தளபதியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் இடத்திற்கு அடி போடுகிறாரா சிவகார்த்திகேயன்? தீயாய் பரவும் தகவல்!
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ரஜினி காந்த்தின் கூலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
வரவேற்பை பெற்ற அமரன்
இந்தப் படம் வெளியான நாள் முதல் இன்று வரை வசூலிலும் விமர்சன ரீதியாகவும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சாதிப் பெயர் குறிப்பிடவில்லை, மதங்களை தவறாக சித்தரித்தல் போன்ற சில எதிர்ப்புகள் சமீபத்தில் எழுந்தாலும் அப்படத்தின் வசூல் குறையவில்லை. இந்நிலையில், மக்கள் மத்தியில் சிவகார்த்திகேயனின் மவுசு அதிகரித்துள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சமயத்தில், அவர் கூலி படக்குழுவினருடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
விறுவிறுப்பாக தயாராகும் கூலி
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.