20 Years Of Aayutha Ezhuthu: 3 வெவ்வேறு கதைகள் இணைந்து கல்லூரி மாணவர் அரசியல்வாதியானால் ‘ஆயுத எழுத்து’
20 Years Of Aayutha Ezhuthu: மணி ரத்னம் இயக்கி சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆயுத எழுத்து திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தில் 3 வெவ்வெறு கதைகள் இணைகின்றன.
20 Years Of Aayutha Ezhuthu: 2004ஆம் ஆண்டு, மே 21ஆம் தேதி மணிரத்னம் இயக்கி வெளியான திரைப்படம், ஆயுத எழுத்து. இப்படத்தில் சூர்யா, ஆர்.மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இஷா தியோல், மீரா ஜாஸ்மின்,திரிஷா, ஸ்ரீமன், ஜனகராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் ஒரே நேரத்தில் இந்தி நடிகர்களை வைத்து ‘யுவா’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இசையினை ஏ.ஆர்.ரஹ்மான் செய்துள்ளார். ஒளிப்பதிவினை ரவி.கே.சந்திரன் செய்ய எடிட்டிங்கினை ஸ்ரீகர் பிரசாத் செய்துள்ளார். ஆயுத எழுத்து திரைப்படம் மூன்று பேரின் கதையை ஒரு புள்ளியில் இணைத்த விதத்தில் பலரால் பாராட்டப்பட்டது. வணிக ரீதியாகவும் ஹிட்டானது. ஆயுத எழுத்து திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஆயுத எழுத்து திரைப்படத்தின் கதை என்ன?:
கதையின் தொடக்கத்தில் சென்னையில் பாலத்தின்மேல் பைக்கில் வரும் மைக்கேல் வசந்த்தை இன்பசேகர் என்பவர் சுட, அவர் அருகிலுள்ள நீரோடையில் விழுகிறார். இதை அர்ஜூன் பாலகிருஷ்ணன் பார்க்கிறார். அதைச் செய்தவர், பார்த்தவர், பாதிக்கப்பட்டவர்களின் காட்சியில் கதை தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
சிறுவயதில் அநாதையாக இருக்கும் இன்பசேகருக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் இருந்தார். இவர் மூர்க்கத்தனமாக வளர்வதால், இவரை விட்டு விலகுகிறார், தம்பி குணசேகரன். இதனால் வேறு வழியில்லாமல் பிழைப்பதற்கு ரவுடிசத்தையே தேர்வுசெய்கிறார், இன்பசேகர். பின் சசி என்னும் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அதன்பின், தம்பி குணாவின் உத்தரவின் பேரில் அரசியல்வாதி செல்வநாயகத்தின் அடியாளாக வேலைக்குச் சேர்கிறார், இன்பசேகர்.
மைக்கேல் கல்லூரியில் செல்வாக்குமிக்க மாணவராக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு கல்லூரி தேர்தலிலும் செல்வநாயகம் போன்ற அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதை அவர் வெறுக்கிறார்.
மைக்கேல் தனது பக்கத்துவீட்டுப் பெண்ணான கீதாவை காதலித்து வருகிறார். செல்வநாயகம், மாணவர்கள் தேர்தலில் நிற்கும் செய்தியினை அறிந்து டென்ஷன் ஆகிறார். மைக்கேலைத் தடுத்து நிறுத்த, வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு படிக்க ஸ்காலர்ஷிப் பெற்றுத் தர முயற்சிக்கிறார், செல்வநாயகம். ஆனால், அதற்கு மைக்கேல் மறுப்புத் தெரிவிக்கவே, இன்பசேகரை வைத்து மிரட்டுகிறார். ஆனால், மைக்கேல் விடாப்பிடியாக அரசியலில் நுழைவதில் உறுதியாக இருக்கிறார்.
அர்ஜூன் பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அலுவலரின் மகன். அமெரிக்க செல்லத்துடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துக்கு அடிமையான நவநாகரிக இளைஞர். அர்ஜூன் மீரா என்னும் பெண்ணைப் பார்த்து வியந்து அவரைப் பின் தொடர்கிறார். மீராவிடம் புரோபோஸ் செய்யச் சொல்லும்போது மைக்கேல், இன்பாவால் சுடப்பட்டதை நேரில் பார்க்கிறார். பின் காயமடைந்த மைக்கேலை அர்ஜூனும் மீராவும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதிக்கின்றனர்.
மைக்கேலை காப்பாற்றிய அர்ஜூன் பாலகிருஷ்ணனை, இன்பசேகர் அடித்து கையை உடைத்து விடுகிறார். அப்போது அர்ஜூன் மனம்மாறி, மைக்கேலின் ஆதரவாளராக மாறுகிறார். மைக்கேல் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தம்பி குணாவைக் கொன்று, செல்வநாயகத்தின் கட்டளைகளை நேரடியாகப் பெறுகிறார், இன்பசேகர். செல்வநாயகம், மைக்கேலுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் அர்ஜூன் பாலகிருஷ்ணன், சுசி மற்றும் திரிலோக் ஆகியோரை கடத்த இன்பசேகருக்கு உத்தரவிடுகிறார். ரவுடியிச வாழ்க்கை நமது தனிப்பட்ட வாழ்க்கையை அழிக்கிறது என்பதை சசி, தனது கணவர் இன்பசேகரிடம் புரியவைக்க முயற்சிக்கிறார். இருக்கும் ஊரைவிட்டு போய்விடுவோம் என்கிறார். ஆனால், மனைவி சசியின் பேச்சைக் கேட்காத இன்பசேகர், அவளைக் கொன்றுவிடுகிறார். அதற்குக் காரணம், அர்ஜூனை சசி தப்பிக்க வைத்தது என்பது பின்னர் தெரிகிறது.
தப்பித்து ஓடும் அர்ஜூனை, இன்பசேகர் பிடித்து தாக்க, மைக்கேல் சரியான நேரத்தில் வந்து உதவுகிறார். மூன்று பேர் மோதிக்கொள்கின்றனர். இறுதியில் இன்பசேகரிடம் இருந்து அர்ஜூனை காப்பாற்றி, இன்பசேகரை காவல்துறையில் ஒப்படைக்கிறார், மைக்கேல். இறுதியில் நடந்த தேர்தலில் வென்று மைக்கேல், அர்ஜூன், சுசி, திரிலோக் ஆகியோர் எம்.எல்.ஏக்கள் ஆகின்றனர்.
ஆயுத எழுத்து படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் மைக்கேல் வசந்த் ஆக சூர்யாவும், இன்பசேகராக மாதவனும், அர்ஜூன் பாலகிருஷ்ணனாக சித்தார்த்தும் நடித்துள்ளார்கள். கீதா என்கிற கீதாஞ்சலியாக ஈஷா தியோலும், சசியாக மீரா ஜாஸ்மினும், மீராவாக திரிஷாவும் நடித்துள்ளனர். அதேபோல், செல்வநாயகமாக பாரதிராஜாவும், குணசேகரனாக பிரவீனும், சுசியாக சுசித்ராவும், திரிலோக் ஆக ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் திரைக்கதை பல இளம் இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் செம ஹிட். தெலுங்கில் இப்படம் யுவா என டப் செய்து வெளியானது. படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சூப்பர் ஹிட்டானது.
இப்படத்தை இப்போது டிவியில் போட்டாலும், விறுவிறுப்பாக இருக்கும். இப்படம் ஹைதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழக மாணவரான ஜார்ஜ் ரெட்டியின் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
டாபிக்ஸ்