குக்கூவில் கோடையிலே மழை போல தந்த அறிமுகம்.. யாரு இவன் யாரு இவனில் கிடைத்த ஹைப்.. வைக்கம் விஜயலட்சுமி ஜெயித்த கதை
Vaikom Vijayalakshmi: குக்கூவில் கோடையிலே மழை போல தந்த அறிமுகம்.. யாரு இவன் யாரு இவனில் கிடைத்த ஹைப்.. வைக்கம் விஜயலட்சுமி ஜெயித்த கதை
Vaikom Vijayalakshmi: தமிழ் சினிமாவில் சிலரது குரல் தனித்துவமாகவும் மிகவும் கம்பீரமாகவும் மண்மணம் மாறாதவகையிலும் இருக்கும். அப்படி வேல்முருகன், அந்தோணிதாசன் வரிசையில் வைக்கம் விஜயலட்சுமி எப்போதும் நினைவில் இருப்பார்.
யார் இந்த வைக்கம் விஜயலட்சுமி?:
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரில் இதே தேதியில் அதாவது அக்டோபர் 7 1981ஆம் ஆண்டு பிறந்தவர், விஜயலட்சுமி. மலையாளத்தில் ’செல்லுலாய்டு’ என்னும் படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆனார்.
தமிழில் சந்தோஷ் நாராயணன் இசையில் 'குக்கூ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோடையிலே மழை போல’ என்னும் பாடல் தான் இவரது முதல் தமிழ்ப்பாடலாக அமைந்தது. கொஞ்சம் கே.பி.சுந்தரம்பாள் என்னும் பழம்பெரும் பின்னணிப் பாடகியின் சாயலில் இருக்கும் வைக்கம் விஜயலட்சுமியின் குரல் ‘குக்கூ’ படத்திற்குப் பின் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. பின் ’என்னமோ ஏதோ’என்னும் கெளதம் கார்த்திக் நடித்த படத்தில் டி.இமான் இசையில் ’புதிய உலகை’ என்னும் பாடலைப் பாடினார்.
ரீச் தந்த காக்கமுட்டை பாடல்:
அதே 2014ஆம் ஆண்டு, 'வெள்ளைக்கார துரை' என்னும் படத்தில் ‘காக்கமுட்டை காக்கமுட்டை’ என்னும் குத்துப் பாடலைப் பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இப்படல் பலமுறை பண்பலை வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டு, இவரது குரலும் மக்களிடம் நன்கு ரீச் ஆனது என்றே கூறலாம்.
அதன் பின் 'ரோமியோ ஜூலியட்' என்னும் தமிழ்ப்படத்தில், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்னும் பாடலைப் பாடி, பல இளசுகளுக்குப் பிடித்த குரலாக மாறினார், வைக்கம் விஜயலட்சுமி.
பின், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் பாகுபலி -1ல் இவர் பாடிய ’சிவ சிவாய போற்றியே.. யாரு இவன் யாரு இவன்’ என்னும் பாடல் விஜயலட்சுமிக்கு, பெரிய பிரேக்கினைக் கொடுத்தது. பின், ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் டைட்டில் சாங், ‘தெறி’ படத்தில் ’உன்னாலே என் ஜீவன் வாழுதே’ பாட்டில், சமஸ்கிருத வெர்ஷனை அக்சரம் பிசாகமல் பாடி அசத்தியது என, வைக்கம் விஜயலட்சுமி கலக்கியிருப்பார்.
இதனைத்தொடர்ந்து ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்,’ஆரவல்லி’ என்னும் பாடல், ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பனசுந்தரி நான் தானே’ என்னும் பாடல், இவரது காந்தக்குரலை பலரிடம் கொண்டு சேர்த்தது.
பின்னர், 'கனா' படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’என்னும் பாடல், 'ஜெய்பீம்' படத்தில் ‘மண்ணிலே ஈரமுண்டு’ஆகியப் பாடல்கள் சமீபத்தில் இவரது குரலை சட்டென நினைவுக்கு வரவைக்கும் ஹிட் பாடல்களாகும். மேலும், ஜவான் படத்தில் ஒரு சின்ன தீம் வெர்ஷனும் பாடியிருக்கிறார். இதுதவிர, பல்வேறு மேடைக் கச்சேரிகளிலும் பாடி வருகிறார். மேலும், வைக்கம் விஜயலட்சுமி காயத்ரி வீணை வாசிப்பதில் கில்லாடியாகத் திகழ்கிறார்.
விஜயலட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கை:
இத்தனை பாடல்களில் ரசிகர்களை மகிழ்வித்த வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை அத்தனை ஒளி பரவியதாக இல்லை. ஆம். வைக்கம் விஜயலட்சுமி ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இதனால் இவர் பல்வேறு இடங்களில் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். ஏன் சொந்த வாழ்க்கையிலும் கூட. 2018ல் அனூப் என்பவருடன் விஜயலட்சுமிக்கு திருமணம் நடைபெற்றது. ஊரே விரும்பிய விஜயலட்சுமியின் குரல், அவரது கணவருக்குப் பிடிக்காமல் போய், அவரை நெகட்டிவ் வார்த்தைகளால் எப்போதும் மட்டம்தட்ட, அந்த உறவில் இருந்து 2021ல் துணிந்து வெளியில் வந்து விவாகரத்துப் பெற்றுவிட்டார், வைக்கம் விஜயலட்சுமி. பின் சென்னையில் வசித்து வருகிறார், வைக்கம் விஜயலட்சுமி.
முதலில் தமிழர்களுக்கு வைக்கம் என்றதும் நினைவுக்கு வருவது, தந்தை பெரியார். பின், வைக்கம் விஜயலட்சுமி தான். அந்தளவுக்கு தனது காந்தக்குரலால் உச்சம்தொட்டுவிட்டார், வைக்கம் விஜயலட்சுமி. அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவதில் மகிழ்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.
டாபிக்ஸ்