கமல்ஹாசனின் இசைக்குரு..உலக அளவில் 25 ஆயிரம் இசை கச்சேரி! இந்திய இசையின் உலக அடையாளமாக திகழ்ந்த பாலமுரளிகிருஷ்ணா
கமல்ஹாசனின் இசைக்குரு, உலக அளவில் 25 ஆயிரம் இசை கச்சேரி, இந்திய இசையின் உலக அடையாளமாக திகழ்ந்த பாலமுரளிகிருஷ்ணா 8ஆம் நினைவு நாள் இன்று.
கர்நாடக இசைக்கலைஞர், பாடகர், இசையமைப்பாளர், கேரக்டர் ஆர்டரிஸ்ட் என பன்முகங்களுடன் கலைத்துறையில் பயணித்தவர் பாலமுரளி கிருஷ்ணா. சங்கீத கலாநிதி, தேசிய விருது, பதம்விபூஷண், செவ்வாலியே என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவரது வாழ்க்கையில் ஆந்திராவில் தொடங்கி சென்னையில் முற்று பெற்றது.
இசைப்பயணம்
இசைக்குடும்பத்தில் பிறந்த பால முரளி கிருஷ்ணாவுக்கு இயல்பிலேயே இசை ஆர்வமானது தொற்றிக்கொண்டது. தனது 6 வயதில் முறையாக சங்கீதம் பயின்ற இவர், தனது 8வது வயதிலேயே தியாகராஜர் ஆராதணையை அரகேற்றி இளம் பாடகராக இசை உலகில் தன்னை நிருபித்து காட்டினார். சிறு வயதிலேயே சிறிய வயதிலேயே தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பதினைந்து வயதிலேயே 72 மேளகர்த்தா ராகங்களிலும் தேர்ச்சி பெற்று, ஒவ்வொன்றிலும் கீர்த்தனைகளை இயற்றினார்.
பாடகராக மட்டுமல்லாமல் வயலின், கஞ்சிரா, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் வாசித்த தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய இவர், கர்நாடக இசையில் கோலோச்சி வந்தார். பல்வேறு விதமான பரிசோதனை முயற்சிகளை கர்நாடக சங்கீதத்தில் மேற்கொண்டதில் முன்னோடியாக திகழ்ந்தார்.
ராகங்கள் உருவாக்கம்
கர்நாடக இசையில் பல்வேறு ராகங்களை உருவாக்கிய பெருமை இவரை சேரும். கணபதி, லவாங்கி, மஹாதி, மோகன காந்தி, சுஷாமா போன்ற பல்வேறு ராகங்கள் இவர் உருவாக்கியவ தான். மொத்தம் 400க்கும் மேற்ப்பட்ட இசைகளை கம்போஸ் செய்திருக்கும் இவர், 72 மேலகர்தா ராகங்களில் கம்போஸ் செய்த வெகு சிலரில் ஒருவராக திகழ்கிறார்.
சினிமா பயணம்
கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல் சினிமாவிலும் தனது இசை ராஜ்ஜியத்தை நிகழ்த்திய இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். பக்த பிரகலதா, நாரதா உள்பட சில படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் இசைக்குரு
உலகநாயகன் கமல்ஹாசனின் இசைக்குருவாக திகழ்ந்த பாலமுரளி கிருஷ்ணா, முறையாக கர்நாடக சங்கீதத்தை பயிற்றுவித்தவராக உள்ளார். தமிழில் இவர் கடைசியாக பசங்க படத்தில் இடம்பிடித்த அன்பாலே அழகாகும் வீடு என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலுக்காக தேசிய விருதையும் வென்றார்.
90ஸ்களில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருக்கும் இந்தியா என்பதை குறிக்கும் விதமாக MIle Sur Mera Tumhara என்று தொடங்கும் பாடலில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக வரும் பாடல் வரிகளை பாடிய பெருமைக்கு உரியவர் பாலமுரளி கிருஷ்ணா.
அவர், "இசைதான் நம் இருவரின் ஸ்வரமும்" என்ற வரிகளை பாடியிருப்பார். இவருடன் இந்த பாடலில் தோன்றும் மற்றொரு தமிழ் பிரபலமாக உலகநாயகன் கமல்ஹாசன், புன்னகை அரசி கே.ஆர். விஜயா ஆகியோர் இருப்பார்கள்.
உலக அளவில் 25 ஆயிரம் இசை நிகழ்ச்சிகள், அமெரிக்கா, கனடா, யுகே, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா என ஏராளமான நாடுகளில் கச்சேரிகள் என உலகம் முழுவதும் போற்றப்படும் இந்திய இசைக்கலைஞனாக திகழ்ந்து வந்த பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் அவரது வீட்டில் தூங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்திய இசையின் உலக அடையாளமாக இருந்த அவரது உயிர் தூக்கத்திலேயே விண்ணில் கலந்தது. இசை மேதையாக உலக அளவில் புகழ் பெற்ற பாலமுரளி கிருஷ்ணாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
டாபிக்ஸ்