Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு.. சட்டப்படி சண்டையிடுவேன்.. தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்பு-actor nivin pauly denies sexual assault complaint against him saying he will fight legally in cinema news - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு.. சட்டப்படி சண்டையிடுவேன்.. தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்பு

Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு.. சட்டப்படி சண்டையிடுவேன்.. தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்பு

Marimuthu M HT Tamil
Sep 04, 2024 12:10 AM IST

Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு எனவும், சட்டப்படி சண்டையிடுவேன் எனவும், தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு.. சட்டப்படி சண்டையிடுவேன்.. தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்பு
Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு.. சட்டப்படி சண்டையிடுவேன்.. தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று, நீதிபதி கே.ஹேமாவின் அறிக்கை கேரளாவில் வெளியானது. அதில் நடிகைகள் பல முன்னணி நடிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை உறுதிசெய்தது.

இந்த அறிக்கை வெளியானதற்குப் பின், பலதரப்பட்ட நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லையை வெளியில் பேசிவருகின்றனர். கேரளாவின் முன்னணி நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ், இயக்குநர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்தன.

இதை விசாரிக்க வேண்டிய கேரளாவின் நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் தலைவர் மோகன் லால், தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பல நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், அம்மா சங்கம் முற்றிலுமாக கலைந்தது. இந்நிலையில் நடிகர் முகேஷ் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

நடிகர் நிவின் பாலி மீது பாலியல் தொல்லை செய்ததாக வழக்குப்பதிவு:

இதற்கிடையே நடிகர் நிவின் பாலி மீது ஒரு பாலியல் தொல்லை புகார் வந்துள்ளது. தன்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்துச்சென்று, நவம்பர் 2023ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவரின் புகாரின்பேரில் எர்ணாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நிவின் பாலி மற்றும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் உட்பட ஆறுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப்பதிவினை கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், ஓனுங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் எல்.ஐ.டி குழு விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் புகார் போலியானது என கேரளாவில் செய்தியாளர்களைச் சந்தித்த நிவின் பாலி விளக்கமளித்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத்தெரிவித்த நடிகர் நிவின் பாலி:

இதுதொடர்பாக நடிகர் நிவின் பாலி அளித்த மறுப்பு பேட்டியில் கூறியதாவது, ''என்னைப் பற்றிய ஒரு செய்தியை நான் பார்த்தேன். அப்படி ஒரு பெண்ணை எனக்குத்தெரியாது. இதுவரை பார்த்ததில்லை. பேசக்கூட இல்லை.

அப்போது இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டாகும். நான் முன்பே சொன்னதுபோல, அந்தப்பெண்ணை முன்பே பார்க்கவோ, பேசவோ இல்லை. இப்படி ஒரு குற்றச்சாட்டை நான் முதன்முறையாக எதிர்கொள்கிறேன். என்னைப் பற்றி ஃபிளாஷ் நியூஸாக டிவியில் வரும்போது, அது என்னைப் பலரீதியாக பாதிப்படையச் செய்கிறது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. நியூஸ் போடுவது தவறில்லை. ஆனால், அதனுடைய அடிப்படை என்ன என்பதை உறுதிப்படுத்திவிட்டு செய்தியாக வெளியிட்டால் நல்லது என்று கருதுகிறேன்.

பிறகு,உங்களை இப்படி அழைத்ததற்குக் காரணம் இந்த விஷயத்தை இப்படியே வைத்திருக்க நினைக்கவில்லை. எனக்கு ஓடி ஒளியவும் அவசியமில்லை. என் தரப்பில் நியாயம் உண்டு. நான் அப்படி ஒரு காரியம் செய்யவில்லை என்று நூறு விழுக்காடு நம்பிக்கை கொண்டு இருப்பதால் தான், ஊடகத்தினரை அழைத்து நான் பேசுகிறேன். எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துவிட்டதாக சொன்னார்கள்.

எஃப்.ஐ.ஆர் என்பது ஒரு சட்ட நடவடிக்கை. எனவே, அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். அப்போது சட்டத்தின் எல்லா வழிகளின்படியும் நான் பயணிக்க வேண்டியிருக்கும். அது எத்தனை நாட்கள் ஆகும் என்று எனக்குத் தெரியாது. இவ்விவகாரத்தில் நான் சட்டப்படி சண்டையிடுவேன். இதற்காக, நான் எந்த எல்லைக்கும் சென்று சட்டப்படி சண்டையிடுவேன். உண்மையைச் சொன்னால், என் கையில் எதுவும் இல்லை.

நான் என்னை நிரூபிக்க எல்லா வழிகளிலும் முயற்சிப்பேன். இப்படி ஒரு போலி குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கினால் எப்படி.. எல்லாரும் வாழவேண்டும் இல்லையா.. நாளை இப்படி ஒரு போலி குற்றச்சாட்டுகள் யாருக்கும் வரலாம்.

இப்படி நிறைய போலி குற்றச்சாட்டுகள் வந்தது நம் மாநிலத்திலுள்ளது. அது அவ்வாறு இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்ட சம்பவங்களும் இங்கு உள்ளன. இனி, இப்படி ஒரு போலி குற்றச்சாட்டுகள் நாளை யாருக்கு எதிராகவும் வரலாம். அவர்களுக்காகவே நான் இப்படி வந்து பேசுகிறேன்’’ என்றார்,நடிகர் நிவின் பாலி.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.