Kadaikutty Singam: பிரிந்த உறவுகள் எல்லாம் குடும்பத்தின் கடைசி உறுப்பினர் திருமணத்தில் சேர்ந்தால் ‘கடைக்குட்டி சிங்கம்’
Kadaikutty Singam: பிரிந்த உறவுகள் எல்லாம் குடும்பத்தின் கடைசி உறுப்பினர் திருமணத்தில் சேர்ந்தால் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம். இப்படம் வெளியாகி 6 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
Kadaikutty Singam: கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா தயாரித்து, அவரது தம்பி கார்த்தி மற்றும் சாயிஷா, சத்யராஜ், சூரி, விஜி சந்திரசேகர், பானுப்பிரியா, தீபாசங்கர், அர்த்தனா பினு, பிரியா பவானி சங்கர் எனப்பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது. இப்படத்தில் டி. இமானின் இசையும், பின்னணி இசையும் மிகப்பெரிய அளவில், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. 25 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படம் 75 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி 70 கோடி ரூபாய் வசூலித்தது. குடும்பக்கதையாக இப்படம் இருந்ததால், இப்படத்துக்கும் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளுக்குச் சென்றனர்.
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் கதை என்ன?
பெருநாழி குணசிங்கம், 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, விவசாயம் செய்துவரும் பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர்.
இவரது தந்தை ரணசிங்கம். இவரும் ஒரு பெரு விவசாயி.
30 வருடங்களுக்கு முன், ரணசிங்கம், தனது முதல் மனைவி வானவன் மாதேவியின் 4 குழந்தைகளுக்குப் பின், ஒரு ஆண் குழந்தை எதிர்பார்க்கிறார். அதற்காக,வானவன் மாதேவியின் உடன் பிறந்த தங்கை பஞ்சவன் தேவியை மணக்கிறார். ரணசிங்கத்தின் மூத்தமகள் மங்கம்மா ராணிக்கும் தாமரை மணாள செண்டையருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் தாமரை மங்கம்மா ராணியும், அவரது சித்தி பஞ்சவன் மாதேவியும் கர்ப்பமாக இருக்கின்றனர். அப்போதும், பஞ்சவன் மாதேவிக்கு பெண் குழந்தையே பிறக்கிறது. மூத்தமகளுக்குப் பையன் பிறக்கிறான்.
அப்போது திடீரென்று 8 ஆண்டுகளுக்குப் பின், வானவன் மாதேவி எதிர்பாராதவிதமாக கர்ப்பமாகி குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அவர் தான் குணசிங்கம்.
ரணசிங்கத்தின் மூத்த மருமகன் தாமரை மணாள செண்டையரின் தம்பி, மல்லிகை மணாள செண்டையரும் ரணசிங்கத்தின் இரண்டாம் மகளை கல்யாணம் செய்துகொள்கிறார். ஆனால், அவர்களுக்கு குழந்தை இல்லை. அதேபோல், தாமரை மணாள செண்டையருக்கும் மல்லிகை மணாள செண்டையருக்கும் நீடித்த பகை இருக்கிறது.
குணசிங்கத்துக்கு முறைப்பெண்களாக, மூன்றாவது அக்காவின் மகள் பூம்பொழில் செல்லம்மாவும், பஞ்சவன் மாதேவியின் பேத்தி ஆண்டாள் பிரியதர்ஷினியும் குணசிங்கத்தை மணமுடிக்க போட்டிப்போடுகின்றனர்.
ஆனால், குணசிங்கத்துக்கு முறைப்பெண்கள் மீது எந்தவொரு ஈர்ப்பும் இல்லை. ஏனென்றால், இவர்கள் இருவரும் அக்காவின் மகள் என்பதாலும், அவர்களை சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்ததாலும் மகள் போல் தான் எண்ணத்தோன்றுகிறது.
அப்போது குணசிங்கம், கண்ணிக்கினியாளை காதலிக்கிறார். இவர் தில்லைநாயகம் என்னும் செல்வந்தரின் மகள். ஒரு காலத்தில் ரணசிங்கம், தில்லை நாயகத்தின் தங்கையை மணமுடிக்க ஆசைப்பட்டு, கல்யாணம் முறிந்துபோய்விட்டது. இதனால் இரு குடும்பங்களுக்கு இடையில் பகை இருக்கிறது. இதற்கிடையே கண்ணிக்கினியாளை மருமகள் ஆக்க ரணசிங்கம் சம்மதிக்கிறார். ஆனால், அதற்கு தனது மகன் குணசிங்கம் அனைத்து அக்காக்களின் சம்மதம்பெறவேண்டும் என்று கட்டளையிடுகிறார். அதேபோல், கண்ணுக்கினியாளின் மாமா கொடியரசுவின் சம்மதத்தையும் பெறவேண்டும் என்று சொல்கிறார். கொடியரசு, தான் ஜெயிலில் இருப்பதற்குக் காரணம் ரணசிங்கம் தான் என நினைக்கிறார்.இதனால், ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும் பழிவாங்கத்துடிக்கிறார்.
இதற்கிடையே குணசிங்கம் தனது பாட்டிக்கான ஒரு விழாவில், அனைத்து சொந்தபந்தங்களையும் ஒன்றிணைக்கிறார். தான் ஏன் தனது அக்காக்களின் மகளைத் திருமணம் செய்துகொள்ளமுடியவில்லை என்பதையும், அவர்களைத் தான் தன் பிள்ளைகளைப் போல் பார்த்ததையும் சொல்கிறார்.
இறுதியில், கொடியரசு குணசிங்கத்தால் மீண்டும் ஜெயிலுக்குச் செல்கிறார். கடைசியாக குடும்பத்திற்குள் இருந்த பகைகளை எல்லாம் மறக்கடிக்கச்செய்து, குணசிங்கம் தன் திருமணத்தில் ஒன்று சேர்க்கிறார் என்றும், தன் காதலி கண்ணுக்கினியாளை எப்படி கரம்பிடிக்கிறார் என்பதும் தான் இறுதிக்கதை!
கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் பெருநாழி குணசிங்கமாக கார்த்தியும், பெருநாழி ரணசிங்கமாக சத்யராஜூம், வானவன் மாதேவியாக விஜி சந்திரசேகரும், பஞ்சவன் மாதேவியாக பானுப்பிரியாவும், கண்ணுக்கினியாளாக சாயிஷாவும் நடித்து இருந்தனர். மூன்றாவது அக்காவின் மகள் பூம்பொழில் செல்லம்மாவாக பிரியா பவானி சங்கரும்,பஞ்சவன் மாதேவியின்பேத்தியான அர்த்தனா பினுவும் நடித்துள்ளனர். மூத்தமகள் மங்கம்மா ராணியாக மெளனிகாவும், தாமரை மணாள செண்டையராக சரவணனும், மல்லிகை மணாள செண்டையராக ஜி.மாரிமுத்துவும் நடித்துள்ளனர். மேலும், தில்லைநாயகமாக பொன் வண்ணனும், மங்கம்மா ராணியும் மகனாக சூரியும் நடித்துள்ளனர்.
டாபிக்ஸ்