தமிழ் செய்திகள்  /  Elections  /  Tamil Nadu Congress Leader Selvaperunthagai Said That The Dmk Has Provided The Constituencies We Asked For

TN Congress: 'நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுகவினர் வழங்கியுள்ளனர்' - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பூரிப்பு

Marimuthu M HT Tamil
Mar 18, 2024 03:05 PM IST

TN Congress Leader Selvaperunthagai: நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுகவினர் வழங்கியுள்ளனர் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

TN Congress Leader Selvaperunthagai: 'நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுகவினர் வழங்கியுள்ளனர்' - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பூரிப்பு
TN Congress Leader Selvaperunthagai: 'நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுகவினர் வழங்கியுள்ளனர்' - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பூரிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் தெளிவாக கையெழுத்தானபின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னையில் அண்ணா அறிவாலயம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, ‘’2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் மற்ற தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, 9.3.2024 அன்று, செய்துகொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்வரும் பத்து தொகுதிகளில் போட்டியிடுவது என இன்று(18.03.2024) தீர்மானிக்கப்பட்டது. அந்த தொகுதிகள் விவரம்:

- திருவள்ளூர்(தனி);

- கடலூர்,

- மயிலாடுதுறை,

- சிவகங்கை,

- திருநெல்வேலி,

- கிருஷ்ணகிரி,

- கரூர்,

- விருதுநகர்,

- கன்னியாகுமரி,

-புதுச்சேரி,

ஏற்கனவே சொன்னோம். பேச்சுவார்த்தையில் இழுபறி என்று சொன்னீர்கள். மிகவும் இனிப்பான செய்தி வரும் என்று சொன்னோம். தமிழ்நாட்டில் கூட்டணியில் பத்து தொகுதிகளை காங்கிரஸ் பேரியக்கம் பெற்றிருக்கிறது. அதேபோல், நாங்கள் கேட்ட தொகுதிகளையும் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த சந்திப்பில், 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் - திராவிடர் முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும் என்ற இனிப்பான செய்தியுடன் நாங்கள் உங்களைச் சந்திப்போம்’’ என்றார்.

அப்போது கடந்த முறை, மக்களவைத்தேர்தலில் திமுக வென்ற கடலூர், மயிலாடுதுறை, நெல்லை தொகுதிகளை தற்போது காங்கிரஸ் வாங்கியுள்ளதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘’எங்களுக்குச் சாதகமான தொகுதிகளைக் கேட்டு பெற்றிருக்கிறோம். அவ்வளவுதான்’’ எனச் சொன்னார்.

மேலும் பேசிய செல்வப் பெருந்தகை, ''வேட்பாளர்களை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அறிவித்துவிடுவோம். காங்கிரஸ் என்பது தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலங்களிலும் பேச்சுவார்த்தைப் பேசி படிப்படியாக தொகுதிப் பங்கீடு போட்டுள்ளது. அந்த வகையில் தான் சற்று தாமதம் ஆகியுள்ளது. தேர்தலில் உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும்’’ என்றார்.

இதனிடையே திமுக போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள்:

- இம்முறை மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நிற்க இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்:

1.தென்சென்னை,

2. மத்திய சென்னை,

3. வடசென்னை,

4. ஸ்ரீபெரும்புதூர்,

5. காஞ்சிபுரம்,

6. வேலூர்,

7. அரக்கோணம்,

8. திருவண்ணாமலை,

9. ஆரணி,

10.கள்ளக்குறிச்சி,

11.தருமபுரி,

12.சேலம்,

13. ஈரோடு,

14. கோவை,

15. தூத்துக்குடி,

16. தென்காசி,

17. தேனி,

18. நீலகிரி,

19. பொள்ளாச்சி,

20.தஞ்சாவூர்,

21. பெரம்பலூர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி, திருச்சி, தேனி ஆகியத் தொகுதிகளை, காங்கிரஸ், திமுகவிற்கு தொகுதிப் பங்கீடின்போது விட்டுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ரூ.500 செலுத்தி, இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். 

அதில், ‘’நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் Rs.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்), கட்டணமாக செலுத்தி விருப்ப மனுப் படிவத்தை இன்று (18.03.2024) திங்கட்கிழமை முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை 20.03.2024 புதன்கிழமை மதியம் 1 மணிக்குள் நாடாளுமன்ற பொதுத் தொகுதிகளுக்கு Rs. 30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்), நாடாளுமன்ற தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் Rs. 15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்), அதேபோல, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு Rs. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்), மகளிருக்கு Rs. 5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) கட்சி நன்கொடையாக TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வங்கி வரைவோலையாக (Demand Draft Payable at Chennai) மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

 விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card), பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்’’என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்