Electoral Bonds: ’அடேங்கப்பா…! பணிந்தது SBI வங்கி…!’ தேர்தல் பத்திர விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியது!-sbi bank submits details of election bonds in supreme court - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Electoral Bonds: ’அடேங்கப்பா…! பணிந்தது Sbi வங்கி…!’ தேர்தல் பத்திர விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியது!

Electoral Bonds: ’அடேங்கப்பா…! பணிந்தது SBI வங்கி…!’ தேர்தல் பத்திர விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியது!

Kathiravan V HT Tamil
Mar 12, 2024 06:55 PM IST

“Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றத்திடம் எஸ்பிஐ வங்கி சமர்பித்துள்ளது”

எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி (HT_PRINT)

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி எஸ்பிஐ வங்கி தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் இன்றைய தினம் அதற்கான ஆவணங்களை வங்கி ச்மர்பித்துள்ளது. 

முன்னதாக இந்த விவரங்களை வெளியிட வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை  கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. 

ஆனால் எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்ததுடன், வரும் மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு பெஞ்ச் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் வழக்கின் பின்னணி

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. 

அரசியல் கட்சிகளுக்கு நிதி தர விரும்புவோர் எஸ்பிஐ வங்கி மூலம் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி அளிக்க வேண்டும் என்பது இச்சட்டத்தின் விதியாக இருந்தது. 

இந்த வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை கடந்த மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடிந்து கொண்ட நீதிபதிகள்

தேர்தல் பத்திரங்களை சமர்பிக்க நேரத்தை நீட்டிக்கக் கோரும் எஸ்பி வங்கியின் மனு மீதான விசாரணையின் போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிடம், அதன் உத்தரவுகளுக்கு இணங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் ஏதுவும் இல்லை என தெரிவித்து கடிந்து கொண்டனர்.  

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற எதிர்க்கட்சிகள்!

காலநீட்டிப்பு கோரும் எஸ்பிஐ வங்கியின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நேற்றைய தினமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தன. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்த இடுகையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியவர்கள் யார் என்பதை நாடு விரைவில் அறியும். மோடி அரசின் ஊழல், மோசடிகள் மற்றும் பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்துவதற்கான முதல் படி இதுவாகும்” என கூறி இருந்தார். 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "தேர்தல் பத்திரங்கள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மோசடி என்பதை நிரூபிக்கும். ஊழல் தொழிலதிபர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துவதன் மூலம் நரேந்திர மோடியின் உண்மையான முகத்தை நாட்டின் முன் வெளிப்படுத்தும்" என கூறினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.