HBD Arvind Swamy:விபத்து தந்த ரணம்.. முறிவு தந்த வலி.. விடாமுயற்சியில் கம்பேக் கொடுத்த அரவிந்த் சாமி: பிறந்தநாள் பகிர்வு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Arvind Swamy:விபத்து தந்த ரணம்.. முறிவு தந்த வலி.. விடாமுயற்சியில் கம்பேக் கொடுத்த அரவிந்த் சாமி: பிறந்தநாள் பகிர்வு

HBD Arvind Swamy:விபத்து தந்த ரணம்.. முறிவு தந்த வலி.. விடாமுயற்சியில் கம்பேக் கொடுத்த அரவிந்த் சாமி: பிறந்தநாள் பகிர்வு

Marimuthu M HT Tamil
Jun 18, 2024 10:41 AM IST

HBD Arvind Swamy: விபத்து தந்த ரணம் மற்றும் முறிவு தந்த வலி ஆகியவற்றை தாங்கி, விடாமுயற்சியில் கம்பேக் கொடுத்த நடிகர் அரவிந்த் சாமியின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை..

HBD Arvind Swamy:விபத்து தந்த ரணம்.. முறிவு தந்த வலி.. விடாமுயற்சியில் கம்பேக் கொடுத்த அரவிந்த் சாமி: பிறந்தநாள் பகிர்வு
HBD Arvind Swamy:விபத்து தந்த ரணம்.. முறிவு தந்த வலி.. விடாமுயற்சியில் கம்பேக் கொடுத்த அரவிந்த் சாமி: பிறந்தநாள் பகிர்வு

இயக்குநர் மணிரத்னத்தின் ’தளபதி’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் அரவிந்த் சாமி, திரைவாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தொடர்ந்து பயணித்து வருகின்றார். இன்றுடன், தனது 54ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் அரவிந்த் சாமி பற்றி பகிர்ந்துகொள்ள நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த நடிகர் அரவிந்த் சாமி?: 

நடிகர் அரவிந்த் சாமி 1970ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது பயோலஜிக்கல் தந்தை ’மெட்டி ஒலி’ சீரியல் புகழ் நடிகர் டெல்லி குமார் ஆவார். அரவிந்த் சாமி பிறந்ததும் எஃகு ஏற்றுமதி தொழிலில் முன்னோடியாக இருந்த பிரபல தொழிலதிபர் வி.டி. சுவாமி எனப்படும் வெங்கடர்ம சுமாமி மற்றும் பரதநாட்டியக் கலைஞர் வசந்தா தம்பதியினருக்குத் தத்து கொடுக்கப்பட்டார்.

பின், தனது பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள சிஷ்யா, டான் பாஸ்கோ, பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் படித்து முடித்தார். 1987ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபின், சென்னை லயோலோ கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து முடித்தார்.

படிக்கும்போது தனது சுய செலவுக்காக ‘மாடலிங்’ துறையில் நுழைந்து சிறுசிறு பணிகள் செய்தார், அரவிந்த் சாமி. இளங்கலை படித்துக்கொண்டிருக்கும்போதே, லயோலா நாடக மையத்தில் பங்கெடுத்த அரவிந்த் சாமி, சரியாக நடிப்பு வரவில்லையென்ற காரணத்தினால், ஒரு மேடையில் இருந்து கீழே இறங்க வற்புறுத்தப்பட்டார்.

இப்படி ஒரு அவமானத்தைச் சந்தித்த நடிகர் அரவிந்த் சாமி, திரைத்துறையில் நுழைய பல்வேறு வாய்ப்புகளைத் தேடி அலைந்தார். அப்போது, ஒரு நாள் இயக்குநர் மணிரத்னத்தின் கண்ணில், நடிகர் அரவிந்த் சாமி ‘மாடலிங்’ செய்த விளம்பரம் தட்டுப்பட்டுள்ளது. அதைப் பார்த்து இம்ரஸ் ஆன, மணி ரத்னம், அவரைத் தேடிப் பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து பேசினார். அதன்பின்,இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகிய இருவரும் அடிப்படை நடிப்பு குறித்தும், திரைப்பட உருவாக்கம் குறித்தும் அரவிந்த் சாமிக்கு பயிற்றுவித்து, பின்னர் அவரை நடிகர் ஆக்கினர்.

திரைப்பயணம்: 

தனது முதல் படத்திலேயே மணிரத்னம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டியுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார், நடிகர் அரவிந்த் சாமி. அதன்பின், ‘ரோஜா’, ‘பாம்பே’ ஆகிய மணிரத்னத்தின் படங்களில் அடுத்தடுத்து நடித்தார், அரவிந்த் சாமி. இந்த இரண்டு படங்களும் இந்தியிலும் டப் செய்து வெளியிடப்பட்டதால், பாலிவுட்டிலும் பிரபலமானார்.

அதன்பின், இந்திரா என்னும் தமிழ்ப் படத்திலும், மவுனம் என்னும் தெலுங்கு படத்திலும், தேவராகம் என்னும் மலையாளப் படத்திலும், நடித்தார்.

அதன்பின், ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மின்சாரக் கனவு, புதையல் ஆகியப் படங்களில் நடித்தார். பின் பிரியதர்ஷனின் இயக்கத்தில் முத்து படத்தின் இந்தி வெர்ஷனான ‘சாத் ரங் கி சப்னே’ படத்தில் நடித்திருந்தார். இப்படமும் அங்கு ஹிட்டடித்து, அரவிந்த் சாமியை பாலிவுட்டில் நடிகராக நிலைநிறுத்தியது. அதன்பின்னும், என் சுவாசக் காற்றே, அலைபாயுதே ஆகியப் படங்களிலும், ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா என்னும் இந்திப் படத்திலும் நடித்தார்.

அதன்பின், சினிமாவில் இருந்து ஒதுங்கிய அரவிந்த் சாமி, 2006ஆம் ஆண்டு சாசனம் படத்தில் மட்டும் நடித்தார்.

அதன்பின், 2013ஆம் ஆண்டில் ‘கடல்’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றம் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினாலும், அரவிந்த் சாமிக்கு சரியான தீனி போட்ட படம் என்றால் அது ‘தனி ஒருவன்’ தான். இதில் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரில் வில்லனாக மிரட்டியிருப்பார். அதன்பின், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம், தலைவி, கஸ்டடி போன்ற பல்வேறு படங்களில் தொடர்ச்சியாக நடித்து இருக்கிறார். தற்போது நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து ‘மெய்யழகன்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

துயரங்களில் இருந்து தானே மீண்டு வந்த அரவிந்த் சாமி:

’அலைபாயுதே’ படத்துக்குப் பின், நடிப்பில் இருந்து விலகி, தனது தந்தை வி.டி.சுவாமியின் தொழிலான கட்டுமானத்துறையில் தனது ஆர்வத்தைக் காட்டினார். 

அப்போது, 2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட அரவிந்த் சாமிக்கு, முதுகெலும்பில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டது. பின்,காலில் பக்கவாதம் வந்து செயலிழந்து நான்கைந்து ஆண்டுகள் அவதிப்பட்டார். இதற்கிடையே அவரது முதல் மணவாழ்க்கையும் முறிவுக்கு வந்தது. அதன்பின், தன் மீது கொண்ட நம்பிக்கையின்மூலம், பல்வேறு சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் தன் பழைய நிலைக்கு மீண்டு வந்தார். 

இப்படி பல சிக்கலில் இருக்கும் ஒருவன் மீண்டுவர தேவதூதன் வரமாட்டான்; தான் மட்டும் தான் வரவேண்டும் என பலருக்கு முன் உதாரணமாய் திகழ்ந்த நடிகர் அரவிந்த் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.