற்று பதற்றத்துடனே தியேட்டருக்குள் செல்கின்றனர்.
இராணுவ வீரரின் உண்மைக் கதை
இப்படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்
நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. இதனால், ஏற்கனவே படம் பார்த்தவர்களும் கூட, இவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தியேட்டருக்கு திரும்பத் திரும்ப வருகின்றனர்.
வாழ்த்துகளும் விமர்சனங்களும்
அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார் என திரையுலகினர் பலர் பாராட்டி வருகின்றனர். படத்தை பார்த்த ரஜினிகாந்த், தன்னால் அழுகையை அடக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவினருக்கு பிக் சல்யூட் எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயனை ராணுவ வீரர்களும் பாராட்டி உள்ளனர். அவர் நடிப்பதற்கு பதிலாக, ராணுவத்திற்கு வந்திருக்க வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில், இந்தப் படத்தில் சிபிஆர்எஃப் வீரர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது, மேஜர் முகுந்த் வரசதராஜனின் சாதி அடையாளமான பிராமணத்தை காட்டாமல் திரித்து உள்ளனர். அவர் குடும்பத்தினர் குறித்த தவறான தகவல்கள் உள்ளது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து உள்ளது என பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.