எல்லாம் பொய்..முன் ஜாமின் கூட வேண்டாம்..நான் வாழும் தியாகி! பாலியல் வழக்கு விசாரணையில் ஜெயசூர்யா விளக்கம்
என் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் எல்லாம் பொய். எனக்கு முன் ஜாமின் கூட வேண்டாம். நான் வாழும் தியாகி என்பதை நம்புகிறேன் என தன் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான நிலையில், மலையாள சினிமாவில் பெண்கள், நடிகைகளுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது.
இதையடுத்து மலையாள நடிகர்களான ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜு ஆகியோர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் மீது கேரளாவில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு விசாரணை குழு முன் ஜெய்சூர்யா விளக்கம்
இந்த வழக்கின் விசாரணை திருவனந்தபுரத்தில் உள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நடைபெற்றது. சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பு ஆஜரான நடிகர் ஜெய்சூர்யா, தன் மீதான பாலியல் வழக்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.