கர்நாடக சங்கீதம், கரகாட்டம்... அனைவரையும் கவர்ந்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி!
74வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப் பாதையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரமாண்டமான அணிவகுப்புகள் நடந்து வருகின்றன. முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நமது ராணுவத்தின் வலிமையை பறை சாற்றும் வகையில் இருந்தது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
மொத்தம் 23 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன. இதில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது. நாட்டின் கலாசாரம், பொருளாதார முன்னேற்றம், பெண் சக்தி உள்ளிட்ட பல கருப்பொருட்களில் அணிவகுப்பு ஊர்திகள் வந்தன.
மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் சார்பில் 17 ஊர்திகளும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் அணிவகுத்தன.
தமிழ்நாடு, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், லடாக், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் - டையூ, குஜராத், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் 17 ஊர்திகள் கடமைப் பாதையை அலங்கரித்தன.
அனைவரையும் கவர்ந்த தமிழக அரசின் அலங்கார ஊர்தி
தமிழக அரசின் அலங்கார ஊர்தி அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. கரகாட்டமும், கர்நாடக சங்கீதத்தையும் இசைத்தபடி தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி அணிவகுத்தது.
நமது அலங்கார ஊர்தி அணிவகுத்தபோது அங்கிருந்த சில பெண்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்.
முன்னதாக, 74வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளின் சிலிர்க்க வைக்கும் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
டாபிக்ஸ்