Anandham: ‘ஆசை ஆசையாய் இருக்கிறதே’ அண்ணன் தம்பி உறவை பேசிய படம்! பல்லாங்குழி பாடலால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த சினேகா!
Anandham : ஆனந்தம் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை சகோதரர்களுக்கு இடையே எந்த விரிசலும் மோதலும் இன்றி நேர்மறையாக பேசிய படம். வீட்டில் மூத்த மகனை தகப்பன் ஸ்தானத்தில் வைத்து இளைய தம்பிகள் கொண்டாடிய இந்த படமும் கதையும் ரசிகர்கள் மனதில் பல்லாங்குழி போல் இத்தனை ஆண்டுகள் கடந்தும் நிறைந்து கிடக்கின்றது.

Anandham Movie: "ஆனந்தம் " திரைப்படம் வெளியாகி இன்று 23 ஆண்டுகள் கடந்தும் ஆனந்தம் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத குடும்பப் படமாக உள்ளது. பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான முதல் அறிமுகப்படம் இது. நான்கு சகோதரர்களை மையப்படுத்தி அவர்களுக்குள்ளான வாழ்வை மையமாகக் கொண்டு நமது குடும்பங்களுக்கு நெருக்கமாக கதை சொல்லி வெற்றி பெற்ற படம்.
திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரித்தார். ஆர்தர் ஏ. வில்சன் செய்திருக்கும் ஒளிப்பதிவு நம்மை அறியாமல் கிராமத்துக்குள் அழைத்துச் செல்லும். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை இன்றும் கேட்க இதமாக இருக்கும். லிங்குசாமி கதைக்கு பிருந்தா சாரதி அழுத்தமாக வசனம் எழுதி இருக்கிறார்.
ஆனந்தம் படத்தின் கதை
கிராமத்தில் வாழும் டெல்லி கணேஷ் ஸ்ரீவித்யா தம்பதிக்கு நான்கு மகன்கள். மம்முட்டி மூத்த மகன் திருப்பதியாகவும், முரளி இரண்டாம் மகன் மாதவனாகவும், அப்பாஸ் கண்ணனாகவும், ஷியாம் கணேஷ் சூர்யாவாகவும், இளைய தம்பிகளாகவும் தேவயானி, ரம்பா, சினேகா ஆகியோர் முதல் மூவரின் ஜோடிகள் ஆகவும் நடித்துள்ளனர்.