மேட்ச் வின்னரா மேஜர் முகுந்த்? தீபாவளி ரேஸில் அமரனுக்கு எந்த இடம்? முதல் காட்சி விமர்சனம் இதோ!
வாழ்க்கையை வரலாறு என்பதற்காக ஜவ்வாக இழுக்காமல் விறுவிறுப்பாக அவர் அமைத்த திரைக்கதை படத்தை போரடிக்காமல் பார்த்துக் கொண்டது. பாடல்களை விட பின்னணி இசையில் ஜிவி தனது முத்திரையை ஆழமாக பதித்து இருக்கிறார்.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம்தான் அமரன். முகுந்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
அமரன் கதை இது தான்
மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் நுழைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது, அதற்காக அவர் வீட்டில் எப்படியான எதிர்ப்பை சந்தித்தார். இதற்கிடையே சிக்கி இருக்கும் அவரது காதல் என்ன ஆனது? ராணுவத்தில் அவர் எப்படியான சாகசங்களை செய்தார்? காஷ்மீரில் ஏன் அசாதாரண சூழ் நிலை நிலவுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் அமரன் படத்தின் கதை!
நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. அவரது மனைவி சாய் பல்லவியின் நடிப்பில் அவ்வளவு நிஜம். முகுந்த் மீது இந்து வைத்திருந்த அப்பழுக்கற்ற காதலை, ஆத்மார்த்தமான அன்பை, அவர் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் விதம் நடிப்பில் அவருக்கும் இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறது. இதர கதாபாத்திரங்ளும் உண்மைக்கு நெருக்கமாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து இருக்கின்றனர்.