சத்தியமா? சட்டமா? பாசப் பிணைப்பில் சிக்கித் தவித்த ஜோதிகாவின் 50வது படம்.. 3 ஆண்டுகளை நிறைவு செய்த உடன் பிறப்பே..
அண்ணன்- தங்கை பாசப் பிணைப்பை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஒன்று உடன் பிறப்பே.. இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் பாசத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன. அவை, காதலாகவும் இருக்கலாம், நட்பாகவும் இருக்கலாம், குடும்ப உறவுகளாகவும் இருக்கலாம். மனிதன் அடிப்படையில் ஏங்கித் தவிப்பது பாசத்திற்காக மட்டுமே. இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட படங்கள் பல மக்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிடுகிறது.
சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல், சுற்றி வளைத்து கூறினாலோ, உணர்வுபூர்வமான வசனங்களோ காட்சிகளோ இல்லாமல் இருந்தாலோ படம் பார்ப்பவர்களுக்கு சளிப்பைத் தட்டிவிடும். கதைக்கான களம் ஒன்றுதான் என்றாலும், சொல்லும் விதம் மாறுபட்டால் தான் அவை ஒரு பிடிப்பைத் தரும். அப்படி, தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை உறவை மையமாக வைத்து உருவான திரைப்படங்களில் ஒன்று தான் உடன்பிறப்பே.
உடன்பிறப்பே
சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சிஜா ரோஸ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி வெளியான படம் உடன் பிறப்பே. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ஊரே கண் வைக்கும் அண்ணன் தங்கை
நடிகர் சசிகுமாரும் ஜோதிகாவும் இந்தப் படத்தில் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். தாய் தந்தை இல்லாத இவர்களின் பாசத்தைக் கண்டு ஊரே கண் வைக்கிறது. இந்நிலையில் தான் சசிகுமார் தனது தங்கை ஜோதிகாவை, ஆசிரியராக பணிபுரியும் சமுத்திரக்கனிக்கு திருமணம் செய்து வைக்கிறார். அண்ணனை பிரிந்து தங்கையாலும் தங்கையை பிரிந்து அண்ணனாலும் இருக்க முடியாததால், அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
சத்தியமும் சட்டமும்
அடிதடி வன்முறையைக் கையாண்டுவரும் சசிகுமாரின் இந்த குணம் மட்டும் சமுத்திரக்கனிக்கு பிடிக்காமலே இருந்தது. இதை பலமுறை சமுத்திரக்கனி சசிகுமாரிடமும், ஜோதிகாவிடமும் கூறியும் அதில் எந்த மாற்றமும் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. இதற்கிடையில் இவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. சசிகுமாரின் மகன் சமுத்திரக்கனி மேல் மிகுந்த பாசமாகவும், சமுத்திரகனியின் மகன் சசிகுமாரிந் மேல் மிகுந்த பாசமாகவும் உள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறும் தங்கை
இந்த சமயத்தில், சசிகுமாரின் அடிதடி வழியை பின்பற்றி வரும் சமுத்திரக்கனியின் மகன் ஒருநாள் இறந்துவிடுகிறார். இதற்கு சசிகுமார் தான் காரணம் எனக் கூறி சண்டையிட்டு, மனைவி ஜோதிகா மற்றும் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் சமுத்திரக்கனி. இந்த சம்பவத்திற்கு பின் சமுத்திரக்கனி சசிகுமாரிடம் பேசவோ, அவர்கள் வீட்டிற்கு செல்லவோ கூடாதென ஜோதிகாவிடம் சத்தியம் வாங்குகிறார்.
அதனை ஜோதிகாவும் வருடங்கள் பல கடந்தும் கடைபிடிக்கிறார். ஆனால், சசிகுமாரோ தங்கை மேல் கொண்ட பாசத்தில் தவித்து வருகிறார். இந்நிலையில், சசிகுமாரின் மகன் ஜோதிகாவின் மகளை காதலிக்கிறார். முன்பகையை மறந்து இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறாரா இல்லையா என்பதே கதை. இதற்கிடையில், பெண்களை கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் வில்லனை ஜோதிகா எப்படி பலிவாங்குகிறார் அதற்கு சசிகுமார் என்ன செய்கிறார் மீண்டும் குடும்பம் ஒன்றாக இணைந்ததா என்பதை உணர்வுப்பூர்வமாக கூறியிருப்பார் இயக்குநர்.
50வது படத்தில் நிரூபித்த ஜோதிகா
இந்தப் படம் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான 50வது திரைப்படம். இதில் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வண்ணம், ஜோதிகா குறும்பு நிறைந்த தங்கையாகவும், திருமணத்திற்கு பின் கணவன் வார்த்தையை மீறாத குடும்பப் பெண்ணாகவும், பாசத்திற்கு ஏங்கும் தங்கையாகவும், குற்றவாளியை தண்டிக்கும் கோபக்காரியாகவும் பல விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்தப் படத்தில், திருமணமான பல பெண்கள் பிறந்த வீடா புகுந்த வீடா என முடிவெடுக்க முடியாமல் தவித்து வருவதை மிக அழகான காட்சிகளாக கொண்டு வந்திருப்பார்.
கவனத்தை ஈர்த்த வசனங்கள்
எங்கண்ணன் அய்யனார் கையில இருக்கிற அருவா மாதிரி, யாரையும் வெட்டாது, ஆனா வெட்டும்ங்கிற பயம் இருக்கும் என ஜோதிகா பேசும் வசனம் அவரின் அண்ணனை கண்கூட பார்க்க வேண்டும், அவர் மீது எந்த தவறும் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்ற தங்கையின் பாசத்தை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, ஒரு குடும்பத்துல நல்லது கெட்டது நடக்குறதே உறவு முறையைச் சேர்த்துப் பார்க்கத்தான் என பேசும் வசனம், பல குடும்பங்களில் நான் பெரியவனா, நீ பெரியவனா என நடக்கும் ஈகோ சண்டையை நினைவூட்டுகிறது.
வன்முறை என்னைக்குமே தீர்வைக் கொடுக்காது இன்னொரு வன்முறையைத்தான் கொடுக்கும் என்ற வசனம் எல்லாம் பல விஷயங்களை மக்களுக்கு சொல்லாமல் சொல்லிப் போகிறது. படத்தில் சில விஷயங்கள் பல தமிழ் படங்களை நியாபகப்படும் வண்ணம் அமைந்தது படத்திற்கு சறுக்கலைத் தந்துள்ளது. இருப்பினும், படத்தின் கருவும், அதில் வரும் வசனங்களும் தென் மாவட்டத்தை சார்ந்த மக்களை கவர்ந்தது.
தமிழில் அண்ணன்- தங்கை பாசப்பிணைப்பை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
டாபிக்ஸ்