Nivin Pauly: பாலியல் வன்கொடுமை புகார்.. நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு.. என்ன தான் பிரச்னை?
Nivin Pauly: பாலியல் வன்கொடுமை புகார்.. நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு.. என்ன தான் பிரச்னை? என்பது குறித்து பார்க்கலாம்.
Nivin Pauly:நடிகர் நிவின் பாலி, சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பாலியல் தொல்லை செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது கேரளாவின் நெரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் அளித்தப் புகாரின்பேரில், எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கேரள நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழுவினை அமைத்தது, மாநில அரசு.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று, நீதிபதி கே.ஹேமாவின் அறிக்கையினை கேரள அரசு வெளியிட்டது. அந்த அறிக்கை பெண் நடிகர்கள் பாலியல் துன்புறுத்தல் என்ற "மோசமான தீமையை" எதிர்கொள்கின்றனர் என்று கூறியது. மேலும் பல முன்னணி நடிகர்கள் பணியிடத்தில், நடிகைகளையும் திரையுலகப் பெண்களையும் கபளீகரம் செய்ததை உறுதிப்படுத்தியது.
பாலியல் தொல்லை கொடுத்த முன்னணி நடிகர்கள்
இந்த அறிக்கை வெளியானதற்குப் பின், பலதரப்பட்ட நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லையை வெளியில் பேசிவருகின்றனர். கேரளாவின் முன்னணி நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ், இயக்குநர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்தன.
இதை விசாரிக்க வேண்டிய கேரளாவின் நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் தலைவர் மோகன் லால் ராஜினாமா செய்தார். மேலும் பல நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், அம்மா சங்கம் முற்றிலுமாக கலைந்தது.
இந்நிலையில் நடிகர் முகேஷ் முன்ஜாமீன் பெற்று வைத்துள்ளார். அதேபோல் நடிகை சர்மிளா, மோகனன் என்னும் புரொடியூசர் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறினார். அதேபோல் நடிகை ஸ்ரீலேகா மித்ராவும் ரஞ்சித் பாலகிருஷ்ணன் என்பவர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார்.
இந்நிலையில் நடிகர் நிவின் பாலி மீது ஒரு பாலியல் தொல்லை புகார் வந்துள்ளது. தன்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்துச்சென்று, நவம்பர் 2023ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் நிவின் பாலி மற்றும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் உட்பட ஆறுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவினை ஓனுங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் எல்.ஐ.டி குழு விசாரணை நடத்தும்.
ஹேமா கமிட்டியை முன்நின்று நடத்திய பார்வதி திருவோத்து:
இந்த ஹேமா கமிட்டியை முன்னின்று நடத்திய வுமன் இன் சினிமா கலெக்டிவ் (டபிள்யூ.சி.சி) பரப்புரைக் குழுவின் உறுப்பினரான பார்வதி திருவோத்து, "தொழில்துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களை வேலைக்கு அமர்த்தும் ஆண்களால் ஒரு வாய்ப்பைப் பெற்றதற்காக, அவரது பாலில் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது.
இது இனி தனிநபருக்கு இடையிலான புகார் அல்ல. இது பெண்களைத் தொடர்ந்து தோல்வியடையச் செய்யும் ஒரு அமைப்புரீதியான கட்டமைப்பைப் பற்றியது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, பல முன்னணி நடிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் உலுக்குகிறது.
நீ ஒரு திறமையான நடிகை. உங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தால் வேறு வேலை தேடுங்கள் என்று யார் சொன்னாலும் கேட்காதீர்கள்.
இது உங்கள் தொழில், இது மற்றவர்களின் தொழில். பேசுங்கள், அதனால் நடிகைகளுக்கு உரிமையுள்ள இடத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்’’ என்று நடிகை பார்வதி திருவோத்து பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய திரையுலகப் பெண்களுக்கு ஒரு செய்தியை வழங்கினார்.