Sharmila:சூட்டிங்கின் இறுதி நாள்..தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசர்.. நடிகை சர்மிளா பேட்டி
Sharmila:சூட்டிங்கின் இறுதி நாள்..தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசர்.. ஓடிவந்து காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பற்றி நடிகை சர்மிளா பேட்டியளித்துள்ளார்.
Sharmila: சூட்டிங்கின் இறுதி நாளில் தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசரிடம் இருந்து ஆட்டோ டிரைவர்கள் காப்பாற்றியதாக நடிகை சர்மிளா பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளத் திரையுலகில் 2016ஆம் ஆண்டு நடிகைகளுக்கு, பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகப் புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கேரள அரசின் சார்பில் ஹேமா என்ற ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் குழு அமைக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு விசாரணை அறிக்கையைப் பெற்றது, கேரள அரசு. இந்நிலையில் சில ஆண்டுகளாக இதுபற்றிய எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஹேமா விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியாகியிருந்தது.
அதில் கேரளாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர், நடிகைகளுக்கும், துணை நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் முன்னணி நடிகர்களான முகேஷ், இயக்குநர் சித்திக் மற்றும் பலர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. இதைத் தொடர்ந்து நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் முன் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் கேரளாவின் முன்னணி நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் தலைவராக இருந்த மோகன் லால் உள்ளிட்டப் பலர் எந்தவொரு காரணத்தையும் சொல்லாமல், விசாரணைக்குப் பதில் சொல்ல சங்கடப்பட்டு தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதற்கு நடிகை ஊர்வசி உள்ளிட்டப் பலரும் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். இந்நிலையில் பாலியல் தொல்லைப் புகார் தொடர்பாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் விசாரணை செய்து, பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமந்தா, விஷால் உள்ளிட்டப் பலர் குரல் எழுப்பினர்.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை சர்மிளா, தன்னையும் சிலர் சூட்டிங்கின்போது பாலியல் பலாத்காரம் செய்யமுயன்றதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.
புரொடியூசர் என்னை சுற்றி வந்து: நடிகை சர்மிளா!
இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’ காலம் மாறிப்போச்சு என்னும் தமிழ்ப்படத்தின் ரீமேக் மலையாளத்தில் எடுத்தார்கள். அதன்பெயர் அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும். அந்தப் படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் ஒரு பாடல் எடுப்பதற்காக படக்குழு பொள்ளாச்சிக்கு வந்திருந்தது. அந்தப் பாடல் முடிந்து பேக்கப் ஆகும் நாளில், படத்தின் புரொடியூசர் மற்றும் அவரது நண்பர்கள் என்னைப் பாலியல் பலாத்காரம் செய்யமுயற்சித்தனர். படம் முடிந்துபோகப்போகும்போது இயக்குநர்கிட்டேயும், தயாரிப்பாளர்கள்கிட்டேயும் சொல்லிவிட்டுக் கிளம்புறது வழக்கம். அந்த நேரம் சொல்லிட்டுக் கிளம்புறதுக்காக நானும் என்னோட அசிஸ்டென்ட் பெண்களும் போயிருந்தப்போ, எங்களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுக்க முயற்சி பண்ணுனாங்க.
அது பொள்ளாச்சி என்பதால், நான் வெளியே ஓடிப்போய் ஆட்டோ டிரைவர்கிட்ட சொல்லி, என் அப்பாவின் நண்பர்கள் வீட்டுக்கு கூட்டிட்டுப்போகச் சொன்னேன். ஆட்டோ டிரைவர்களே முழுமையாக இறங்கி என்னைக் காப்பாத்துனாங்க. என் அப்பாவின் நண்பர்கள் ஆதிக்கல் ராஜ் எம்.பி, கிருபாகரன் ஆகியோர் அப்போது பொள்ளாச்சியில் இருந்தாங்க. அப்போது எல்லாம் போன் வசதி கிடையாது. பிறகு, எஸ்.டி.டி கால் புக் செய்து அப்பாகிட்ட போனில் பேசி, அதன்பின், அப்பா வந்து ராஜாத்தி அம்மாள்கிட்ட சொல்லி, அதுக்கப்புறம் போலீஸ் வந்து, அவங்களை பிடிச்சு ஜெயிலில் போட்டோம்.
தமிழ்நாட்டில் பிரச்னையில்லை: நடிகை சர்மிளா
இந்த ஹேமா கமிட்டி மாதிரி அப்பவே இருந்திருந்தால் ஈஸியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்னையும் வரவில்லை. தெலுங்கு படத்தில் நடிக்கும்போது படத்தின் தயாரிப்பாளர்களே, இயக்குநர்களைக் கண்டிச்சு, தவறாகப் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.
பல இடங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், எங்க நடிகைகளிலேயே சிலர் இப்போது அட்ஜெட்மென்ட் பண்ணிப்போய் பணம் சம்பாதிச்சால்தான் என்ன தவறு இருக்கு என்று மாற்றுக் கருத்துடன் தான் இருக்கிறார்கள். இப்படி பிரிஞ்சிருக்கும்போது எந்தக்கமிட்டி ஃபார்ம் பண்ணுனாலும் ஒன்னும் செய்யமுடியாது. இந்த மாதிரியான விவகாரங்களில் ஒற்றுமையாக இருந்தால் தான் தீர்வுகிடைக்கும்’’ என்றார்.
நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு யூட்யூப் சேனல்