தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ap Muruganandam: ’என் மீது வழக்கு போட்டது அநியாயம்!’ அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர் வேதனை!

AP Muruganandam: ’என் மீது வழக்கு போட்டது அநியாயம்!’ அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர் வேதனை!

Kathiravan V HT Tamil
Apr 06, 2024 05:59 PM IST

”இந்த அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படமாட்டேன், வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளேன். நேற்று நடந்த விஷயம் பாதிமட்டுமே உங்களுக்கு தெரியும்”

திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்
திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சி நிர்வாகி முருகானந்தம் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரது வாகனத்தை நேற்றைய தினம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ நேற்றைய தினம் வைரல் ஆனது. 

அதில் “என்னைய மிரட்டுறீங்களா?, என்னைய மிரட்ட சொல்லி திமுகவுல சொன்னாங்களா?. யாராக இருந்தாலும் மரியாதையாக மொதல்ல பேசுங்க? உங்க ஐடி கார்ட்டை காட்டுங்க!, மரியாதையா பேசி பழகோனும், வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலையவச்சுடுவன். ” என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நோக்கி பாஜக வேட்பாளர் முருகானந்தம் கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை மட்டும் மையப்படுத்தி பரப்புரை செய்யவிடாமல் தடுக்க நினைக்கின்றனர். என்னுடைய நேரத்தை விரையமாக்க வேண்டும் என்பதில் அவர்கள் ரொம்ப தெளிவாக உள்ளார்கள். ஆனால் நானும் மக்களை சந்திக்க வேண்டும் என்பதில் ரொம்ப தெளிவாக உள்ளேன். 

இந்த அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படமாட்டேன், வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளேன். நேற்று நடந்த விஷயம் பாதிமட்டுமே உங்களுக்கு தெரியும். பறக்கும் படையில் உள்ளவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். ஏதாவது பிரச்னை இருந்தால் ரிட்டர்னிங் ஆபிசருக்கு வீடியோ தராமல் தொலைக்காட்சி ஒன்றுக்கு வீடியோவை தந்துள்ளனர். மரியாதையாக பேசுங்கள் என்றுதான் நான் அதில் பேசினேன். 

அதற்கு முன்னர் மரியாதை இல்லாமல் அவர்கள் பேசினார்கள். தேர்தல் அலுவலரிடம் என்ன நடந்தது என்பது குறித்து புகார் அளிக்க உள்ளோம். பறக்கும் படை அதிகாரிகளிடம் ஐடி கார்டு கிடையாது. தேர்தல் ஆரம்பித்தது முதல் சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் பாஜக வேட்பாளரை மட்டும் மையப்படுத்தி நகர்த்துவது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. அநியாயத்தின் பக்கம் துணை போகும் அதிகாரிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது மிகைப்படுத்தி வழக்கை போட்டு இருக்கிறார்கள், சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel