100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை
Rosaappo Ravikkai Kaari: சரியான கதையை 100வது படமாக தேர்வு செய்து, அதில் சிறப்பான பங்களிப்பை அளித்து பாராட்டையும் பெற்றார் சிவகுமார். அவரது சினிமா கேரியரில் முக்கிய படமாக இருக்கும் ரோசாப்பூ ரவிக்கைகாரி படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.

தமிழ் சினிமாவில் 1970, 80களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் சிவகுமாரின் 100வது படம் என்ற சிறப்பை பெற்ற ரோசாப்பூ ரவிக்கைகாரி ( Rosaappo Ravikkai Kaari) படம், சிவகுமாரின் எதார்த்தமான நடிப்புக்காக ரசிகர்களை கவர்ந்ததுடன், கமர்ஷியல் ஹிட்டாகவும் அமைந்தது. இந்தப் படத்தில் செம்பட்டை என்ற அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிவக்குமாருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான பரசங்கட கெண்டதிம்மா என்ற படத்தின் ரீமேக்காக ரோசாப்பூ ரவிக்கைகாரி உருவானது. இந்தப் படம் மூலம் மறைந்த இயக்குநர், நடிகர் விஜயகிருஷ்ண ராஜா திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானதுடன், படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்தார்.
வினுசக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சிவகுமார் நடிப்பதாக இருந்த நிலையில், திடீர் மாற்றமாக இந்தப் படத்தில் நடித்தார். படமும் சூப்பர் ஹிட்டானதுடன் அவருக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது. வினுசக்கரவர்த்தியும் இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். படத்தை இரட்டை இயக்குநர்களான தேவராஜ் - மோகன் இயக்கியிருப்பார்கள்.