19 வயதில் சினிமாவில் அறிமுகம்.. என்னவளே முதல் தி கோட் வரை.. சிரிப்பால் நம்மை சிறைவைத்த சினேகாவின் கதை!
19 வயதில் சினிமாவில் அறிமுகம்.. என்னவளே முதல் தி கோட் வரை.. சிரிப்பால் நம்மை சிறைவைத்த சினேகாவின் கதையை அவரது பிறந்த நாளில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் உடைகளிலும் நடத்தையிலும் ஆபாசம் கலக்காமல், ஒரு ஹோம்லி லுக்கில் புன்னகையுடன் நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் தான், புன்னகை இளவரசி நடிகை சினேகா. அவர் சினிமாவில் சாதித்தது குறித்து பார்ப்போம்.
யார் இந்த சினேகா?:
சினேகா இதே தேதியில் அதாவது அக்டோபர் 12ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவர்.
சினேகாவின் இயற்பெயர் சுபாஷினி ராஜாராம் நாயுடு. சிறுவயதில் அவரது குடும்பம் துபாய்க்குப் புலம் பெயர அங்கேயே அவரது படிப்பும் தொடர்ந்தது. தனது 19 வயதில் மலையாளத்தில் 'இங்கனே ஒரு நிலாப்பக்ஷி’ என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
முன்னதாக இப்படத்தில் 7 கிளாஸிக்கல் பாடல்கள் இருப்பதாகவும், அதற்கு நடனம் தெரிந்தவர்கள் வேண்டும் என்று இப்பட இயக்குநர்கள் அனில் - பாபு ஆகியோர் தேடும்போது, சினேகாவின் நடனத்திறமை பற்றி தெரியவர பின், தனது முதல் படத்தில் கமிட் ஆகியுள்ளார், நடிகை சினேகா.
தமிழ் சினிமாவில் சினேகாவின் அறிமுகம்:
பின் தமிழில் நடிகர் பிரசாந்துடன் இணைந்து ‘விரும்புகிறேன்’ படத்தில் கமிட் ஆனார். ஆனால், இப்படம் சில பிரச்னைகளால் ரிலீஸுக்குத் தாமதமாக, முன்னதாக நடிகர் மாதவனுடன் ஜோடிசேர்ந்து நடித்த ‘என்னவளே’ திரைப்படம் சினேகாவின் முதல் படமாக ரிலீஸ் ஆனது.
20ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நடிகை சினேகா தெலுங்கிலும் தொடர்ச்சியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர், நடிகை சினேகா.
தமிழில் சினேகா பெயர் வாங்கக் காரணம் ஆன சில முத்திரைப் பதித்த படங்கள் குறித்து காண்போம்.
ஆனந்தம்: நடிகர் மம்முட்டி, நடிகர் முரளி, நடிகர் அப்பாஸ் ஆகிய அண்ணன் - தம்பி சகோதரர்கள் பற்றிய கதையில், நடிகர் அப்பாஸின் கேரக்டரான கண்ணன் காதலிக்கும் விஜி கேரக்டரில் நடிகை சினேகா நடித்திருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் சினேகாவுக்கு நல்ல பெயரினை வாங்கித்தந்தது.
ஏப்ரல் மாதத்தில்: ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் கல்லூரியில் படிக்கும் கதிர் என்னும் ஏழை மாணவனை காதலிக்கும் பணக்கார மாணவி சுவேதாவாக நடித்து அசத்தியிருப்பார், நடிகை சினேகா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய நன்மதிப்பை இளைஞர்கள் மத்தியில் அப்போது பெற்றுத்தந்தது.
பின் ’உன்னை நினைத்து’ என்னும் படத்தில் நடித்ததற்காக சிறந்த சப்போர்ட்டிங் நடிகை என்னும் ஃபிலிம் ஃபேர் விருதினைப் பெற்றார்.
வசீகரா மற்றும் பார்த்திபன் கனவில் சினேகாவின் நடிப்பு:
2003ஆம் ஆண்டு இவர் நடிப்பில் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து வெளியான வசீகராவும், நடிகர் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்து வெளியான ’பார்த்திபன் கனவு’ படத்திலும் நடிப்பில் தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றியிருப்பார். குறிப்பாக, ’பார்த்திபன் கனவு’ படத்தில், இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார், நடிகை சினேகா.
வசூல் ராஜா எம்பிபிஎஸ்: நடிகர் உலக நாயகன் கமலுடன் நடிகை சினேகா ஜோடி சேர்ந்து நடித்த படம் தான், வசூல் ராஜா எம்பிபிஎஸ். இப்படத்தில் ’பாப்பு’ என்னும் ஜானகி கேரக்டரில் நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார். இப்படத்தில் ‘காடு திறந்து கிடக்கின்றது’ என்னும் பாடல் இவரது எக்ஸ்பிரசன்களுக்காகப் பார்ப்பவர்களே அதிகம் எனலாம்.
ஆட்டோகிராஃப்: காதல் தோல்வியில் பாதிக்கப்பட்ட இயக்குநர் சேரன் நடித்த கதாப்பாத்திரமான செந்திலை தேற்றி அவனை சாதிக்க வைக்கும் திவ்யா கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார், நடிகை சினேகா.
இப்படி பல்வேறு படங்களில் நடித்து பெயரும் புகழும் பெற்ற நடிகை சினேகா, ’அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்தபோது சக நடிகரான பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு, அவரையே 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவரது அன்பின் சாட்சியாக ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடைசியாக நடிகை சினேகா, தமிழில் நடிகர் தனுஷூடன் இணைந்து ’பட்டாஸ்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படத்திலும் விஜய்யுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்