Actor Vijay:''என்னருமை தம்பி, தங்கைகளே.. நல்ல மதிப்பெண்கள்'' - 10ஆம் மாணவர்களுக்கு விஷ் செய்த விஜய்!
Actor Vijay: 10ஆம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துச் சொன்ன தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் எக்ஸ் தளப் பதிவு ட்ரெண்ட் ஆகி வருகிறது
Actor Vijay: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்துகள் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்கு தீனிபோடும் விதமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தனது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது தெளிவாகிறது.
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்னும் உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , தமிழக வெற்றிக் கழகம் என்னும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீப காலமாக, அதனைத் தொடர்ந்து, மார்ச் 11ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம், மத்திய அரசு நிறைவேற்றிய சி.ஏ.ஏ. என்னும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஏற்புடையது அல்ல என முதல் கண்டன அறிக்கையைப் பதிவுசெய்தது. ஆனால், அதில் மத்திய அரசு என்னும் வார்த்தையினைப் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது, கட்சியின் எக்ஸ் தளப் பதிவில், ‘’ தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’என வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வுகள் நாளை மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் 4,107 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 616 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57ஆயிரத்து 525 மாணவர்களும்; 4 லட்சத்து 52ஆயிரத்து 498 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும், தனித்தேர்வர்களாக, 28 ஆயிரத்து 827 பேரும், 235 சிறைவாசிகளும் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
இதனிடையே கட்டாயத் தமிழ் பாடத்தேர்வினை, எழுதுவதற்குப் பதிலாக, சிறுபான்மை மொழித்தேர்வை எழுத விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்