'இங்க நீங்க எப்படி பெரிய தலக்கட்டோ.. அங்க அவுங்க' ஓடிடி ரிலீஸை ஓரம்கட்டி வைத்த துல்கரின் லக்கி பாஸ்கர்!
அமரன் படத்தின் வசூல் அதிகரிப்பதால் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போனது போல், லக்கி பாஸ்கர் படத்தின் ஓடிடி ரிலீஸும் தற்போது தள்ளிப் போயுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் போன்ற படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின.
நல்ல வரவேற்பு
இதில், பிரதர் படமும், பிளடி பெக்கர் படமும் மக்களால் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் தோல்வியை சந்தித்து தியேட்டரை விட்டே ஓடின. இந்நிலையில், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான அமரனும், வங்கி ஊழியர் செய்யும் பொருளாதார குற்றத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட லக்கி பாஸ்கரும் திரைப்படம் வெளியாகி 18 நாட்களைக் கடந்தும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
100 கோடியை கடந்த படங்கள்
இதில், அமரன் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைப் பெற உள்ள நிலையில், லக்கி பாஸ்கர் படம் 100 கோடியைக் கடந்து வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இது சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான் சினிமா வரலாற்றில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள் நிறைவடைந்தாலே அந்தப் படம் ஓடிடியில் வெளியாகிவிடும். ஆனால், அமரன் படமும், லக்கி பாஸ்கர் படமும் 18 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்தப் படங்களுக்கு பின்னால் வெளியான கங்குவா,மட்கா போன்ற திரைப்படங்களால் இந்த இரு படங்களின் வசூல் பாதிக்கப்படுமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் இவை தொடர்ந்து வசூலை குவித்து வந்தன.
ஓடிடி ரிலீஸ் தள்ளி வைப்பு
இந்நிலையில், முன்னதாக அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை நெட்பிளிக்ஸ் தளம் தள்ளி வைத்த நிலையில் தற்போது லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸையும் தள்ளி வைத்துள்ளது. இதையடுத்து லக்கி பாஸ்கர் திரைப்படம் நவம்பர் இறுதி வாரத்தில் அல்லாமல், டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியாக வாய்ப்புள்லதாகத் தெரிகிறது. நெட்பிளிக்ஸ் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை நல்ல விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.
லக்கி பாஸ்கர் படக்குழு
நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி பொருளாதார குற்றப் பின்னணியை மையமாக வைத்து இயக்கிய படம் லக்கி பாஸ்கர். இந்தப் படம் தமிழ்நாட்டைக் காட்டிலும் தெலுங்கில் நல்ல ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லக்கி பாஸ்கர் படத்தின் கதை
தனியார் வங்கியில் பணி புரியும் துல்கர் சல்மான் அவரது குடும்ப வறுமையின் காரணமாக ப்ரோமோஷன்காக காத்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் ஊழியர்களின் அரசியலால் அந்த ப்ரோமோஷன் வேறு ஒரு நபருக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக வங்கியில் இருந்து பணத்தை திருடி வெளியில் ராம்கியுடன் இணைந்து தொழில் செய்கிறார்.
இந்த தொழிலில் பெறும் தொடர் லாபத்தால் மீண்டும் வங்கியில் திருடுகிறார். திருடிய பணத்தை திருப்பி அங்கேயே வைத்து விடுகிறார். ஒரு நாளில் இது தவறான உணரும் துல்கர் சல்மான் திருடுவதை நிறுத்தி விடுகிறாரா? இல்லை தொடர்கிறாரா? என்பதே மீதி கதை முழுக்க முழுக்க குற்ற பின்னணியை கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது. சுவாரசியமான திரைக்கதை நேர்த்தியான நடிப்பு சரியான வசனங்கள் என படம் அனைத்து துறைகளிலும் வெளுத்து வாங்குகிறது. இதனால் படத்திற்கான வரவேற்பு அனைத்து மக்களிடமிருந்தும் கிடைத்து வருகிறது.
டாபிக்ஸ்