தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maharaja Movie Review: மகாராஜாவா? பரதேசியா? ராஜ திருமகன் சு. செந்தில் குமரனின் அலசி ஆராய்ந்த ‘360 டிகிரி’ திரைவிமர்சனம்!

Maharaja Movie Review: மகாராஜாவா? பரதேசியா? ராஜ திருமகன் சு. செந்தில் குமரனின் அலசி ஆராய்ந்த ‘360 டிகிரி’ திரைவிமர்சனம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jun 13, 2024 10:43 AM IST

Maharaja Movie Review: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்றாலும் , படத்தில் நிறைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது . அதற்காக இயக்குனர் நித்திலனுக்குப் பாராட்டுக்கள் . அதே போல வீட்டிலும் போலீஸ் ஸ்டேஷனிலும் பாம்பு , டைரக்டோரியல் எலிமென்ட் ஆகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் விதமும் சிறப்பு.

Maharaja Movie Review: மகாராஜாவா? பரதேசியா? ராஜ திருமகன் சு. செந்தில் குமரனின் அலசி ஆராய்ந்த ‘360 டிகிரி’ திரைவிமர்சனம்!
Maharaja Movie Review: மகாராஜாவா? பரதேசியா? ராஜ திருமகன் சு. செந்தில் குமரனின் அலசி ஆராய்ந்த ‘360 டிகிரி’ திரைவிமர்சனம்!

விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா பற்றி, நடிகரும் பிரபல நடிகர் இயக்குநர் திரை எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ராஜ திருமகன் சு.செந்தில் குமரன் வழங்கும் ஆழமான திரைவிமர்சனம்!

டீன் ஏஜ் மகளோடு வாழ்கிற சவரக்கடைத் தொழிலாளி ஒருவர் (விஜய் சேதுபதி) தனது மகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வெளியூர் போயிருக்கும் நிலையில் , போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தன் வீட்டில் இருந்த லக்ஷ்மியைக் காணவில்லை என்கிறார் . லக்ஷ்மி என்பது பெண்ணா? பணமா? நகையா? விலை உயர்ந்த பொருளா என்று போலீஸ் கேட்டால் , அவர் சொல்வது ஒரு பழைய குப்பைத் தொட்டியை .

ஹீரோவும் வில்லனும்!

போலீஸ் எள்ளி நகையாட , அதைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் பல லட்சங்கள் தருகிறேன் என்கிறார் . பணம் தருகிறேன் என்றதும் போலீஸ் அதிகாரி ( நட்டி நட்ராஜ்) அதைக் கண்டு பிடித்துத் தருவது.... இல்லை என்றால் அது போலவே ஒரு டூப்ளிகேட் செய்து கொடுத்து விட்டு , லூசு மாதிரி இருக்கும் அந்த சவரத் தொழிலாளியிடம் பணத்தைக் கறந்து விடுவது என்ற முடிவில் தனது சகாக்களுடன் (அருள்தாஸ், முனீஸ்காந்த்) களம் இறங்குகிறார் . போலீஸ் இன்ஃபார்மரும் திருடனுமான ஒருவன் (சிங்கம் புலி) உடன் உதவுகிறான்

இரவில் வீடு புகுந்து அங்கு உள்ளோரைக் அடித்து உதைத்து கட்டிப் போட்டு நகை , பணம் எல்லாம் திருடிக் கொள்வதோடு, பாலியல் அக்கிரமம் செய்வது , அந்த வீட்டில் கறி சமைத்து சாப்பிடுவது , கடைசியில் கொன்று விடுவது என்று கொடூரமாக நடந்து கொள்ளும் ஒருவன் ( அனுராக் காஷ்யப் ), இன்னொரு பக்கம் காதல் மனைவி ( அபிராமி), ஒரு பெண் குழந்தை என்று குடும்ப முகம் காட்டுகிறான் .

ட்ரெண்டிங் செய்திகள்

தனது ஆதர்ஷ ஹீரோ குணால் கொடுத்த கண்ணாடியை , வண்டியை கார் சர்வீசுக்கு கொடுத்த நிலையில் அங்கு வேலை செய்பவன் எடுத்துக் கொண்டான் / தொலைத்து விட்டான் என்று கவுன்சிலர் ஒருவர், அவனைப் போட்டு அடிக்க, அவன் இரவில் பாருக்கு வந்து கவுன்சிலரைப் போட்டு பின்னி எடுக்கிறான். எல்லா சம்பவமும் ஒரு சேரும் புள்ளி என்ன என்பதே மகாராஜா.

விஜய் சேதுபதியின் 50வது படம்!

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம். எளிய குடும்பப் பின்னணி- பிடிவாத குணம் - மகள் மேல் அதீத பாசம் கொண்ட நடுத்தர வயது மனிதராக மிக சிறப்பாக நடித்துள்ளார் . வாழ்த்துகள். பாராட்டுகள் .

'தனக்கு வந்தா ரத்தம், மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி' என்று முடிவு செய்யும் இந்த மன சாட்சியற்ற உலகில் , ஒருவேளை தக்காளி சட்னி என்று நினைத்ததே ரத்தமாக இருந்தால் ...? என்ற கேள்வியை எழுப்பும் அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அபாரம். அட்டகாசம் எழுத்தாளர் நித்திலனுக்குப் பாராட்டுகள்.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்றாலும் , படத்தில் நிறைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது . அதற்காக இயக்குனர் நித்திலனுக்குப் பாராட்டுக்கள் . அதே போல வீட்டிலும் போலீஸ் ஸ்டேஷனிலும் பாம்பு , டைரக்டோரியல் எலிமென்ட் ஆகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் விதமும் சிறப்பு. அதிலும் பாத்ரூம் ஜன்னலில் இருந்து பக்கெட் நீரில் குதிக்கும் ஷாட் ஏற்படுத்தும் உணர்வு அபாரம்.

திரைக்குப் பின்னால் எப்படி?

நட்டி, அருள்தாஸ் ஆகியோர் வழக்கம் போல நிறைவாகக் செய்து இருக்க, முழுமையற்ற- பக்குவமற்ற கதாபாத்திரம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்துள்ளார் அனுராக் காஷ்யப்.முற்றிலும் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளார் சிங்கம் புலி. அசத்தலான பின்னணி இசை கொடுத்து இருக்கிறார் அஜனீஷ் லோகநாத்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வுக்கு ஏற்ப சிறப்பாக வெளிப்பட்டு உள்ளது. அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் அபாரம். நான் லீனியர் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் தெளிவு கொடுத்து இருக்கலாம் ஃபிலோமின் ராஜ் . வெகு ஜன ரசிகன் எது முன்னே எது பின்னே என்று குழம்புவான்.

இயக்குனரோடு ராம் முரளி என்பவர் சேர்ந்து வசனம் எழுதியும் வசனம் பலவீனமாகவே இருக்கிறது. இந்தக் கதைக்குத் தேவையான வசனம் எழுதப்படவில்லை. கொள்ளைக்காரனும் சவரத் தொழிலாளி மகளும் சந்தித்துப் பேசும் காட்சியை ஆவலோடு எதிர்கொள்ளத் தயாரானால் அது புஸ்வானம் ஆகிறது. உரையாடலின் பலவீனம் அப்பட்டமாக- பட்டவர்த்தனமாகத் தெரியும் இடம் அது .

பலவீனம் எது?

மிகப் பெரிய பலவீனம் படத்தில் மகாராஜாவாக இருக்க வேண்டிய திரைக்கதை பரதேசியாக இருப்பதுதான். ஒரு விபத்தில் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படவில்லை. எல்லோரும் நலம் என்றால் அதற்குக் காரணமான பொருளுக்கு தெய்வத்தன்மை கொடுக்கலாம் . அதை விலைமதிப்பற்ற ஒன்றாக நினைக்கலாம். ஆனால் தனிப்பட்ட வகையில் குடும்ப ரீதியாகப் பெரும் பேரிழப்பு ஏற்பட்ட நிலையில், வேறு ஒரு உயிரை மட்டும் காப்பாற்றிய பொருளை வணங்குதலுக்கு உரியதாக யார் நினைப்பார்கள்? 

கதையின் முக்கியச் சரடே... இப்படி ஆரம்பத்திலேயே அந்து தொங்குகிறது. படத்தின் கடைசியில் கூட அது நியாயப்படுத்தப்படுவது போன்ற ஒரு பசப்பல் இருக்கிறதே ஒழிய உண்மையில் சமன் செய்யப்படவில்லை. எளிய மனிதன் ஒருவனின் வாழ்வுப் பிரச்னையைப் பேசும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டருக்கு எதற்கு, இப்படி அவர் ஒரு பொருளைப் பிடித்தார் என்றால் நூறு பேர் சேர்ந்து இழுத்தாலும் விட மாட்டார்; பிடித்த பொருளை உடைத்துக் கொண்டுதான் அவரை இழுக்க முடியும் என்பது போன்ற .... ஒரு ஹெர்குலிஸ்தனம்? அட்லஸ் பில்டப்?

குணால் ரசிகனான கவுன்சிலர் விவகாரத்தை காமெடி என்று நினைத்து படு செயற்கையாக எடுத்து வைத்திருக்கிறார்கள் . அது எந்த வகைப்பாட்டிலும் வராமல் எரிச்சலூட்டுகிறது. அனுராக் காஷ்யப் கதாபாத்திரம் கொள்ளைக்காரன் என்பதை சலூன்கடைக் காட்சியில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் கண்டு பிடித்ததா இல்லையா? இல்லை எனில் விஜய் சேதுபதிக்கு எதற்கு அப்படி லுக்கும் நடையும்?.

கண்டுபிடித்து விட்டார் என்றால் அப்படி ஒரு கொடூர கொள்ளைக்காரன் தொலைத்த நகையை எதற்கு விஜய் சேதுபதி எதற்கு எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு கொடுக்கப் போக வேண்டும்? போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியதுதானே? சவரத் தொழிலாளி கண்டு பிடிக்கவில்லை. ஆனால் கொள்ளைக்காரன் தவறாக நினைத்துக் கொண்டான். எதுவும் தெரியாத சவரத் தொழிலாளி இயல்பாக நடந்து கொண்டது கூட கொள்ளைக்காரனுக்கு நடிப்பது போலவே பட்டது என்று நேரடியாகச் சொல்லி இருந்தால் கூட , இன்னும் நன்றாக இருந்திருக்குமே.

எங்கே குறைகள்?

சவரத் தொழிலாளி கொள்ளைக்காரன் வீட்டுக்கு வர, அதே நேரம் போலீஸ் வர , உடனே சவரத் தொழிலாளிதான் காட்டிக் கொடுத்து விட்டான் கொள்ளைக்காரன் நம்புகிறான் என்பதும்...... முதுகில் உள்ள தழும்பை வைத்து கொள்ளைக்காரன் ஓர் உண்மையை அறிவதும் எந்தக் கால சினிமா?

இருபது வருடமாக தனது மனைவிக்கும் பிள்ளைக்கும் என்ன ஆச்சு என்றே தெரியாமல் கொள்ளைக்காரன் வாழ்ந்து வந்தானா? அப்படி என்ன அவன் செவ்வாய் கிரகத்துக்கா போய் இருந்தான்?

மகாராஜா வீட்டில் இன்ஸ்பெக்டர் கேரக்டர் வெளிப்பட்ட விதமும் சிங்கம் புலி கேரக்டரின் முடிவும் மிக சிறப்பாக இருப்பதால் அங்கேயே படம் முடிந்து விட்ட உணர்வு வந்து விடுகிறது . அதன் பிறகு அனுராக் காஷ்யப் கேரக்டரைக் காட்டும்போது சலிப்பு வந்து விடுகிறது. கடைசியில் அந்தக் கொள்ளைக்காரன் தனது செயலுக்கு வருந்துவதன் பின்னால் கூட செருப்பால் அடித்துப் பல்லைக் கழட்ட வேண்டிய சுயநலமே இருக்கு.

அத்தனை ஆண்டுகளாக ஊர் முழுக்க அவன் பல வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடித்து கொலை செய்து கற்பழித்து அங்கேயே கறி ஆக்கித் தின்று விட்டு வந்த பஞ்சமா பாதகங்கள் ஒன்றுக்குக் கூட அவன் வருந்தவில்லை; திருந்தவில்லை (அல்லது குறைந்த பட்சம் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகள் விஷுவலாக வருவதை ஒரே காட்சி என்ற அளவில் குறைத்து இருக்க வேண்டும். அல்லது காட்டப்படும் கொடூரத்தின் அளவாவது குறைக்கப்பட்டு இருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை )

அப்படி இருக்க அந்த நாதாரி கேரக்டருக்கு திரைக்கதையில், என்ன சூஸ்பரிக்கு இவ்வளவு முக்கியத்துவமும் அதில் நடிப்பதற்கு அனுராக் காஷ்யப்பும்? அவன் கண்ணீரையும் எமோஷனையும் எதற்கு ஆடியன்ஸ் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்? அந்தக் கேரக்டருக்கு எதற்கு இவ்வளவு குளோரிஃபிகேஷன்? அதன் மூலம் சமுதாயத்துக்கு என்ன சொல்ல வருகிறோம் .

''நூறு கொலை ஆயிரம் கற்பழிப்பு பத்தாயிரம் கொள்ளை செய்தவன் என்றாலும் அவனுக்கும் கூட பொண்டாட்டி புள்ள இருக்கு இல்ல சார் .. என்று இழுத்து அழுத்துவதன் மூலம் இந்தப் படம் என்ன சாதிக்கிறது?

விமர்சனம் எழுதியவர்: நடிகர் இயக்குநர் திரை எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ராஜ திருமகன் சு. செந்தில் குமரன்.