Nandhan: ஜட்டியோடு ஓடவிட்டு அடிச்சாங்க... சுயமரியாதையே இல்லை... கண்ணீருடன் உருகிய தலைவர்கள்!
Nandhan: ஆதிக்க வர்க்கத்தின் பிடியிலுள்ள பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் குறைத்து பேசிய நந்தன் திரைப்படத்தை பார்வையிட்ட பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு நடந்த துயர்களை கண்ணீருடன் பேசி உருகியுள்ள வீடியோ அப்படத்தின் இயக்குநர் இரா.சரவணனன் பகிர்ந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன். நடிகர் சசிகுமார்- இயக்குநர் இரா.சரவணன் கூட்டணியில் வெளியான இத்திரைப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
நடிகர் பாலாஜி சக்திவேல் ஆதிக்க வர்க்க அதிகாரம் மூலம் எப்படி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். திடீரென்று, அந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை தலைவராக்கினால் என்ன நடக்கும் என்ற கதையை இயக்குநர் சுவாரசியம் நிறைந்த கதைக்களமாக அமைத்துள்ளார்.
இந்த படத்தில் அம்பேத்ராஜாக வரும் சசிகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார். மேலும், இவர் படத்தில் ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி அளித்தாரா? அவரது மக்களின் உரிமைகளை மீட்டாரா என்பதே மீதிக்கதை.
முன்னதாக நந்தன் படத்தை பார்த்துவிட்டு, அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில், தற்போது, பல்வேறு ஊர்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கும் பட்டியலின மக்கள் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு, கண்ணீர் மல்க தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை இயக்குநர் இரா.சரவணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்ணீர் வாக்குமூலம்
வட குரும்பூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைலர் இந்திரா காந்தி படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எங்களைப் போன்று அடிமையாகவும் இருக்கக் கூடாது. எங்களைப் போன்று யாரும் கொடுமையையும் அனுபவிக்கக் கூடாது. ஏன் இந்தப் பதவிக்கு வந்தாோம். எதற்காக இந்த உள்ளாட்சி தேர்தலை வைத்தார்கள் என பல நாட்கள் வருந்தியுள்ளோம் என்றார்.
சுயமரியாதையை இழந்துள்ளோம்
எல்ராம்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவரான வித்யா பேசுகையில், எங்களுக்கு சுயமரியாதை என்பது இருந்ததே இல்லை. சுயமரியாதையை இழந்துவிட்டு தான் இந்தப் பதவியில் அமர்ந்துள்ளோம். நம்மால் மொத்த குடும்பமே கௌரவத்தை இழந்துள்ளது. இதற்கு மேல் இதனை பொறுக்க முடியாது. பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற எல்லைக்கு எல்லாம் தள்ளப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
இரண்டரை வருடமாக நடக்கும் போராட்டம்
தேவியகரம் ஊராட்சி மன்றத் தலைவரான கலையரசி பேசுகையில், ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று இரண்டரை வருடம் ஆகியும் என்னால் ஒரு போர்டு வைக்க முடியவில்லை. யார் யாரிடமோ உதவி கேட்டும் ஒன்றும் ஆகவில்லை. இருந்தும் நான் தனிப்பட்ட முறையில் போர்டு வைத்து வருகிறேன் எனக் கூறும் போதே, அவருடைய பெயர் எழுதிய போர்டில் சிலர் சாணியை அடித்து சென்ற வீடியோ ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும், இந்தப் படத்தில் வரும் சுடுகாட்டுப் பிரச்சனை எங்கள் ஊரிலும் இருக்கிறது. இதற்காக 3 வருடமாக போராடி வருகிறேன். ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்றார் ஒரு நபர்.
ஜட்டியுடன் ஓடவிட்டு அடி
இந்தப் படம் குறித்து பேசிய மற்றொருவர், நான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது மக்கள் கண்முன்னே என்னை செருப்பு காலால் எட்டி உதைத்து அடித்துள்ளனர். ஜட்டியுடன் ஓட ஓட அடித்துள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து ரசிக்கின்றனர். இந்தப் படத்திலும் அதுபோன்ற காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதைக் கண்டபோது, நான் அனுபவித்த வலி எனக்கு நினைவு வருகிறது என தங்கள் வாழ்க்கையில் நடந்த வேதனைகளை பகிர்ந்துள்ளார்.
இயக்குநரின் பதிவு
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இயக்குநர் இரா.சரவணன், ‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்… என பதிவிட்டுள்ளார்.