39 Years of Un Kannil Neer Vazhindal: மெளனிகா அறிமுகம்! ரஜினிகாந்த் - பாலுமகேந்திரா காம்போவின் ஒரே படம் - என்ன ஸ்பெஷல்?
ரஜினிகாந்த் - பாலுமகேந்திரா காம்போவின் ஒரே படம் ஆக இருக்கும் உன் கண்ணில் நீர் வழிந்தால், மெளனிகா அறிமுகம் ஆன படமாகவும் உள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய இந்த படம் ரஜினி ரசிகர்களால் கூட மறக்ககூடிய படமாக உள்ளது.
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ஜனரஞ்சக படங்களில் நீங்கள் கேட்டவை படத்துக்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடித்த இந்த உன் கண்ணில் நீர் வழிந்தால் படம் அமைந்துள்ளது. பாலுமகேந்திரா - ரஜினி கூட்டணியில் உருவான ஒரே படமாக இந்த படம் உள்ளது.
பாலு மகேந்திராவின் மற்ற படங்களை போல் ஆஃப் பீட்டாக இல்லாமல் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்து கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது.
கொலைக்கு பின்னணியில் இருக்கும் முடிச்சுகள்
இந்த படத்தில் நேர்மையான போலீஸ் ஆபிசராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். உயர் அதிகாரியான செந்தாமை செய்யும் விஷயங்கள் பற்றி அறிந்த உதவி அதிகாரியான ஒய்.ஜி. மகேந்திரன் கொல்லப்படுகிறார். இந்த பழி ரஜினியின் மீது சுமத்தப்பட அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் கொல்லப்பட்டதற்கான காரணம், செந்தாமைரையின் வில்லத்தனம் ஆகிய முடிச்சுகள் கண்டறிந்து தான் குற்றமற்றவன் என ரஜினி நிருபிப்பது தான் படத்தின் கதை.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்திருப்பார். நடிப்புடன் தனது அழகான கண்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். விகே ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
நடிகை மெளனிகாவுக்கு இதுதான் அறிமுக படமாகும். இந்த படத்தில் இருந்து தான் பாலுமகேந்திரா - மெளனிகா இடையிலான உறவு தொடங்கியதாக கூறப்படுகிறது.
பாலுமகேந்திரா ஸ்டைல்
என்னதான் கமர்ஷியல் கதையாக இருந்தாலும் பாலுமகேந்திரா தனது ஸ்டைல் ஒளிப்பதிவு, மேக்கிங்கை இந்த படத்திலும் கையாண்டிருப்பார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் குளிர்ச்சி மிகுந்த சூழலில் ஊட்டியில் படமாக்கியிருப்பார்கள். நீங்கள் கேட்டவை பாணியில் இந்த படத்தையும் விறுவிறு திரைக்கதையில் உருவாக்கியிருந்தாலும் ரஜினிக்கான மாஸ்க்கு ஏற்ப காட்சிகள் இடம்பெறாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருந்தது.
ரீமிக்ஸ் ப்யூஷன் பாடல்
கங்கை அமரன், மூ. மேத்தா, வைரமுத்து பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையமைப்பில் பாடல்கள் அந்த காலகட்டத்தில் வரவேற்பை பெற்றாலும், கிளாசிக் பாடல்களாக எதுவும் அமையவில்லை. கண்ணில் எந்த கார் காலம், மலரே மலரே போன்ற பாடல்கள் கவரும் விதமாக அமைந்தன.
பாலுமகேந்திரா பாணியில் இந்த பாடல்களின் மாண்டேஜ் காட்சியமைப்பும் ரசிக்கும் விதமாக இருந்தன.
குறிப்பாக விகே ராமசாமிக்கு டூயட் பாடலாக அவர் நடனமாடி, இளையாராஜா சூப்பர் ஹிட் பாடல்களின் ரீமிக்ஸாக அமைந்த பாடல் காமெடிக்கு உத்திரவாதம் தரும் விதமாக இருக்கும். இளமை இதோ இதோ, பொன்மேனி உருகுதே, ஏ ஆத்தா ஆத்தோரமா, அடியே நில்லுனா நிக்காதடி போன்ற பாடல்களின் ப்யூஷனாக அப்போதே உருவாக்கியிருப்பார்கள்.
பாக்ஸ் ஆபிஸில் சொதப்பல்
சிறந்த ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, ரஜினிக்கான சிம்பிள் லுக் காஸ்ட்யூம் என பல்வேறு ப்ளஸ்கள் இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பை பெறவில்லை. 50 நாள்களுக்கு மேல் ஓடிய போதிலும் ரஜினி ரசிகர்களால் கூட பெரிதாக ரசிக்கப்படவில்லை. இந்த படம் வெளியான ஆண்டில் ரஜினி நடிப்பில் நான் சிவப்பு மனிதன், படிக்காதவன் படங்கள் ஹிட்டாகின.
அதே போல் ஸ்ரீ ராகவேந்திரா, உன் கண்ணில் நீர் வழிந்தால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரஜினி ரசிகர்கள் கூட நினைவில் வைத்துக்கொள்ளாத வகையில் இருக்கும் படமாக இருந்தாலும், அவரது ஸ்டைலிஷ் நடிப்புக்காக பார்த்து ரசிக்ககூடிய படமாக இருக்கும் உன் கண்ணில் நீர் வழிந்தால் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்