Box Office: இதுவரைக்கும் தேறியது இதுதான்! என்ன சொல்கிறது பாக்ஸ் ஆபிஸ்... கலெக்ஷன் நிலவரம் இதுதான்
Box Office: 2024ம் ஆண்டில் இதுவரை வெளியான 160 தமிழ் படங்களில் சில படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாறிவரும் காலத்திற்கேற்க மக்கள் தங்கள் டெக்னாலஜியையும், ரசனையையும் மாற்றி வந்தாலும், திரைப்படங்கள் மீதான அவர்களின் ஈர்ப்பு இன்றளவும் குறையாததாகவே இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாகவே பல ஹீரோக்களின் படங்கள் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
மக்கள் எவ்வளவு தான் வெப் சீரிஸ், ஓடிடி தளங்கள் என சென்றாலும், தியேட்டருக்கு செல்லும் பழக்கமும் இன்னும் மாறவில்லை. இதனால், இயக்குநர்கள், தங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படங்களை இயக்கி வருகின்றனர். பெரிய ஹீரோக்களை வைத்து அதிக பட்ஜெட்டில் மாஸான படங்கள் வெளியாகும்.
அதேவேளையில் சிறிய பட்ஜெட்டை வைத்து பல கருத்துள்ள படங்களை எடுத்து அதனை ஜனரஞ்சகமாக மக்களிடம் கொண்டு சேர்த்தும் வருகின்றனர். இதனால், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் தங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை குறையாமல் இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படமும் தியேட்டரில் எவ்வளவு வசூலைக் குவிக்கிறதோ அதுதான் அந்தப் படத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கிறது.
தமிழ் படங்கள்
அந்த வகையில் நாம் தற்போது 2024ம் ஆண்டில் 9 மாதங்களை நிறைவு செய்ய உள்ளோம். இந்த 9 மாதத்தில் தமிழ் சினிமாவில் 160 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களிலும் புதிய திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
குறிப்பாக திபாவளி, ஆயுத பூஜை, கிருத்துமஸ் போன்ற விடுமுறை நாட்களை குறிவைத்து பல படங்கள் தங்களின் ரிலீஸை திட்டமிட்டு வருகின்றன.
இதுவரை வந்த படங்களிலேயே நடிகர் விஜய்- இயக்குநர் வெங்கட் பிரபு நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது. மீதமுள்ள திரைப்படங்கள் சில 100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தாலும் அவை படத்தின் பட்ஜெட்டை பார்க்கும் பொழுது மிக குறைவான தொகையாகவே உள்ளது. பெரும் நடிகர்கள், பெரும் இயக்குநர்களின் படங்கள் சில வெளிவரும் முன் கொடுத்த எதிர்பார்ப்புகளை சரியாக படத்தில் பூர்த்தி செய்யவில்லை. இதனால், பெரிய ஹீரோக்களின் படங்கள் சில வெளியான சுவடே தெரியாமல் காணாமல் போனது.
காணாமல் போன தமிழ் படங்கள்
அந்தவகையில், 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் 154 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்தபடியாக விக்ரம் நடிப்பில் 140 கோடி பட்ஜெட்டில் வெளியான தங்கலான் படம் வெறும் 68.8 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. 620 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பல மொழிகளில் வெளியான கல்கி திரைப்படம் தமிழில் வெறும் 44 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்தது.
சாதனை படைத்த சிறிய பட்ஜெட் படங்கள்
அதே சமயம் ரசிகர்களைக் கடந்த சில சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில், 30 கோடி பட்ஜெட்டில் உருவான அருள் நிதியின் டிமாண்டி காலனி 2 திரைப்படம் 49.2 கோடி வசூலித்துள்ளது. 30 கோடியில் உருவான விஜய் சேதுபதியின் மகாராஹா திரைப்படம் 91.25 கோடி வசூலித்தது. 90 கோடி பட்ஜெட்டில் உருவான தனுஷின் ராயன் படம் 151.75 கோடி வசூலித்துள்ளது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான சூரியின் கருடன் திரைப்படம் 45.6 கோடி வசூலித்துள்ளது. 12 கோடி பட்ஜெட்டில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் 24.8 கோடி வசூலித்துள்ளது.
100 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படங்கள்
விஜய்யின் கோட், தனுஷின் ராயன், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே லிஸ்டில் உள்ளது.
இந்த லிஸ்டில் உள்ள பட்ஜெட்டை இதற்கு பின் வெளியாகும் படங்கள் முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், வரும் நாட்களில் ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா போன்ற படங்கள் வெளிவர இருப்பதால் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸின் பிளாக் பஸ்டர் திரைப்படம் எதுவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
டாபிக்ஸ்