மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. எல்லாம் நெருக்கமா இருக்கணும்.. மேடையிலேயே கூறிய நடிகை.. என்ன நடந்தது?
தமிழில் ஏன் புதுப் படங்களில் நடிப்பதில்லை, தமிழ் சினிமாவை மறந்துவிட்டீர்களா என ரசிகர்கள் என்னைக் கேட்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி பலராலும் பாராட்டப்பட்ட த்ரில்லர் தொடர் மர்ம தேசம். இந்த தொடரின் இயக்குநர் நாகா தற்போது நடிகை சாய் தன்ஷிகாவை வைத்து ஐந்தாம் வேதம் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். புராணக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கதைக்களத்தில், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி.மகேந்திரன், ராம்ஜி, தேவதர்ஷினி, பொன்வண்ணன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஐந்தாம் வேதம்
கோயில் பூசாரி ஒருவரிடம் பெட்டி ஒன்றை கொடுக்க முற்படும் சாய் தன்ஷிகாவிற்கு நிகழும் பிரச்சனைகளே ஐந்தாம் வேதம் வெப் சீரிஸின் கதை. மர்ம தேசம் தொடரிலே பல தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்ட நாகா, இந்த வெப் தொடரில் ஏஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி உள்ளார்.
அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் இந்த வெப் தொடரின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியான நிலையில், ஐந்தாம் வேதம் வெப் சீரிஸின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
