ரெட் கார்டு வாங்கி வெளியேறியவர்..காதலியை கரம் பிடித்த பிக் பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துகள்
பிக் பாஸில் ரெட் கார்டு வாங்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி தனது காதலியை கரம் பிடித்துள்ளார். திருமண புகைப்படம் வைரலாகும் நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மற்றொரு பிக் பாஸ் பிரபலமும் சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈரத்த முக்கியமான போட்டியாளர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தமிழில் அருவி, டாடா, வாழ் உள்பட சில படங்களில் இவர் நடித்துள்ளார். இதையடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளான இன்று தனது காதலியை கரம் பிடித்துள்ளார் பிரதீப் ஆண்டனி.
காதலியை கரம் பிடித்த பிரதீப் ஆண்டனி
கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி பிரதீப் ஆண்டனிக்கும், அவரது நீண்ட நாள் காதலி பூஜாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களின் திருமணம் இந்து, கிறிஸ்தவ ஆகிய இரு முறைப்படியும் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
பிக் பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நடிகரும், இயக்குநருமான சுரேஷ் சக்கரவர்த்தி, பிரதீப் ஆண்டனியின் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் பிரதீப் ஆண்டனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இன்று காலை பட்டு வேட்டி சட்டை அணிந்து பிரதீப் ஆண்டனியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அப்போது அவருக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ முறை திருமணம் நடந்துள்ளது. இதில் கோட் சூட் உடன் பிரதீப் ஆண்டனி இருக்கிறார்.
பிக் பாஸில் ரெட் கார்டு
கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனிக்கு தனியாக ரசிகர் கூட்டமே இருந்தது. இதற்கு காரணம் அவர் நிகழ்ச்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும், மற்ற போட்டியாளர்களுக்கு கடினமான போட்டியாளராக திகழ்ந்ததும் தான்.
இருப்பினும், பிக் பாஸ் வீட்டில் இவர் பல சமயங்களில் வெளிப்படுத்திய ஆக்ரோஷத்தை காரணம் காட்டி பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என போர்கொடி தூக்க, ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த செயல் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார் என தகவல்கள் பரவிய நிலையில் அது நடக்கவில்லை. அதேபோல் தற்போது நடந்து வரும் சீசனில் போட்டியாளர்கள் பெயரில் பிரதீப் ஆண்டனி பெயரும் உலா வந்தது. ஆனால் இந்த முறையும் அது வெறும் வதந்தி என்பது நிருபணம் ஆகியுள்ளது.
இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு மாதங்கள் கழித்து தற்போது சத்தமில்லாமல் திருமணத்தை செய்து முடித்துள்ளார். இந்த திருமண நிகழ்வில் பிரதீப் மற்றும் பூஜா ஆகியோர் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
உதவி இயக்குநரை மணந்த மற்றொரு பிக் பாஸ் பிரபலம்
யூடியூப் சேனலின் தொகுப்பாளராக இருந்த விக்ரமன், பிக் பாஸ் 6 சீசனில் போட்டியாளராக பங்கேற்று, ரன்னர் அப் ஆனார். இதையடுத்து இவர் கதை திரைக்கதை வசனம், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ப்ரீத்தி கரிகாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த இரு நாள்களுக்கு முன்னர் இவர்களின் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவர்களின் திருமணமும் இந்து முறைப்படி தாலி கட்டியும், கிறிஸ்துவ முறைப்படி மோதிரமும் மாற்றிக்கொண்டும் நடைபெற்றது. இந்த தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.