Actress Parvati Nair: தப்பு தப்பா பேசுறாங்க.. தனியா இருக்க ரொம்ப பயமா இருக்கு.. கதறும் நடிகை
Actress Parvathy Nair: சோசியல் மீடியாவில் தன்னை பற்றி மிகவும் அவதூறான கருத்துகள் பரவி வருகிறது. இதனால், பட வாய்ப்புக்காக தனியாக இருக்கும் தனக்கு மிகுந்த அச்சம் ஏற்படுகிறது என நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்- அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால். இந்தப் படம் நடிகர் அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது போன்று, அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பார்வதி நாயருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இவர் விஜய்யின் கோட் படத்திலும் நடத்தது குறிப்பிடத்தக்கது.
பார்வதி மீது புகார்கள்
முன்னதாக பார்வதி நாயர், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம். என்கிட்ட மோதாதே, நிமிர் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அடையாளத்தைக் கொடுத்தது என்னை அறிந்தால் திரைப்படம் தான். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரும் என்பதால், அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வீடு எடுத்து வசித்து வந்தார்.
ஆனால், சில காலமாக பார்வதி நாயர் மீது தொடர் குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் பரவி வருகிறது. குறிப்பாக, பார்வதி நாயரின் வீட்டில் பணிபுரிந்த நபரை வீட்டில் அடைத்து வைத்து கும்பல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதனால், சோசியல் மீடியாவில் அவர் மீது பல புகார்களும், குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் உள்ளது.
இந்ச நிலையில் தான், அவர் வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பார்வதி வீட்டில் திருட்டு
அந்த அறிக்கையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பெரும் துன்புறுத்தலை அனுபவித்து வருகிறேன். இது எனக்கு மன உளைச்சலை தந்த போதும் ஊடகங்களில் எதையும் வெளிப்படுத்தவில்லை. இவை அனைத்தும் ஒருகட்டத்தில் சரியாகிவிடும் என நான் நினைத்தேன். ஆனால், அது நாளுக்கு நாள் அதிகரிப்பது வேதனையளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க என் வீட்டில் என்ன நடந்தது என்பதை வெளியே தெரிவித்து தான் ஆக வேண்டும்.
அக்டோபர் 2022ல், என் வீட்டிலிருந்து 18 லட்ச ரூபாய் திருடப்பட்டது. நான் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தேன். அப்போது 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர்களில் ஒருவர் தான் சுபாஷ். அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக இருந்தார். அவரே விருப்பப்பட்டு தான் எனது சில போட்டோ ஷூட்கள் மற்றும் வீட்டு வேலைகளில் உதவுவதற்காக என் வீட்டிற்கு வந்தார்.
உதவியாளர் மீது புகார்
நான் அவர் மீது அளித்த புகாரை அறிந்த சுபாஷ், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு கூறினார். நான் மறுத்தால் பதிலடி கொடுப்பேன் என்றும் மிரட்டினார். அப்படிப்பட்ட மிரட்டலுக்கு அடிபணியாமல் என் முடிவில் உறுதியாக இருந்தேன்.
இதையடுத்து, அவர் எனது தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி என்னை மிரட்டினார். நான் இதுகுறித்தும் போலீசில் புகார் அளித்தேன். மேலும், இந்த வழக்கில், நீதிமன்றம், சுபாஷ் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இந்த வழக்கு குறித்து எதுவும் பேசக்கூடாது என அவர்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், தன்னைப் பற்றி, நேரடியாகவே, மறைமுகமாகவோ பேசக்கூடாது என்றும், என் பெயரை இழிவு படுத்தும்படி எந்த வேலைகளிலும் இறங்கக்கூடாது எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது.
தொடரும் புகார்கள்
இருப்பினும் அவர், தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்து வந்துகொண்டிருந்தார். மேலும், தன் மீது சாதியப் பாகுபாடு உள்ளிட்ட புகார்களை அளித்திருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் இந்த புகார்களை வைத்து மிரட்டியதுடன் 1 கோடி ரூபாய் வரை கேட்டு என்னை அச்சுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது என் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொய் குற்றச்சாட்டுகளை அளித்ததுடன் என்னை மிரட்டியும் வருகிறார்.
இதுமட்டுமல்லாமல், சுபாஷ் என்னை பற்றி பல அவதூறான கருத்துகளை யூடியூப் நிகழ்ச்சிகளில் தெரிவித்து வருகிறார். அவர், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார்.
அச்சத்தில் நடிகை
நான் என் வீட்டை விட்டு, சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் தனியாக தங்கி உள்ளேன். இவை அனைத்தையும் அறிந்த சுபாஷ் தனக்கு கொலை மிரட்டலையும் விடுத்துள்ளார். இது என் மனதை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இவரது செயல்களால், என் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எந்தத் தவறும் செய்யாத நான் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதுடன், அச்சத்திலும் உள்ளேன். நான் உண்மையாகத் தான் இருக்கிறேன். சரியான நேரத்தில் மக்களுக்கு உண்மை வெளிவரும். நீதி வெல்லும் என்ற நம்பிக்கை மட்டுமே தற்போது என்னிடம் உள்ளது எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பார்வதி நாயர் தன்னை அவரது வீட்டில் அடைத்து வைத்து, அடித்ததாக சுரேஷ் காவல் நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.