நடிகர் சூர்யா மீதான அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது! இயக்குனர் சீனு ராமசாமி கருத்து!
நடிகர் சூர்யா குறித்து சமூக வலைதளங்களில் பலர் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதற்கு இயக்குனர் சீனுராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி உட்பட பலர் நடித்து கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
ஏமாற்றம் அளித்த கங்குவா
கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 14.9 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் படம் வெளியான 4ம் நாளான நேற்று முதல் நாள் வசூலில் பாதி கூட இல்லாமல் வெறும் 6.22 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 4 நாட்களில் மொத்தமாக படம் 31.75 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்திருந்தது.
அதேபோல இந்திய அளவில் படம் வெளியான 4 நாட்களில் மொத்தம் 54.18 கோடி ரூபாயும் உலக அளவில் படம் 70 கோடி ரூபாயும் வசூலித்ததாகத் தெரிகிறது. படத்தின் கதை ரீதியாகவும், திரைக்கதை ரீதியாகவும் பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் அவதூறு
கங்குவா படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் என அனைவரும் படம் குறித்து அதிகப்படியாக புகழ்ந்து பேசி இருந்தனர். இதன் காரணமாகவே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ய வில்லை. இதன் காரணமாக சமூக வலை தளங்களில் படக்குழுவினரை மிகவும் மோசமாக நெட்டிசன்கள் கலாயத்து வந்தனர். மேலும் ஜோதிகா ராட்சசி படம் வெளியான சமயத்தில் கோவில்களுக்கு செலவு செயவதை போல அரசு பள்ளிகளுக்கும் செலவு செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
அந்த சமயத்திலேயே அவர் மீது அவதூறு பரப்பப்பட்டது. தற்போது ஜோதிகா மற்றும் சூர்யா குறித்து மிகவும் மோசமான பதிவுகளை சமூக வலைத் தளங்களில் போட்டு வருகின்றனர். மேலும் சிலர் சூர்யா அதிமுக அரசை விமர்சனம் செய்தார். ஆனால் தற்போது திமுக அரசு குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர். படத்தை விமர்சனம் செய்யாமல் சூர்யாவின் தனிப்பட்ட குடும்பத்தை அவதூறாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
சீனு ராமசாமி வருத்தம்
இந்த அவதூறுகள் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், "திரைப்பட விமர்சனம் செய்வது அவரவர் சுதந்திரம்,
கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் திரு சூர்யா சிவகுமார் போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது." எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்