தியேட்டர்ல தான் நான் மாணிக்கம்.. ஓடிடியில் பக்காவான பாட்ஷா! கங்குவா ரேஞ்சே வேற தான்!
கங்குவா திரைப்படம் தியேட்டரில் வெளியாகி பல விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஓடிடியில் அதிக பார்வையாளர்களை கடந்த படமாக உருமாறியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மோசமான விமர்சனம்
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளிவந்த கங்குவா, மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அத்துடன் அந்தப் படத்தில் நடித்தவர்களையும் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பேசி, மிரட்டல் விடுத்தனர். இதனால், படம் 2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஓடிடியில் வெளியிட முடிவு
தியேட்டரில் சுமார் 110 கோடி வசூலை மட்டுமே பெற்ற கங்குவா திரைப்படத்தை ஓடிடியில் விரைவாக வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்தது. இதன் காரணமாக டிசம்பர் 12ம் தேதிக்கு மேல் ஓடிடியில் வெளியாகும் என நினைத்த கங்குவா திரைப்படம் 4 நாட்களுக்கு முன்னரே அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது.
பொதுவாகவே, ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள் கழித்து ஓடிடியில் அப்படம் வெளியாகும். அந்த வகையில் கங்குவா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் 80 கோடி ரூபாய் கொடுத்து, வாங்கியதாகக் கூறப்படுகிறது
பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கங்குவா திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
கங்குவாவின் சாதனை
கங்குவா திரைப்படம் ஓடிடியில் வெளியான சமயத்தில் அதற்கு எதிரான விமர்சனங்கள் மேலும் வர வாய்ப்பிருப்பதாக பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படம் அமேசான் ஸ்ட்ரீமிங்கில் சாதனை ஒன்றை செய்துள்ளதாகத் தெரிகிறது.
அது என்னவென்றால், இந்தப் படம் ஓடிடியில் வெளியான ஒரு வாரத்திலேயே அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாம். அதாவது ஒரே வாரத்தில் ஒரு பில்லியன் ஸ்ட்ரீமிங் மினிட்ஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமர்சனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட படம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளது.
பட்ஜெட்டில் பாதி கூட வசூலிக்காத கங்குவா
முன்னதாக 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் வெளியான 19 நாட்கலில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 38.72 கோடி ரூபாயும் உலகளவில் ரூ.105.2 கோடி ரூபாயும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது கங்குவா படத்தின் பட்ஜெட்டில் பாதியைக் கூட வசூலிக்க முடியவில்லை.
படத்தின் தாக்கம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எழுந்தது என்றால், தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் திரையரங்குகளில் பப்ளிக் ரிவியூ எடுக்க வருபவர்களைத் தடை விதிக்கும் அளவுக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.