அவர் ரஞ்சித் இல்ல செஞ்சித்.. ராசக்கா பாளையம் டூ கவுண்டம் பாளையம் எக்பிரஸின் கதை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அவர் ரஞ்சித் இல்ல செஞ்சித்.. ராசக்கா பாளையம் டூ கவுண்டம் பாளையம் எக்பிரஸின் கதை..

அவர் ரஞ்சித் இல்ல செஞ்சித்.. ராசக்கா பாளையம் டூ கவுண்டம் பாளையம் எக்பிரஸின் கதை..

Malavica Natarajan HT Tamil
Oct 06, 2024 09:14 PM IST

கதாநாயகன், குணச்சித்திர நடிகர், வில்லன், இயக்குநர், அரசியல்வாதி என பல துறைகளில் தனது முத்திரையை பதித்த ரஞ்சித் பிக்பாஸ் சீசன் 8 இல்லத்திற்கு செல்கிறார். இவரின் முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

அவர் ரஞ்சித் இல்ல செஞ்சித்.. ராசக்கா பாளையம் டூ கவுண்டம் பாளையம் எக்பிரஸின் கதை..
அவர் ரஞ்சித் இல்ல செஞ்சித்.. ராசக்கா பாளையம் டூ கவுண்டம் பாளையம் எக்பிரஸின் கதை..

இவர் தன் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதால், பலரின் மனதில் தனது முகத்தை பதியவைத்து, சினிமாவில் தனது எதிர்காலத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்

இந்தப் படத்தில் கிடைத்த பெயரால், இவர் அடுத்தடுத்து சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன் போன்ற படங்களில் நடித்தார். இதில், அவர் துணை கதாநாயகனாகவும் தனது நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தி இருப்பார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் சேரனின் முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மாவில், மாயன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையடுத்து, மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி, தேவையானி நடிப்பில் வெளியான மறுமலர்ச்சி படத்தில் ரஞ்சித் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். இதையடுத்து, இந்தப் படத்தில் நடத்ததன் மூலம் தமிழ்நாடு அரசின் சிறந்த வில்லன் விருதையும் பெற்றுள்ளார்.

இந்த விருதைத் தொடர்ந்து. அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, தமிழ் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாட்பட்டு வரும் பிளாக் பஸ்டர் திரைப்படங்களான நட்புக்காக, பாண்டவர் பூமி திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது.

காதல் திருமணம் கெரியரில் சறுக்கல்!

இதைத் தொடர்ந்து, அவர் நடிகை ப்ரியா ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து ப்ரியா ராமன் ரஞ்சித்தின் படங்களை கவனித்து வந்தார். அத்துடன் 2003ம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் ரஞ்சித். நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு வாழ்வில் எப்படி எல்லாம் சிக்கல் வரும். அவரது குடும்பம் எப்படி சீரழிந்து போகும் என்பதை திரைப்படமாக இயக்கியதுடன் அதில், நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக தேவையானி நடித்திருப்பார். இந்தப் படத்தை ரஞ்சித்தின் மனைவி பிரியா ராம் தயாரித்துள்ளார்.

மலையாளக் கரையோரம் சென்ற ரஞ்சித்

இந்தப் படம் தோல்வியை சந்தித்ததால், ரஞ்சித்தால் தொடர்ந்து படங்களை இயக்கவும் தயாரிக்கவும் முடியவில்லை. இதையடுத்து அவர் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின் தெலுங்கு, தமிழ் என அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். பின் நாடகங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை

பின், அரசியல், சாதி போன்றவற்றில் தனது கவனத்தை மாற்றினார் ரஞ்சித். இவர், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். பின், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பின், அவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக மாறினார். பின், அந்தக் கட்சியிலிருந்து விலகி ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பின் அக்கட்சியிலிருந்தும் விலகி, தற்போது டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் சேர்ந்துள்ளார்.

சாதி பற்றாளர்

இவர், பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியதினாலும் சாதி மறுப்பு திருமணங்கள், பெற்றோர் சம்மதமற்ற காதல் திருமணங்களுக்கு பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்து, பல சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்தார். சுயமரியாதை திருமணங்களை தமிழ்நாட்டில் உடனடியாக நிறுத்த வேண்டும். சமூகநீதி பற்றி பேசினால் கடும் கோபம் ஏற்படும். 

ஒரு திருமணத்திற்கு பெற்றோர் கையெழுத்திட்டால் மட்டுமே அது செல்லுபடியாகும். இல்லையெனில் அது திருமணமே அல்ல எனக் கூறிவந்த ரஞ்சித், தன்னை சாதி வெறியன் எனவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால், அவர் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.

அடுத்த திருமணம்

இதற்கிடையில், தான் காதலித்து திருமணம் செய்த பிரியா ராமனை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்த ரஞ்சித், நடிகை ராகசுதாவை மீண்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை பிரியா ராமனுக்கும் ரஞ்சித்திற்கும் பிறந்த 2 குழந்தைகளையும் பிரியா ரமனே வளர்த்து வருகிறார்.

சீரியல் நடிகர்

மேலும், சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப் பூவே நாடகத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். பின் தற்போது விஜய் டிவியின் டிஆர்பியில் முக்கிய பங்கு வகிக்கும் பாக்கியலட்சுமி தொடரில், துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு நண்பனாக துணை நிற்கும் ஒரு தொழிலதிபராக நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி நாடகத்தில் பழனிசாமி என்ற இவரது கதாப்பாத்திரம் பலரது மனதிற்கும் நெருக்கமாகவே அமைகிறது.

மீண்டும் இயக்குநர் அவதாரம்

இந்த நிலையில் தான், 2003ம் ஆண்டுக்குப் பிறகு, ரஞ்சித் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், சாதிப்பற்று, நாடகக் காதல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி கவுண்டம்பாளையம் எனும் திரைப்படத்தை இயக்கி, நடித்தும் உள்ளார். இதில் வரும் பல காட்சிகள் டபுள் மீனிங் வசனங்களால் நிறைந்துள்ளது. குழந்தை என்ற கதாப்பாத்திரத்தில் அப்பாவியாக தோன்றும் இவர் செய்யும் காரியங்கள் எல்லாம் வேற ரகத்தில் இருக்கும். தன்னை காதலிப்பதாக நடித்து ஏமாற்றும் காதலிக்காக தன் துயரை மறைப்பவராகவும் காதலியை பிறர் கஷ்டப்படுத்தும் போது, கடவுளாகவும் மாறி காப்பாற்றுபவராக வருகிறார் கவுண்டம்பாளையம் குழந்தை. 

கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்திருந்தாலும் தாயை காப்பாற்ற துடிக்கும் வெகுளியான இளைஞனாக நடித்த பசுபதி கேர் ஆஃப் ராசக்காபாளையம் திரைப்படம் இவருக்கு குழந்தைகள் உள்பட அனைத்து ரசிகர்களிடமும் நல்ல அறிமுகத்தை அளித்தது. ஆனால், கவுண்டம்பாளையம் படம் வெளிவந்த நாள் முதல் பல சர்ச்சைகளும், அரசியல் ரீதியான, சாதி ரீதியான பேச்சுகளும், நடவடிக்கைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பட்டம் கொடுத்த இயக்குநர்

அத்துடன் தொடர்ந்து சாதிக் கருத்துகளை பேசி சர்ச்சையை ஏற்படுத்திய ரஞ்சித்தை, ரட்சகன் படத்தின் இயக்குநர் பிரவீன் காந்தி வெகுவாக பாராட்டினார். அவர் இனி ரஞ்சித் அல்ல செஞ்சித் எனக் கூறி, கவுண்டம் பாளையம் படத்தில் சம்பவம் செய்துள்ளார் எனவும் கூறியிருப்பார்.

பிக்பாஸ் எண்ட்ரி!

அப்படி இருக்கையில், செஞ்சித் தற்போது பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் இன்று செல்ல உள்ளார். அவர், அங்குள்ள மற்ற போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்வார்? அங்கேயும் தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் கையிலெடுப்பாரா? அல்லது நிலைப்பாட்டை மாற்றுவா? சமூகநீதி பேசினால் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

பிக்பாஸ் இந்த முறை ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..

Whats_app_banner