Ilaiyaraaja : நான் இன்னும் சாதிக்கவில்லை.. இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது.. இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை - இளையராஜா!
Ilaiyaraaja Speech : கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக, என்னுடைய அம்மா எனக்கு 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். அப்போ இசை என்றால் என்னவென்று தெரியாது, வந்து இத்தனை நாள் ஆனபோதும், இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை.
மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
9 ஆவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் தொடங்கியது. இந்த மாநாடு இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஒருவாரம் நடைபெற உள்ள இந்த மாநாடு வரும் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஐ.ஐ.டி. மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்" துவங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை
இதில் பேசிய இளையராஜா இது ஒரு முக்கியமான நாள் என்னுடைய வாழ்க்கையில, ஒரு சின்ன பையன், அது நான் தான். கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக, என்னுடைய அம்மா எனக்கு 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். அப்போ இசை என்றால் என்னவென்று தெரியாது, வந்து இத்தனை நாள் ஆனபோதும், இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை.
இப்படி இசையை தேடி வந்த நான் இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் இன்னும் சாதிக்கவில்லை. என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுக்க ஆட்கள் இல்லை. தேடிக்கொண்டே இருந்தேன். ஒருவனுக்கு தண்ணி கொடுக்காத தாகத்தை உண்டு பண்ணு அப்போது தான் அவன் தண்ணியை தேடி கண்டு பிடிப்பான்.
எந்த வேலை செய்தாலும், அதில் கவனமா தாகத்தோடு செய்தால், அதில் சாதித்துவிடலாம். அனைவரும் நான் சாதித்துவிட்டேன், சாதித்துவிட்டேன் என்கிறார்கள். ஆனால், நான் கிராமத்தில் இருந்து எப்படி கிளப்பினேனோ அப்படியேத்தான் இருப்பதாக உணருகிறேன்.
மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது. யாராவது நன்றாக இசையப்பதாக கூறினால் நான்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வது போல் உள்ளது," என்று தெரிவித்தார் ”என தெரிவித்தார்.
நான் இதில் கவனம் செலுத்துவதில்லை
இசைஞானி இளையராஜா புதிதாக சிம்பொனி ஒன்றை உருவாக்கியுள்ளார். இது பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இசைஞானி பகிர்ந்திருக்கும் வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "என்னைப் பற்றி எதோ ஒரு வகையில் வீடியோக்கள் வருவதாக வேண்டியவர்கள் சொல்வார்கள். நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.
என்னுடைய வேலையை கவனிப்பது மட்டுமே என் வேலை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமா போயிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த ஒரு மாத காலத்தில் சிம்பொனியே எழுதி முடித்துவிட்டேன்.
இது எனக்கு சந்தோஷமான செய்தி
சினிமா படங்களுக்கு இசையமைப்பது, இடையில் விழாக்களுக்கு சென்று தலைகாட்டுவது என இருந்தாலும் ஒரு சிம்பொனியை 35 நாள்களில், முழுவதுமாக நான்கு மூவ்மெண்ட்கள் உள்ள சிம்பொனியை எழுதி விட்டேன் என்கிற செய்தியை சொல்லி கொள்கிறேன். ஏனென்றால் இது எனக்கு சந்தோஷமான செய்தி.
சினிமா இசை வேறு, பின்னணி இசை வேறு. இவை எல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி இசை கிடையாது. ப்யூர் சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்கிற உற்சாக செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்